ETV Bharat / state

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு! - Summer holiday for school students

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 5, 2024, 4:30 PM IST

Updated : Apr 5, 2024, 4:55 PM IST

Summer holiday for school students
Summer holiday for school students

Summer holiday for school students: தமிழகத்தில் 1 முதல் 3ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கான விடுமுறை ஏப்ரல் 6ஆம் தேதி முதலும், 4 முதல் 9ஆம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவர்களுக்கான விடுமுறை 13ஆம் தேதி முதல் தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

சென்னை: பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அறிவொளி, தொடக்கக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் ஆகியோர் இணைந்து அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி உள்ள கடிதத்தில், ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஏப்ரல் 5ம் தேதி உடன் ஆண்டு தேர்வுகள் முடிவடைகிறது. 6 ஆம் தேதி முதல் அந்தக் குழந்தைகளுக்குக் கோடை விடுமுறையாகக் கருதலாம்.

4 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலக் கூடிய மாணவர்களுக்கு 10ஆம் தேதி மற்றும் 12ஆம் தேதி நடைபெற இருந்த தேர்வுகள் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் மாற்றி வைக்கப்பட்டுள்ளது. அதனால் 4 முதல் 9ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களை 12ஆம் தேதி வரை பள்ளிக்கு வருகை புரிய வைத்து அவர்களைத் தேர்வுக்கு ஆயத்தப்படுத்துகின்ற பணியை ஆசிரியர்கள் மேற்கொள்ளலாம்.

அதன் பிறகு ஆசிரியர்களுக்குத் தேர்தல் பணிகள் 15ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை உள்ள காரணத்தினால் 4 முதல் 9ஆம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்கள் பள்ளிக்கு வரத் தேவையில்லை. மீண்டும் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் மாணவர்கள் தேர்வு எழுதுவதற்காகப் பங்கேற்கக் கூடிய வகையில் தெளிவாக எடுத்துச் சொல்லுதல் வேண்டும் என அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுரை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

ஆசிரியர்களைப் பொறுத்தவரை 26ஆம் தேதி வரை அவர்களுக்கு வேலை நாட்களாகக் கருதப்படுகிறது. அவர்கள் இடையில் தேர்தல் பணிக்காகச் செல்கின்ற போது அது மாற்றுப்பணியாகக் கருதலாம். தேர்தல் பணி இல்லாத நேரங்களில் பள்ளிக்கு வருகை புரிந்து ஏற்கனவே நடைபெற்ற தேர்வு விடைத்தாள்களைத் திருத்துகின்ற பணி, மாணவர்களுக்கான தேர்ச்சி கொடுக்கின்ற பணி, தேர்ச்சியைப் பதிவேட்டில் பதிவு செய்கின்ற பணி, வட்டார கல்வி அலுவலருக்கு அனுப்புகின்ற பணி ஆகியவற்றையெல்லாம் மேற்கொள்ளலாம்.

மேலும், தற்போது இணையதள இணைப்பு பெறுகின்ற பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எனவே அதனைப் பெறுகின்ற முயற்சியில் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும், ஆசிரியர்களும் மேற்கொள்ள வேண்டும்.

இணையதள இணைப்பு வசதிக்காக ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டம் நிதியின் மூலம் இரண்டாவது கட்ட பள்ளி மானியம் (school grant) தற்போது பள்ளிக் கல்வி இயக்குநர் மூலமாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு அனுப்பி அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் மூலம் மாதாந்திர கட்டணத் தொகை மூன்று மாதங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதனைப் பள்ளிகளுக்கு விடுவிக்குமாறு மாவட்ட கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பள்ளி தலைமை ஆசிரியர்கள் பொறுத்தவரை ஏப்ரல், மே மாதங்களில் இணையதள இணைப்பு வசதியும் மற்றும் திறன் வகுப்பறைகள் மற்றும் கணினி தொழில்நுட்ப ஆய்வகம் அமைப்பதற்குப் பொருட்கள் வருகின்ற போது பள்ளிக்கு வருகை புரிந்து பொருட்களைப் பெற்று அதனைப் பொருத்தும் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மத்திய அமைச்சர் அமித்ஷாவின் தமிழக பயணம் திடீர் ரத்து! என்ன காரணம்? - Amit Shah Tn Visit Cancel

Last Updated :Apr 5, 2024, 4:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.