ETV Bharat / state

“அண்ணாமலை இதற்கு பதில் அளிக்க வேண்டும்”.. ரூ.4 கோடி பறிமுதல் விவகாரத்தில் சீமான் பேச்சு! - Lok Sabha Election 2024

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 7, 2024, 6:36 PM IST

Seaman Campaign In Vellore
Seaman Campaign In Vellore

Seaman Campaign in Vellore: ஓட்டுக்கு காசு கொடுக்க மாட்டோம் என சொன்ன என் தம்பி அண்ணாமலை தான் இதற்குப் பதில் கொடுக்க வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் தொடர்புடைய நபரிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து சீமான் பேசியுள்ளார்.

வேலூர்: வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மகேஷ் ஆனந்தை ஆதரித்து, வேலூர் மண்டித்தெரு மற்றும் திருப்பத்தூரில் உள்ள ஆம்பூர் புறவழிச்சாலை உள்ளிட்ட இடங்களில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், "போராடும் அரசு ஊழியர்கள் மற்றும் மக்களை இந்த அரசு ஒடுக்கத்தான் செய்கிறார்களே தவிர, தீர்வை காணவில்லை. 10 ஆண்டு ஆட்சியில் பாஜக, நாட்டில் ஒரே ஒருவனுக்கு நல்லது செய்ததா என சொல்லுங்க பார்ப்போம். நான் இப்படியே பிறந்த ஊருக்கு சென்று விடுகிறேன், கட்சியை நடத்த மாட்டேன்.

ஆந்திராவில் செம்மரக்கட்டை வெட்டியதாகக் கூறி 20 தமிழர்களை அம்மாநில அரசு சுட்டுக்கொன்ற போது அதிமுகவும், திமுகவும் வேடிக்கை தான் பார்த்தது, வேறு என்ன செய்தது? கர்நாடகாவில் இருந்து ஒரு சொட்டு தண்ணீர் கூட தரமாட்டேன் என சொல்லும் கட்சிக்கு 10 சீட்டு கொடுத்து இங்கு தேர்தலைச் சந்திக்கிறது திமுக.

7 விழுக்காடு வாக்கு வைத்திருக்கும் மூன்றாவது பெரிய கட்சியாக இருக்கும் நம்மிடத்தில் எவ்வளவு பேரம் பேசினார்கள்? கோடிகளை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள். தெருக்கோடியில் நின்றாலும், மக்களுக்கு உண்மையும், நேர்மையுமாகத்தான் நிற்போம் என உங்கள் பிள்ளைகள் வந்து நிற்கின்றோம்.

ஊழலும், லஞ்சமும் புற்று போல் தேசியமயமாக்கப்பட்ட ஒன்றாக மாறியிருக்கிறது. ஓட்டுக்கு காசு கொடுப்பதில் இருந்துதான் ஊழல், லஞ்சத்திற்கான விதையே பிறக்கிறது. கோடிகளைக் கொட்டி வென்று வருபவர்கள் மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் வருவார்களா? இல்லை, நான்கு மடங்கு சம்பாதித்துக்கொள்ள வருவார்களா? வழக்கம்போல எல்லா தேர்தல்களைப் போலவும் இந்த தேர்தலையும் கடந்து போகாதீர்கள், ஆழ்ந்து சிந்தித்து வாக்களியுங்கள்" என்று பேசினார்.

இதன் தொடர்ச்சியாக அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் தொடர்புடைய நபர்களிடமிருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து கேட்டதற்கு, "ஓட்டுக்குப் பணம் கொடுக்கும் வேட்பாளர்களை 10 ஆண்டு தடை செய்ய வேண்டும். அப்படி கடுமையான சட்டம் கொண்டுவந்தால்தான், இது போன்ற கொடுமையான செயல்கள் தடுக்கப்படும்.

இப்போது ஏதோ ஒரு இடத்தில் தான் பிடித்திருக்கிறார்கள், அப்படி என்றால் மற்ற இடங்களில் பணம் கொடுக்கவில்லையா? பணம் செல்லவில்லையா? ஓட்டுக்கு காசு கொடுக்க மாட்டோம் என சொன்னவர் என் தம்பி அண்ணாமலை. இப்போது அவர்தான் இதற்கு பதில் கொடுக்க வேண்டும்" என்று பதிலளித்தார்.

இதனைத் தொடர்ந்து, இன்றைய காலகட்டத்தில் இன்ஸ்டாகிராம் பக்கம்தான் அரசியல் தளமாக உள்ளது என அண்ணாமலை பேசியது குறித்து கேட்டதற்கு, "ஒருவேலை, டிக் டாக்-ஐ போன்று இதையும் தடை செய்ய வாய்ப்புள்ளது. எனது சமூக வலைத்தளக் கணக்கு ஒன்றை தடை செய்தனர்.

ஏனென்றால், அதில் நீங்கள் செய்யும் தவறுகளுக்கு எதிராகச் சுற்றறிக்கை பதிவு செய்வதால் தடை செய்தனர். தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்தான் தகவல்கள் பரிமாறிக் கொண்டிருக்கிறோம். இவர்கள் செய்வதைத் தானே நாங்கள் பரப்புகிறோம். வரும் காலத்தில் இமெயில், இன்ஸ்டாகிராம் எல்லாம் தடை செய்ய வாய்ப்புள்ளது" என்று கூறினார்.

மேலும் தொடர்ச்சியாகப் பேசிய அவர், "திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பெண்கள் குறித்துப் பேசிய பேச்சை அவர்களின் குடும்ப பெண்களே சகித்துக் கொள்வார்களா? கதிர் ஆனந்த் இதற்காக ஒரு வருத்தம் கூட தெரிவிக்கவில்லை.

மேலும், நாடாளுமன்றம் போனால் ஆங்கிலம், இந்தி தெரிந்திருக்க வேண்டும் என்று துரைமுருகன் சொல்கிறார். நீங்கள் கூட்டணி வைத்துள்ள காங்கிரஸ் கட்சியே, தன்னுடைய தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ள திட்டங்களுக்கு எல்லாம் இந்தியில் தான் பெயர் வைத்துள்ளது.

தேர்தல் பறக்கும் படையினரின் நடவடிக்கையை கொடுமையாகப் பார்க்கிறேன். இதுவரை காசு கொடுப்பவர்களை எங்குத் தேடிப் பிடித்துள்ளீர்கள்? தற்போது ரம்ஜான் நேரம் என்பதால், மதுரையில் ஆடு விற்பனை ரூ.11 கோடிக்கு நடந்துள்ளது. ஆனால், அந்த பணத்தை எப்படி எடுத்துச் செல்வது எப்படி என்று தெரியாமல் விவசாயிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இந்த முறையை மாற்ற வேண்டும்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: ரூ.4 கோடி பறிமுதல்; நயினார் நாகேந்திரனுக்குச் சொந்தமான அனைத்து இடங்களிலும் சோதனை நடத்த திமுக வலியுறுத்தல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.