ETV Bharat / state

“தமிழ்நாட்டின் உரிமைகளை தாரைவார்த்தவர் எடப்பாடி பழனிசாமி” - செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு! - Lok Sabha Election 2024

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 10, 2024, 4:22 PM IST

தமிழ்நாட்டின் உரிமைகளை தாரைவார்த்தவர் எடப்பாடி பழனிசாமி
தமிழ்நாட்டின் உரிமைகளை தாரைவார்த்தவர் எடப்பாடி பழனிசாமி

Selvaperunthagai: எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு வந்தவுடன், நீட்டும் இடத்தில் எல்லாம் கையொப்பமிட்டு, தமிழ்நாட்டின் உரிமைகளை தாரை வார்த்து, மோடிக்கு கொடுத்துவிட்டார் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் திமுக வேட்பாளர் முரசொலிக்கு ஆதரவாக, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, தஞ்சை கீழவாசல் பகுதியில் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், "தேர்தலில் ஜனநாயகம் வாழ வேண்டும் என்றால், சர்வாதிகாரம் வீழ வேண்டும், சர்வாதிகாரம் வீழ வேண்டும் என்றால் இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும். தமிழ்நாடு உரிமையை எடுத்துக் கொண்டவர் மோடி என்றால், தமிழ்நாடு உரிமையை எடுப்பதற்காக துணை போனவர் எடப்பாடி பழனிசாமி.

அதிமுகவும், பாஜகவும் தொடர்ந்து வஞ்சகமும், துரோகமும் செய்துவிட்டது. மாநில அளவில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதியை இரண்டே ஆண்டுகளில் 80 சதவீதம் நிறைவேற்றியவர். இந்த தேசத்தின் பிரதமர் என்றால், தேசத்தின் மக்களுக்காக பணியாற்ற வேண்டும், அதைத்தான் காங்கிரஸ் பிரதமர்கள் செய்தார்கள், ஆனால் நீங்கள் (மோடி) அதானிக்கும், அம்பானிக்கும் பணியாற்றிக் கொண்டிருக்கிறீர்கள்.

ஜெயலலிதா இருக்கும் வரை நீட் தேர்வு கொண்டு வரவில்லை, உதய் மின் திட்டம் கொண்டு வரவில்லை, ஜிஎஸ்டியில் கையொப்பமிட மறுத்தார், பொது சிவில் சட்டம் கொண்டு வர அனுமதிக்கவில்லை, இப்படி எல்லாவற்றையும் எதிர்த்தார்.

எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு வந்தவுடன் நீட்டும் இடத்தில் எல்லாம் கையொப்பமிட்டு, தமிழ்நாட்டின் உரிமைகளை தாரைவார்த்து, மோடிக்கு கொடுத்துவிட்டார், இரண்டு பேரும் இரு துருவங்களாக நிற்கிறார்கள் என்று நாம் பார்க்க முடியாது. இருவரும் ஓர் அணி தான், இவருக்கு போட்டாலும் நோட்டா தான், அவருக்கு போட்டாலும் நோட்டா தான், தேவையில்லாத வாக்குகளாக போய்விடும்.

இந்த தேசத்திற்கு துரோகம் செய்தவர்கள் நாடகம் போட்டு நடித்துக் கொண்டு மக்களை சந்திக்கிறார்கள். இந்தத் தேர்தல் என்பது ஜனநாயகத்திற்கும் சர்வாதிகாரத்திற்குமான தேர்தல், சர்வாதிகாரத்தை வீழ்த்த வேண்டும், ஜனநாயகத்தை மீட்டெடுத்து இந்த மண்ணை பாதுகாக்க வேண்டும். மீட்டெடுக்க வேண்டும் என்றால் இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும்" என்று பேசினார்.

முன்னதாக திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் கமிட்டி மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, “இந்த நாடாளுமன்றத் தேர்தல் தமிழ்நாடு மக்கள் ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்திற்கு எதிரானவர்கள் என்பதை உறுதி செய்யும் விதமாக நடைபெற உள்ளதாகவும், பிரித்தாளும் கொள்கையை கையாளக்கூடிய பாஜகவை எதிர்க்கும் தேர்தலாகவும் இது அமையும். இந்த மண் சமூக விடுதலைக்கான மண், சமூக நீதிக்கான மண். ஆகவே, ஒருபோதும் இந்த தேர்தலில் இந்திய மக்கள் இப்படிப்பட்ட பாசிச சக்திகளை அனுமதிக்க மாட்டார்கள்.

ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து உள்ளது. அதேபோல் ஒவ்வொருவருக்கும் இந்த தேசத்தின் மீதான பார்வை என்பது வேறு, வாஜ்பையை பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய தந்தையாகவும், குருவாகவும், தேசத்தின் பாஜகவின் தலைவராக ஏற்றுக் கொண்டவர்கள். மோடி ஏற்றுக் கொண்ட தலைவரான வாஜ்பாய், உலகத்தின் இரும்பு மனுஷன் என்று போற்றப்பட்ட இந்திரா காந்தியை துர்கா தேவி என்று கூறினார்.

துர்கா தேவிக்கு என்ன சக்தி இருக்கிறதோ, ஆளுமை இருக்கிறதோ அந்த சக்தியும், ஆளுமையும் இந்திரா காந்திக்கு இருப்பதாக கூறினார். அப்படி என்றால், தலைவர் வாஜ்பாய் சொன்னது தவறா அல்லது மோடி சொன்னது சரியா? இந்த தேசத்தின் வளர்ச்சிக்காக சிறப்பாக செயல்பட்டவர் இந்திரா காந்தி.

கச்சத்தீவை குறித்து பேசுபவர்கள் வெஜ் பேங்கை குறித்து ஏன் பேசவில்லை, ஏன் மறைக்க வேண்டும்? வெஜ் பேங்க் என்பது என்ன, அதை எதற்காக இந்திரா காந்தி இந்தியக் கடல் எல்லையில் கொண்டு சேர்த்தார். வெஜ் பேங்க் என்ற பகுதியில் என்னென்ன அபூர்வங்கள், கனிம வளங்கள் உள்ளது என்பது குறித்து இதுவரை மோடி பேசவில்லை. ஆனால், ஒன்றுமில்லாத கச்சத்தீவு குறித்து மட்டும் பேசி வருகின்றனர். காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது இந்தியாவினுடைய எல்லையை விரிவுபடுத்தவும், வெஜ் பேங்க் மூலம் சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்தவும் செய்திருக்கிறார்கள்.

ஏழு லட்சம் தொப்புள் கொடி தமிழ் உறவுகள் அப்பகுதியில் வாழ்ந்த வருகின்றனர் எனவே அவர்களுக்கும், தமிழர்களுக்கும் இடையே மிகப்பெரிய பிரிவினையை ஏற்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கில் தான் தற்போது கட்சத்தீவு தொடர்பான பிரச்சனையை மோடி கையாண்டு வருகிறார்.

தற்போது எம்பியாக இருக்கக்கூடிய திருநாவுக்கரசர் ஒரு நல்ல மனிதர், அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை என்ற வருத்தம் எனக்கும் இருக்கிறது ஆனால் தலைமை என்ன முடிவு செய்கிறதோ அதற்கு நாங்கள் கட்டுப்பட்டு தான் ஆக வேண்டும் எனவே அவர் தொடர்ந்து தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தில் எந்தவித பாகுபாடும் இன்றி ஈடுபடுவார் என்று தெரிவித்தார்.

காங்கிரஸ் சார்பில் இன்று திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் துரை வைகோவை ஆதரித்து வாக்கு கேட்பதற்காக வந்துள்ளேன். எங்களுடைய ஒரே இலக்கு இந்தியா கூட்டணி வெல்ல வேண்டும் என்பதுதான். இங்கு இருக்கக்கூடிய ஒவ்வொருவருக்கும் பல சங்கடங்கள் இருந்தாலும் அவற்றையெல்லாம் களைந்து இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் உழைத்துக் கொண்டிருக்கிறோம்.

நிர்மலா சீதாராமனின் கணவர் பிரபாகரன் மோடி மீண்டும் ஜெயித்தால் சர்வாதிகாரியாக இருப்பார் என்று கூறி இருப்பதாக எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்தவர் கடந்த பத்தாண்டு காலமாக மோடி சர்வாதிகாரியை போல தானே செயல்படுகிறார். அவர் சர்வாதிகாரத்தை உறுதிப்படுத்துவதற்காக தான் சிஏஏ திருத்தச் சட்டம், லடாக் பகுதியில் 20 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவை சீனாவிற்கு தாரை பார்த்து கொடுத்தது என்பது உள்ளிட்ட சர்வாதிகார செயல்பாடுகள் நடைபெற்று வருகிறது.

பிரதமர் மோடி சர்வாதிகாரி என்று நிர்மலா சித்தராமனின் கணவர் பிரபாகரன் மட்டும் கூறவில்லை, அவருடைய மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணிய சுவாமியும் குறிப்பிட்டுள்ளார். இந்திய பிரதமராக இருப்பதற்கு மோடிக்கு எந்த தகுதியும் இல்லை, அன்னை இந்திரா காந்தி தன்னுடைய உயிரைக் கொடுத்து இந்திய நாட்டின் கட்டமைப்பை ஒளிப்படுத்தி உள்ளார்.

எனவே இந்தியா குறித்து பேசுவதற்கு மோடிக்கு எந்த வித தகுதியும் இல்லை. அண்ணாமலை என்பவர் தமிழர்களையும், தமிழ்நாட்டையும் காட்டிக் கொடுப்பவர். தமிழ்நாட்டு மக்களை காட்டிக் கொடுக்கலாமா, துரோகி ஆகலாமா, பாஜகவினுடைய நாடாளுமன்ற உறுப்பினர் ஷோபா கராத்தே என்பவர் பெங்களூரில் உள்ள ராமேஸ்வரம் உணவகத்தில் நடந்த குண்டு வெடிப்பிற்கு காரணம் தமிழர்கள் என்று கூறுகிறார்.

தமிழர்களை கொச்சைப்படுத்த வேண்டாம் என்று மோடியும் கண்டிக்கவில்லை, தமிழ்நாட்டிற்கு தலைவராக இருக்கும் அண்ணாமலையும் வாய் திறக்கவில்லை உடனடியாக அவரை பதவியில் இருந்து நீக்கி இருக்க வேண்டும்.

அருணாச்சல பிரதேசத்தில் 20,000 சதுர கிலோ மீட்டரை சீனா ஆக்கிரமிப்பு செய்து சீன மொழியில் 30 ஊர்களுக்கு பெயர் வைத்துள்ளது. ஆனால் இது குறித்து மோடி வாய் திறக்காமல் அமைதி காத்து வருகிறார். இந்தியா கூட்டணி அதிக இடத்தில் வெல்லும் பட்சத்தில் தமிழ்நாட்டிற்கு தேவையான எல்லா நலன்களும் வளங்களும் கண்டிப்பாக வழங்கப்படும். 400 இடங்களில் இந்தியா கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும். ஏற்கனவே நடந்த தேர்தல்களில் நாங்கள் பிரதமர் வேட்பாளர் யார் என்று சொன்னதில்லை இப்போதும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” எனக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: 174 தொழில்நுட்ப படிப்புகளுக்கான பாடங்களை தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்ட சென்னை ஐஐடி! - IIT Madras

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.