ETV Bharat / state

திமுகவில் 'விட்டமின் - M' இருப்பவர்களுக்கு மட்டுமே அங்கீகாரம்.. அதிமுகவில் இணைந்த சிம்லா முத்துச்சோழன் பேச்சு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 7, 2024, 3:33 PM IST

shimla-muthuchozhan-left-dmk-and-joined-aiadmk-in-presence-of-edappadi-palaniswami
"திமுகவில் 'விட்டமின் - M' இருப்பவர்களுக்கு மட்டுமே அங்கீகாரம் கிடைக்கிறது" - அதிமுகவில் இணைந்த சிம்லா முத்துசோழன் பேச்சு

Shimla Muthuchozhan Join AIADMK: 2016ஆம் ஆண்டு ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலின்போது எனக்கு கொடுத்த வாக்குறுதியை ஸ்டாலின் நிறைவேற்றவில்லை என திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்த சிம்லா முத்துச்சோழன் தெரிவித்துள்ளார்.

சென்னை: மறைந்த திமுக துணை பொதுச் செயலாளர் சற்குண பாண்டியனின் மருமகளும், 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ஆர்.கே.நகர் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிட்டவருமான சிம்லா முத்துச்சோழன், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார்.

1996ஆம் ஆண்டு திமுக ஆட்சியில், கருணாநிதி அமைச்சரவையில் சமூக நலத்துறை அமைச்சராக இருந்தவர் எஸ்.பி.சற்குணபாண்டியன். இவர் திமுக துணைப் பொதுச் செயலாளராகவும் பதவி வகித்தார். சற்குணம் பாண்டியனின் மருமகளான சிம்லா முத்துச்சோழன், கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை பொதுத் தேர்தலில், ஆர்.கே.நகர் தொகுதியில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிட்டார்.

அந்த தேர்தலில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் பெற்றிருந்தார். ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிட்டதால், சிம்லா முத்துச்சோழன் தமிழகம் முழுவதும் பிரபலமானார். இதனையடுத்து, ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மீண்டும் சிம்லா முத்துச்சோழனுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்த்ததாக தகவல் வெளியானது. ஆனால், அவருக்குப் பதில் மருது கணேஷ்-க்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.

கடந்த 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்த சிம்லா முத்துச்சோழனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதனையடுத்து, கட்சிப் பணியிலிருந்து சற்று விலகி இருந்தவர், இன்று சென்னையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார்.

இணைப்பு நிகழ்வின்போது அதிமுக சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா உடனிருந்தார். அதிமுகவில் இணைந்த பின் சிம்லா முத்துச்சோழன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசும்போது, "2002ஆம் ஆண்டு முதல் திமுகவில் இருந்து வருகிறேன். திமுகவில் பல பொறுப்புகள் எனக்கு வழங்கப்பட்டன.

2016ஆம் ஆண்டு எனக்கு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளித்தனர். அதற்கு அடுத்த ஆண்டு நடந்த இடைத் தேர்தலில் போட்டியிட எனக்கு வாய்ப்பு தரவில்லை. அடுத்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தருவதாக திமுக தலைவர் எனக்கு வாக்குறுதி தந்தார். ஆனால், அதை இன்று வரை அவர் நிறைவேற்றவில்லை.

கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுதும் 6 நாள் இருசக்கர வாகனப் பேரணி ஏற்பாடு செய்தேன். ஆனால், என்னை அனுமதிக்கவில்லை. அதே இருசக்கர பேரணியை 3, 4 மாதம் கழித்து இளைஞர் அணிச் செயலாளர் மூலம் செய்தனர். திமுக ஆளுங்கட்சியாக இருப்பதால் மட்டுமே விருப்பமின்றி பலர் பல்லைக் கடித்துக் கொண்டு திமுகவில் உள்ளனர்.

என்னால் இதற்கு மேல் இருக்க முடியாது. அதனால்தான் அதிமுக வந்துவிட்டேன் என தெரிவித்த அவர், கருணாநிதி இருந்தபோது திமுக அரசியல் வேறு மாதிரி இருந்தது. இப்போது, வேறு மாதிரி இருக்கிறது. திமுகவில் 'Vitamin M' இருந்ததால் அங்கீகாரம் தருகின்றனர். எனக்கு வட சென்னை மக்களவைத் தொகுதி வழங்கப்படுமா என்பது குறித்து அதிமுக தலைமை முடிவு செய்யும் என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: நடிகர் அஜித் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதி என தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.