ETV Bharat / state

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பஞ்சு மிட்டாய்.. ஆய்வு கூறுவது என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 17, 2024, 7:50 PM IST

reason-to-ban-cotton-candy-in-tamilnadu
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பஞ்சு மிட்டாய்.. ஆய்வு கூறுவது என்ன?

Cotton candy ban in TN: தமிழகத்தில் இனி பஞ்சு மிட்டாய்க்குத் தடை விதித்து அறிக்கை வெளியிட்டது தமிழக சுகாதாரத் துறை. அப்படி எதற்காகத் தமிழகத்தில் பஞ்சு மிட்டாய் விற்பனை தடை செய்யப்பட்டது என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

சென்னை: சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பஞ்சுமிட்டாயில் ரோடமைன் பி (Rhodamine B) எனும் ரசாயனம் கலந்திருப்பதாகவும், இந்த ரசாயனம் கலந்த பஞ்சுமிட்டாய்களைத் தொடர்ந்து அதிகளவில் உட்கொள்ளும் போது புற்றுநோய் ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளின் ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் வண்ணம் சேர்க்கப்பட்ட பஞ்சுமிட்டாய்களுக்குத் தடை விதிப்பதாகத் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று(பிப்.17) அறிக்கை வெளியிட்டார்.

கிராமங்களில் சிறிய கோயில் திருவிழா முதல் நகரங்களில் வீதிகள் மட்டுமல்லாது பெரிய பெரிய கடைகள், திருமண நிகழ்ச்சிகள் மற்றும் பெரிய வணிக வளாகங்கள் என பல்வேறு இடங்களில் கண் கவரும் வண்ணத்தில் விற்பனை செய்யப்படுவது தான் இந்த பஞ்சு மிட்டாய். குழந்தைகளை மட்டுமல்லாது பெரியவர்கள் வரை எளிமையாக ஈர்க்கக்கூடியதும், நாவில் வைத்த உடன் இனிப்பு சுவையைத் தூண்டும் ஒரு தின்பண்டமே இந்த பஞ்சு மிட்டாய். ஆரம்ப காலகட்டத்தில் வெறும் சர்க்கரையை மட்டும் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்டு வந்த பஞ்சு மிட்டாய் நாளடைவில் பல வண்ணங்களில் விற்பனையாகத் தொடங்கியது.

குறிப்பாகக் குழந்தைகள் குறிவைக்கப்பட்டுப் பல வண்ணங்களில் இந்த பஞ்சு மிட்டாய்கள் விற்பனையாகத் தொடங்கியது. வெள்ளை நிறத்திலிருந்த பஞ்சுமிட்டாய் செயற்கை வண்ணம் சேர்க்கப்பட்டு ஆரஞ்சு, பச்சை, மஞ்சள், வெளிர் நிறம், இளஞ்சிவப்பு, நீளம் எனப் பல வண்ணங்களில் விற்பனையாகி வருகிறது.

சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் இந்த செயற்கை வண்ணம் சேர்க்கப்பட்டுத் தயாரிக்கும் பஞ்சு மிட்டாய்களால் மனித உடலுக்குப் புற்றுநோய் ஏற்படக்கூடிய அபாயம் வரை உள்ளது எனத் தகவல் பரவியது. இதையடுத்து புதுச்சேரியில் வண்ணம் சேர்க்கப்பட்டு விற்பனையான பஞ்சு மிட்டாய்-யை ஆய்வுக்கு உட்படுத்தியதன் அடிப்படையில், அதில் ரோமடைன் பி(Rhodamine B) என்னும் ரசாயனப் பொருள் கலந்து தயாரிக்கப்படுவதால் மனித உடலுக்குப் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டது. அதைத்தொடர்ந்து புதுச்சேரியில் பஞ்சுமிட்டாய் விற்பனைக்குத் தடை என்ற அறிவிப்பினை வெளியிட்டது புதுச்சேரி அரசு.

இதனையடுத்து, தமிழகத்திலும் பஞ்சு மிட்டாய்கள் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளால் பகுப்பாய்வு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதில் பஞ்சுமிட்டாயில் ரோமடைன் பி (Rhodamine B) என்னும் ரசாயனப் பொருள் கலந்துள்ளது கண்டறியப்பட்டது இதனையடுத்து தமிழகத்திலும் செயற்கை வண்ணம் சேர்க்கப்பட்டுத் தயாரித்து விற்பனை செய்யப்படும் பஞ்சுமிட்டாய்களுக்குத் தடை எனத் தமிழக சுகாதாரத்துறை இன்று (பிப்.17) அறிவிப்பினை வெளியிட்டது.

இது குறித்து, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ்குமார் கூறியதாவது, "பொதுவாகப் பஞ்சுமிட்டாய் முன்பெல்லாம் வெள்ளை நிறத்தில் விற்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது பல வண்ணங்களில் விற்பனை செய்யப்படுகின்றன. ஆய்வில் வெளி வந்திருக்கக்கூடிய தகவல் அதிர்ச்சி அளிக்கக் கூடியதாக இருக்கின்றன. குறிப்பாக இந்த வகை ரசாயனங்கள் காகிதத்தில் அச்சிடவும், வண்ணப் பூச்சுகளில் பயன் படுத்தப்படுத்தவே பயன்படும்.

இந்த ரசாயனப் பொருள் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் பஞ்சுமிட்டாய் வகைகளைத் தொடர்ந்து நாம் உட்கொள்ளும் போது ஆரம்பக் காலத்தில் வயிற்றுப்போக்கு, குடல் எரிச்சல், உடல் உபாதைகள் போன்ற நோய்கள் ஏற்படும். நாளடைவில் கல்லீரல் செயலிழப்பு, சிறுநீரகத்தில் வலி ஏற்படுதல் உள்ளிட்ட ஆரம்பக் கால நோய்களின் அறிகுறிகள் ஏற்பட அதிகளவில் வாய்ப்பிருக்கிறது. மேலும் இவற்றைத் தொடர்ந்து உட்கொள்ளும் போது அது புற்றுநோய்க்கு வழிவகை செய்யும்.

மேலும், இந்த செயற்கை வண்ணம் சேர்க்கப்பட்டுத் தயாரிக்கப்படும் பஞ்சுமிட்டாய்களை உட்கொள்ளும் போது அந்த ரசாயனப் பொருள் (ரோமடைன் பி) நம் உடலிலிருந்து வெளியேற சுமார் 50 முதல் 70 நாட்கள் வரை ஆகும். இது போன்ற செயற்கை வண்ணங்கள் பஞ்சுமிட்டாய்கள் மட்டும் பயன்படுத்தப்படவில்லை எனவும் குறிப்பாக இன்றைய காலகட்டத்தில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நம் உட்கொள்ளும் கேக் போன்ற பொருட்களிலும் இந்த செயற்கை வண்ணங்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பான, விழிப்புணர்வுகளைத் தொடர்ந்து பள்ளி, கல்லூரிகளில் உணவு பாதுகாப்புத் துறை சார்பாக ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. குழந்தைகளுக்குச் சாலை விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்துவது போல் இது போன்ற உணவு வகைகளுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். விற்பனை நோக்கத்துடன் பல விற்பனையாளர்கள் இதுபோன்ற தரமற்ற ரசாயனம் கலந்த பொருட்களை விற்பனை செய்வதால் பொதுமக்களுக்கும் குழந்தைகளுக்கும் மிகுந்த அளவில் பாதிப்படைகின்றனர். இது போன்ற விழிப்புணர்வுகளை முன்னிலைப் படுத்துவது நம் அனைவரின் கடமையாகும்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: எந்த வகை பஞ்சு மிட்டாய்களுக்கு தடை? - உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி விளக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.