ETV Bharat / state

அம்மாவின் நினைவாக வைத்திருந்த பரிட்சை அட்டையை உடைத்ததாக குற்றச்சாட்டு; மாணவர் மருத்துவமனையில் அனுமதி - நடந்தது என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 29, 2024, 3:57 PM IST

School student admitted to hospital who attack by teachers in Mayiladuthurai
ஆசிரியர்கள் தாக்கியதில் பள்ளி மாணவன் மருத்துவமனையில் அனுமதி

Teachers Attack Student: மயிலாடுதுறையில் உள்ள மூவலூர் ராமாமிர்தம் அரசு உயர் நிலைப்பள்ளியில் 10ஆம் வகுப்பு பள்ளி மாணவனை, ஆசிரியர்கள் அடித்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆசிரியர்கள் தாக்கியதில் பள்ளி மாணவன் மருத்துவமனையில் அனுமதி

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 15 வயது பள்ளி மாணவன், மூவலூர் ராமாமிர்தம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வருகிறார். மாணவனின் தாயார், கடந்த 2015ஆம் ஆண்டு உடல்நலக் குறைவால் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், மாணவனின் தாய் உயிருடன் இருக்கும்போது, மகன் தேர்வு எழுதுவதற்கான அட்டை வாங்கிக் கொடுத்துள்ளார்.

தற்போது வரை அந்த அட்டையை மாணவன் தனது தாய் நினைவாக பாதுகாப்பாக வைத்து, தேர்வு எழுதுவதற்குப் பயன்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் அந்த அட்டையில், ஆர்ட்டின் படம் வரைந்து, அதில் தனக்கு பிடித்த இருசக்கர வாகனத்தின் பெயரையும் எழுதி வைத்துள்ளார்.

இதனிடையே, நேற்று முன்தினம் காலையில் தேர்வு எழுதிய மாணவனின் அட்டை, தனது நண்பன் மதியம் தேர்வு எழுதுவதற்காகக் கேட்டதால் கொடுத்துள்ளார். அதைத் தொடர்ந்து தேர்வு எழுதும்போது, அட்டையில் ஆர்ட்டின் படம் போடப்பட்டிருப்பதைக் கண்ட ஆசிரியை கலைவாணி, அந்த அட்டையை வாங்கி, அதே பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணிபுரியும் தனது கணவரான வரதராஜனிடம் கொடுத்துள்ளார்.

அப்போது ஆசிரியையின் கணவர் வரதராஜன், அந்த அட்டையை உடைத்ததாகக் கூறப்படுகிறது. அதனால், எதற்காக அந்த அட்டையை உடைத்தீர்கள் என ஆசிரியை கலைவாணியிடம் மாணவன் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், இதுகுறித்து தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்தபோது, தனக்கு எதுவும் தெரியாது எனக் கூறியதாகவும், அதன்பின் தமிழ் ஆசிரியர் வரதராஜன், தலைமை ஆசிரியர் மஞ்சுளா மற்றும் உடற்கல்வி ஆசிரியர் அருண்பாபு ஆகியோர் இணைந்து மாணவரை அடித்ததாகவும் கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து வீட்டிற்கு வந்த மாணவனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், தற்போது மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது, இந்த சம்பவம் தொடர்பாக குத்தாலம் போலீசார் உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவனின் உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே மாணவனை அடித்தது தொடர்பாக பள்ளி தலைமையாசிரியர் கூறுகையில், தாயின் நினைவாக வைத்திருந்த அட்டையை யார் உடைத்தது என்று ஆத்திரத்தில் வந்த மாணவன் சொல்ல முடியாத வார்த்தைகளைக் கூறியதாகவும், இந்த பிரச்னை குறித்து இருதரப்பினரும் பேசி சமரசம் செய்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு இரு தொகுதிகள் ஒதுக்கீடு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.