ETV Bharat / state

தமிழகத்தில் பாஜக நோட்டாவை விட மோசமாக உள்ளது - செல்வப்பெருந்தகை பேச்சு..

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 5, 2024, 5:19 PM IST

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை

Selvaperunthagai: வரும் தேர்தலில் போட்டியிட பாஜகவில் ஆளில்லை என்றும் தமிழகத்தில் பாஜக நோட்டாவை விட மோசமாக உள்ளது எனவும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை

திருநெல்வேலி: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் திருநெல்வேலி கிழக்கு மாநகர் மற்றும் தென்காசி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று (மார்ச் 4) செங்குளம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

அப்போது பேசிய அவர்,"தமிழகத்தில் தொன்மையான பொருநை நாகரீகத்தைக் கொண்ட திருநெல்வேலி மாவட்டம், முதன்மையாக இருக்க வேண்டும் என ராகுல் காந்தி விரும்புகிறார். ராகுல் காந்தியின் கரத்தை பலப்படுத்த வேண்டும் என்பதே நமது குறிக்கோளாக இருக்க வேண்டும். மோடி எதற்காக தமிழகத்திற்கு அடிக்கடி வருகிறார்? திருவள்ளுவர் பற்றி பேசுகிறார். திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசுகிறார்.

ஜெயலலிதாவை புகழ்ந்து அதிமுக வாக்கு வங்கியைப் பெற நினைக்கிறார். அதே மேடையில் இருக்கும் ஒருவர் ஜெயலலிதாவை இகழ்ந்து பேசுகிறார். நாட்டில் 15 எய்ம்ஸ் மருத்துவமனைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் மட்டும் எய்ம்ஸ் மருத்துவமனை இன்னும் திறக்கப்படவில்லை. பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு யாருக்கும் பாதுகாப்பு இல்லை. பாஜக ஆட்சியில் பட்டியல் இன மக்கள் மீது வழக்குகள் 44.8% அதிகரித்துள்ளது.

சிறுபான்மை மக்கள் இந்த ஆட்சியில் மகிழ்ச்சியாக வாழவில்லை. சிஐஏ போன்ற சட்டங்களைக் கொண்டு வருவார்கள் என ஒரு அச்சத்தோடு வாழ்கிறார்கள். காங்கிரஸ் இயக்கத்தில் சிறு சிறு தவறு செய்தால் கூட, இந்த இயக்கத்தை வளர்த்தவர்களின் ஆண்மாக்கள் அவர்களை மன்னிக்காது. இந்த தேர்தல் தேசத்தின் இரண்டாம் சுதந்திரப் போர். யார் ஆள வேண்டும் என்பதை தீர்மானிக்கும் தேர்தல் இது.

தமிழகத்தை மோடி ஓரம் கட்டி வஞ்சித்து வருகிறார். தமிழக மக்கள் ஒருபோதும் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ்-ஐ ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். குஜராத் மாநிலம் முந்த்ரா, காண்ட்லா ஆகிய துறைமுகங்கள் வழியாகத் தான் தமிழகத்துக்கு போதை பொருட்கள் வருகின்றன. இதுவரை அங்கிருந்து ஆயிரம் டன் போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. குஜராத்தில் இருந்து கிருஷ்ணா பட்டினம் துறைமுகத்திற்கு வந்து, அங்கிருந்து தமிழகம் வருகிறது.

இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதில் சொல்ல வேண்டும். தமிழக மீனவர்களுக்கு ஒரு நீதி, குஜராத் மீனவர்களுக்கு ஒரு நீதி என பாஜக அரசு செயல்படுகிறது. மீனவர்களை பாதுகாப்போம் என்றார்கள். ஆனால் இன்று தமிழக மீனவர்களின் படகுகள் இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்படுகிறது. பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில், 'மாற்றான் தாய் மனப்போக்கோடு செயல்படுகிறார்கள்'. இது தேசவிரோத செயல்.

பாஜகவில் தேர்தலில் போட்டியிட ஆளில்லை. சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஸ் வர்தன் உள்ளிட்ட சிலர் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்ட பிறகு, தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என விலகி விட்டார்கள். திமுகவுடன் கூட்டணி பேச்சு வார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை வரை எங்கள் பலம் எவ்வளவு என்று எங்களுக்குத் தெரியும். அதன் அடிப்படையில் தொகுதிகள் ஒதுக்கப்படும்.

இனிப்பான செய்தி இன்னும் இரண்டு நாட்களில் கிடைக்கும். தமிழகத்தில் பாஜக நோட்டாவை விட மோசமாக உள்ளது. முன்னதாக, நாடாளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தி தமிழகத்தில் போட்டியிட வேண்டும் என்றும் திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதியை திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு ஒதுக்க வேண்டும் என்பது உட்பட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

இதையும் படிங்க: "நீங்கள் நலமா?" புதிய திட்டத்தை அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.