ETV Bharat / state

"பாஜக மிகப்பெரிய தோல்வி பயத்தில் உள்ளது" - செல்வப்பெருந்தகை கருத்து! - LOk sabha election 2024

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 24, 2024, 3:51 PM IST

Selvaperunthagai
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை செய்தியாளர் சந்திப்பு

Selvaperunthagai: கேரள மாநிலம் வயநாட்டில் ஐந்தரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி வெற்றி பெறுவார் எனவும், மிகப்பெரிய தோல்வி பயத்தில் பாஜக உள்ளது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை செய்தியாளர் சந்திப்பு

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், "கேரள மாநிலம், வயநாட்டில் தேர்தல் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு சென்னை வந்துள்ளோம்.

கடந்த முறை வயநாடு தொகுதியில் 4 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று ராகுல் காந்தி வெற்றி பெற்றார். இம்முறை ஐந்தரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். பாசிச சக்திகளை ஒழிக்க வயநாட்டிலிருந்து ஒரு தீப்பொறி கிளம்பி இருக்கிறது.

தோல்வி அச்சத்தில், பிரதமர் என்கிற தகுதியை மீறி மிகவும் கீழ்த்தரமாக மக்கள் ஏற்றுக்கொள்ளாத வகையில் பாசிசவாதியாக தனது கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. காந்தி இந்திய நாட்டிற்குச் சுதந்திரம் பெற்றுத் தந்தபோது, இந்த மண்ணில் பிறக்கும் அனைவருக்கும் சம உரிமை இருக்கிறது. எல்லோரும் இந்த நாட்டின் பிரஜைகள் எனக் கூறினார்.

ஆனால், பிரதமர் மோடி மக்களைப் பிரித்தாலும் கொள்கையில் இறங்கியுள்ளார். நாங்கள் கூட இந்துதான். ஆனால், அவர் கூறுவதை ரசிக்கவில்லை, எதிர்க்கிறோம். இப்படிப்பட்ட பாசிச சக்திகளை நாம் புறந்தள்ள வேண்டும் என தேசத்தின் மக்கள் எல்லாம் முடிவு செய்துள்ளார்கள். மிகப்பெரிய தோல்வி பயத்தில் பாஜக உள்ளது.

100 இடங்களுக்கு மேல் கூட பாஜக வெற்றி பெறாது என வடநாடு பத்திரிகையாளர்கள் பேசிக் கொண்டுள்ளனர். தோல்வி பயத்தில், மக்களிடையே மோதலை உருவாக்க பிரதமர் மோடி இப்படிப்பட்ட நாகரிகமற்ற பேச்சுகளைப் பேசி வருகிறார். இதை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வன்மையாகக் கண்டிக்கிறது.

பாஜகவில் உள்ள அமைச்சர் ஜெய்சங்கர், நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் தோல்வி பயத்தால் மாநிலங்களவை உறுப்பினராகி இருக்கிறார்களா? எத்தனை மாநிலங்களவை உறுப்பினர்கள் மத்திய அமைச்சராக இருக்கிறார்கள்? முதலில், இவர்கள் எல்லாம் தோல்வி பயத்தில் மக்களைச் சந்திக்காமல், மாநிலங்களவை உறுப்பினராகி இருக்கிறார்களா எனக் கேட்க வேண்டும்.

இந்தியா கூட்டணி, மக்களை மட்டுமே நம்பி தேர்தலில் நிற்கிறது. ஆனால், பிரதமர் மோடி அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ, தேர்தல் ஆணையம் உள்ளிட்டவற்றை நம்பி தேர்தலில் நிற்கிறார். அதனால் அவர்கள் மீது எந்தப புகார் வந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை.

குறிப்பாக, தேர்தலுக்கு முன்பாக திருநெல்வேலி லோக்சபா பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்குச் சொந்தமான ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுவரை அமலாக்கத்துறை விழிக்காமல் கும்பகர்ணன் போன்று தூங்கிக் கொண்டிருக்கிறது.

வருமான வரித்துறை என்ன செய்தது? சிபிஐ என்ன செய்தது? பாசிச ஆட்சியில் எல்லோருக்கும் சமமான ஆட்சி நடக்கவில்லை. காலை நேரத்தில் சோதனை நடத்தி, மாலை நேரத்தில் பாஜகவின் கணக்கில் பணம் போய்விடும். இதுதான் தேர்தல் நன்கொடைப் பத்திரம்" என்று கூறினார்.

இதையும் படிங்க: திருச்செந்தூரில் கட்டுக்கடங்காத கூட்டம்.. தடுப்பை தள்ளிவிட்டு உள்ளே சென்ற பக்தர்கள்! - Tiruchendur Murugan Temple

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.