ETV Bharat / state

தேர்தலைப் புறக்கணிக்கும் ராணிப்பேட்டை இளைஞர்கள்.. காரணம் என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 11, 2024, 5:06 PM IST

தேர்தலை புறக்கணிக்கும் ராணிப்பேட் இளைஞர்கள்.
தேர்தலை புறக்கணிக்கும் ராணிப்பேட் இளைஞர்கள்.

Ranipet Grievance Day: ரயில்வே துறையில் பயிற்சி முடித்து 20 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணி வழங்காததைக் கண்டித்து, 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தங்களது வாக்காளர் மற்றும் ஆதார் அட்டையை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்துவிட்டு நாடாளுமன்றத் தேர்தலைப் புறக்கணிப்பதாகக் கூறிச் சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர்: ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (மார்ச்.11) நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ரயில்வே துறையில் பயிற்சி முடித்து 20 ஆண்டுகளுக்கும் மேலாக தங்களுக்குப் பணி வழங்காததைக் கண்டித்து தங்களது வாக்காளர் மற்றும் ஆதார் அட்டையை ஒப்படைத்துத் தேர்தலில் புறக்கணிப்பதாகக் கூறினர்.

தமிழகத்தில் ரயில்வே துறையில் ஆக்ட் அப்ரண்டீஸ் பணியிடங்களுக்கு ஏராளமான இளைஞர்கள் பயிற்சியை முடித்துள்ளனர். இந்த நிலையில், தமிழர்கள் என்பதால் தங்களுக்குப் பணி வழங்காமல் அலைக்கழிப்பதாகவும், உடனடியாகத் தங்களுக்குப் பணி வழங்க வேண்டும் என கூறி இளைஞர்கள் 20க்கும் மேற்பட்டோர் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தனர்.

அப்போது தங்களின் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்துவிட்டு நடைபெற இருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலைப் புறக்கணிக்க உள்ளதாகக் கூறினர். இதனால் அங்குச் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

முன்னதாக, கடந்த வியாழக்கிழமை கரூர் மாவட்டத்தில் உள்ள தாந்தோணி ஊராட்சி ஒன்றியம், மேலப்பாளையம் ஊராட்சியில் உள்ள வடக்கு பாளையம் கிராமத்தில் குடிநீர், கழிவுநீர் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் இல்லை என கூறி பொதுமக்கள் கருப்புக் கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், அடிப்படை வசதிகள் எதுவும் கிடைக்காததைக் கண்டித்த பொதுமக்கள், நாடாளுமன்றத் தேர்தலைப் புறக்கணிப்பதாகக் கூறினர். அதைப்போலக் கடந்த 5ம் தேதி குன்னூர் ஜெகதளா பேரூராட்சிக்கு உட்பட்ட 11வது வார்டு பகுதியில் வசிக்கும் மக்கள், தங்களுக்கு எந்தவிதமான அடிப்படை வசதியும் செய்து தரவில்லை என குற்றம் சாட்டினர்.

மேலும், அரசு நடவடிக்கையும் எடுக்காததைக் கண்டிக்கும் வகையில், வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலைப் புறக்கணிக்க உள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: அது சாட்டிலைட் போன் அல்ல.. சென்னை விமான நிலையத்தில் தீர்ந்த குழப்பம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.