ETV Bharat / state

சேலம் மக்களவைத் தொகுதி; மூன்றடுக்கு பாதுகாப்பில் வாக்கு இயந்திரப் பெட்டிகள்! - Lok sabha election 2024

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 20, 2024, 6:26 PM IST

சேலம்
சேலம்

Lok Sabha Election 2024: சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலை விட இம்முறை 0.84 சதவீத வாக்குகள் குறைவாக பதிவாகி உள்ளது.

சேலம்: தமிழ்நாடு முழுவதும் நேற்று (ஏப்.19) ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்ற நிலையில், 72.09 சதவீதம் வாக்குகள் பதிவானது. அதிகபட்சமாக, தருமபுரி நாடாளுமன்றத் தொகுதியில் 81.48 சதவீதம் வாக்குப்பதிவும், குறைந்தபட்சமாக மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் 53.91 சதவீத வாக்குகளும் பதிவானது.

அந்த வகையில், சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் 78.13 சதவீதம் வாக்குப்பதிவாகி உள்ளது. கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் 78.97 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. சேலம் நாடாளுமன்றத் தொகுதியானது சேலம் மேற்கு, சேலம் தெற்கு, சேலம் வடக்கு, ஓமலூர், எடப்பாடி, வீரபாண்டி ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது.

இதில் கிட்டதட்ட 16 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ள நிலையில், திமுக, அதிமுக, பாமக, நாதக உள்ளிட்ட கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என மொத்தம் 25 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்த நிலையில், 1,766 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு தேர்தலானது நடைபெற்றது. இதில் 130 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாகவும், 14 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவையாகவும் கண்டறியப்பட்டு, அங்கு கூடுதல் கண்காணிப்புடன் தேர்தல் நடத்தப்பட்டது.

சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் ,

  • எடப்பாடி 84.71 சதவீத வாக்குப்பதிவு
  • வீரபாண்டி 84.46 சதவீத வாக்குப்பதிவு
  • ஓமலூர் 82.84 சதவீத வாக்குப்பதிவு
  • சேலம் வடக்கு 70.72 சதவீத வாக்குப்பதிவு
  • சேலம் தெற்கு 75.46 சதவீத வாக்குப்பதிவு
  • சேலம் மேற்கு 75.46 சதவீத வாக்குப்பதிவு என சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் சராசரியாக 78.13 சதவீத வாக்குப்பதிவு ஆகியுள்ளது. கடந்த முறையை விட 0.84 சதவீத வாக்குகள் குறைவாகப் பதிவாகி உள்ளது.

16 லட்சத்திற்கும் அதிகமாக வாக்காளர்கள் உள்ள நாடாளுமன்றத் தொகுதியில், 12 லட்சத்து 95 ஆயிரத்து 944 பேர் வாக்களித்து உள்ளனர். பின்னர், வாக்குப்பெட்டிகள் அனைத்தும் வாகனம் மூலம் பாதுகாப்பாக, சேலம் ஓமலூர் அருகே உள்ள கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டது.

இந்த பணியினை சேலம் மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியான பிருந்தா தேவி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, தேர்தலில் போட்டியிட்ட அனைத்து கட்சி பிரமுகர்கள் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். மேலும், கருப்பூர் பொறியியல் கல்லூரியைச் சுற்றி மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு சிசிடிவி காட்சிகள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: பெரம்பலூர் மக்களவைத் தொகுதி; உயர் கோபுரங்களின் உச்சகட்ட பாதுகாப்பில் வாக்கு இயந்திரங்கள்! - Lok Sabha Election 2024

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.