ETV Bharat / state

"ஆர்.என்.ரவிக்கு ஆளுநருக்கான தகுதி இல்லை" - துரை வைகோ ஆவேசம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 12, 2024, 6:05 PM IST

Etv Bharat
Etv Bharat

Durai Vaiko: ஆர்.என்.ரவிக்கு ஆளுநருக்கான தகுதி இல்லை எனவும் ஆர்.எஸ்.எஸ் கொள்கை பரப்பு செயலாளராக இருக்க தான் அவருக்கு தகுதி இருக்கிறது எனவும் ம.தி.மு.க முதன்மை செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.

"ஆர்.என்.ரவிக்கு ஆளுநருக்கான தகுதி இல்லை" - துரை வைகோ ஆவேசம்!

திருச்சி: ம.தி.மு.க சார்பில் தேர்தல் நிதியளிப்பு கூட்டம் திருச்சியில் இன்று (பிப்.12) நடைபெற்றது. திருச்சி, தஞ்சாவூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்கள் சார்பில் தேர்தல் நிதி அளிக்கப்பட்டது. இதில் ம.தி.மு.க முதன்மை செயலாளர் துரை வைகோ கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சிக்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய துரை வைகோ, "சட்டமன்றத்தில் தமிழ்நாடு அரசின் உரையை ஆளுநர் படிக்காமல் புறக்கணித்தது தமிழ்நாட்டின் வரலாற்றில் இதுவே முதல் முறை. கூட்டம் தொடங்கும் போதே தேசிய கீதம் பாடவில்லை என கூறுவது முரண்பாடான விஷயம்.

சட்டசபை மரபின்படி தமிழ் தாய் வாழ்த்துடன் கூட்டம் தொடங்கும். முடியும் போது தான் தேசிய கீதம் பாடப்படும். கடந்த முறை சட்ட சபையில் தேசிய கீதம் வாசிக்கும் முன்பாக ஆளுநர் மதிக்காமல் சென்றார். சென்ற முறை உரையில் காமராஜர், அண்ணா, பெரியார், அம்பேத்கர், கருணாநிதி ஆகியோரின் பெயரை தவிர்த்து விட்டு வாசித்தார்.

தமிழ்நாடு அரசுக்கு இடைஞ்சல் கொடுப்பது தான் அவரின் வேலையாக இருக்கிறது. இனி வர கூடிய காலங்களில் ஆர்.எஸ்.எஸ் கொடி ஏற்றி ஆர்.எஸ்.எஸ் ஸ்லோகம் வாசிக்க சொன்னாலும் ஆச்சர்யம் இல்லை. ஆர்.என்.ரவிக்கு ஆளுநருக்கான தகுதி இல்லை. ஆர்.எஸ்.எஸ் கொள்கை பரப்பு செயலாளராக இருக்க தான் அவருக்கு தகுதி இருக்கிறது.

மத்திய அரசு பா.ஜ.க அல்லாத மாநிலங்களில் ஆளுநர்களை கொண்டு இணை அரசை நடத்தி வருகிறார்கள். தி.மு.க கூட்டணியில் தான் நாங்கள் இருக்கிறோம். கூட்டணியின் சார்பில் தான் போட்டியிடுவோம். மதவாத பா.ஜ.க அரசு அகற்றப்பட வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம்.

தி.மு.க உடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முழு திருப்திக்கரமாக தான் நடந்தது. எங்கள் கட்சியில் ஒரு மக்களவை உறுப்பினரும் ஒரு மாநிலங்களவை உறுப்பினரும் இருக்கிறார்கள். தற்போது கூடுதலாக ஒரு மக்களவை தொகுதியும் கேட்டு இருக்கிறோம். திருச்சியில் நான் போட்டியிடுவது குறித்து எங்கள் கூட்டணி தலைமை முடிவெடுக்கும்.

இந்தியா கூட்டணியில் நிதிஷ் குமார் தவிர மற்ற அனைத்து கட்சியும் ஒற்றுமையாக இருக்கிறார்கள். ஒரு சில மாநிலங்களில் சில கட்சிகள் இடையே முரண்பாடு இருக்கிறது. ஆனால் குறைந்தபட்ச புரிந்துணர்வுடன் தேர்தலை சந்திப்பார்கள் என்கிற நம்பிக்கை இருக்கிறது.

400க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறுவோம் என பா.ஜ.கவினர் பேசி வருகிறார்கள். அவர்கள் ஓட்டு இயந்திரத்தை முறைகேடாக பயன்படுத்துவார்களோ என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. மத்திய அரசு தேர்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. விலைவாசி உயர்வுக்கு மத்திய அரசு தான் காரணமே தவிர மாநில அரசு அல்ல.

மதத்தை வைத்து அவர்கள் அரசியல் செய்வதை மக்கள் புரிந்து கொண்டார்கள். அதனால் பா.ஜ.க வெற்றி பெறாது. பா.ஜ.க வை வீழ்த்தி இந்தியா கூட்டணி வெற்றி பெறும். தனிப்பட்ட முறையில் தேர்தல் அரசியலில் எனக்கு விருப்பமில்லை.

ஆனால் ஒரு அரசியல் கட்சியில் பயணிக்க உரிய நிலையில் தேர்தல் அரசியலில் போட்டியிட வேண்டிய கட்டாயம் இருக்கிறது. நான் தேர்தலில் போட்டியிடுவேனா என்பது குறித்து கட்சி தலைமை கூட்டணி தலைமை முடிவு செய்யும்" என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், "கூட்டணி கட்சிகளை உதய சூரியன் சின்னத்தில் நிற்க வைக்க உள்ளனர் என்ற தகவல் கமலாயத்திலிருந்து வந்திருக்கும். சென்ற தேர்தலில் உதய சூரியன் சின்னத்தில் நிற்க வேண்டிய தேவை இருந்தது. ஆனால் இந்த முறை தனி சின்னத்தில் நிற்க வேண்டும் என்பது தான் கட்சியினர் விருப்பமாக இருக்கிறது. தி.மு.க விடமும் அது குறித்து வேண்டுகோள் விடுத்துள்ளோம். கூட்டணி தலைமை நல்ல முடிவெடுவிப்பார்கள்.

தனி சின்னத்தில் போட்டியிட அனுமதி தருவார்கள் என்கிற முழு நம்பிக்கையோடு இருக்கிறோம். தமிழ்நாடு சூழல் குறித்து அனைவருக்கும் தெரியும். அதனால்தான் இங்கு அனைத்து இடங்களிலும் போட்டியிடுவோம் என்கிற நம்பிக்கை இருக்கிறது.

வட இந்தியாவில் பா.ஜ.க வெற்றி பெறும் என்கிற கார்த்தி சிதம்பரத்தின் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. இந்தியா கூட்டணியில் அனைத்து மாநிலத்தை சேர்ந்த அரசியல் கட்சிகளும் இருக்கிறார்கள். ஆனால் இந்திய கூட்டணியை சேர்ந்தவர்கள் பிரிவினை ஏற்படுத்துகிறார்கள் என பா.ஜ.கவினர் பேசி வருகிறார்கள். மதத்தை வைத்து பிரிவினை பேசும் அவர்களின் கருத்துக்களை கடந்து தான் செல்ல வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி சடலமாக மீட்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.