ETV Bharat / state

காது வலிக்கு கழுத்தில் ஓட்டை? தவறான சிகிச்சையால் பெண் உயிரிழப்பு..? ஈரோட்டில் நடந்தது என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 29, 2024, 9:20 AM IST

Erode Woman Death issue
ஈரோட்டில் தவறான சிகிச்சையால் பெண் உயிரிழப்பு

Erode Woman Death issue: ஈரோட்டில் காய்ச்சல் மற்றும் காது வலிக்காக சிகிச்சைப் பெற்ற பெண் உயிரிழந்தார். இந்நிலையில், தனியார் மருத்துவமனை மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் பெண் உயிரிழந்ததாக குற்றசாட்டிய உறவினர்கள் திடீரென சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடாக வழங்க வேண்டுமெனவும் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஈரோட்டில் தவறான சிகிச்சையால் பெண் உயிரிழப்பு

ஈரோடு: தனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் பெண் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ. 1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும் மற்றும் நீதிபதிகள் முன்பு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்டவற்றை வலியுறுத்தி, 100-க்கும் மேற்பட்ட பெண்ணின் உறவினர்கள் நேற்று (ஜன.28) சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு மாவட்டம், திண்டல் பகுதியைச் சேர்ந்த செல்வம் என்பவரது மனைவி வளர்மதி. கடந்த ஜனவரி 23ஆம் தேதி காய்ச்சல் மற்றும் காது வலி காரணமாக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக வளர்மதி அனுமதிக்கப்பட்டிருந்தார். மருத்துவமனையில், வளர்மதியின் கழுத்தில் துளையிட்டு மருத்துவர்கள் சிகிச்சை அளித்ததாக கூறப்படுகிறது. அதன் பின்னர், வளர்மதி உயிரிழந்துவிட்டதாக அவரது குடும்பத்தினரிடம் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் வளர்மதி உயிரிழந்ததாக குற்றம்சாட்டி, மருத்துவமனையை முற்றுகையிட்டு, மருத்துவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை ஆய்வாளர் விஜயன் உள்ளிட்ட போலீசார், வாக்குவாதத்தில் ஈடுபட்ட வளர்மதியின் உறவினர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

ஆனால், வளர்மதியின் உறவினர்கள் உடலை, மூவர் கொண்ட குழு வீடியோ பதிவுடன், பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நீதிபதிகள் முன்பு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும், இது தொடர்பாக உரிய விசாரணை மேற்கொண்டு மருத்துவமனை மற்றும் மருத்துவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 100-க்கும் மேற்பட்டோர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து அகில இந்திய நாடார் வாழ்வுரிமை சங்க நிறுவனத்தலைவர் சதா கூறியதாவது, “ நார்மல் வார்டில் வைத்து, பயிற்சி மருத்துவர்கள் சிகிச்சை அளித்துள்ளனர். முறையான வழியில் மருத்துவமனை சிகிச்சை அளிக்கவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். தவறான சிகிச்சையால் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும். தனியார் மருத்துவமனை மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு சீல் வைத்து இழுத்து மூட வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க: செங்கல்பட்டு, திண்டிவனம் வழி பேருந்துகள் இனி கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கம்! எப்போதிலிருந்து தெரியுமா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.