ETV Bharat / state

கும்பகோணம் ராமசாமி கோயிலில் ராமநவமி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது! - Kumbakonam Ramasamy Temple

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 9, 2024, 3:18 PM IST

Kumbakonam Ramasamy Temple
கும்பகோணம் ராமசாமி கோயில்

Kumbakonam Ramasamy Temple: கும்பகோணம் ராமசாமி கோயிலில் ராமநவமி பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் வருகிற ஏப்ரல் 17ஆம் தேதி நடைபெறுகிறது.

கும்பகோணம் ராமசாமி கோயிலில் ராமநவமி விழா

தஞ்சாவூர்: கும்பகோணம் ராமசாமி திருக்கோயில், தஞ்சையை ஆண்ட ரெகுநாத நாயக்க மன்னரால் சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு எழுப்பப்பட்ட மிகப் பழமையான வைணவத் திருக்கோயிலாகும். இங்கு மூலவர் ராமபிரான் பட்டாபிஷேக கோலத்தில் சீதா தேவியுடன் காட்சியளிக்கிறார்.

தென்னகத்தின் அயோத்தி என்றழைக்கப்படும் இக்கோயிலில், ஆண்டுதோறும் ராமநவமி விழா 11 நாட்களுக்கு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டு ராமநவமி விழா கொடியேற்றத்துடன் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ராமநவமி பெருவிழாவின் தொடக்கமாக, இன்று உற்சவர் ராமபிரான், சீதாதேவி, லட்சுமணர், அனுமன் சமேதராய் தங்க கொடிமரம் அருகே எழுந்தருளினர். இதனையடுத்து, கருடாழ்வார் சின்னம் வரையப்பட்ட கொடிக்கு பூஜைகள் செய்யப்பட்டு, பட்டாச்சாரியார்கள் வேத பாராயணம் செய்ய, நாதஸ்வர மேள தாள மங்கள வாத்தியங்கள் முழங்க, தங்க கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

11 நாட்கள் நடைபெறும் ராமநவமி பெருவிழாவில், நாள்தோறும் அனுமந்த வாகனம், இந்திர விமானம், சூரியபிரபை, சேஷ, யானை மற்றும் குதிரை வாகனம் உள்பட பல்வேறு வாகனங்களில் சாமி புறப்பாடு நடைபெறவுள்ளது. மேலும், விழாவின் 4ஆம் நாள் நிகழ்ச்சியாக, வருகிற ஏப்ரல் 12ஆம் தேதி ஓலை சப்பரத்தில் தங்க கருட சேவையும், 9ஆம் நாள் நிகழ்ச்சியாக வருகிற 17ஆம் தேதி ராமநவமி நாளில், விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டமும் நடைபெறுகிறது.

இறுதியாக, வருகிற ஏப்ரல் 21ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடையாற்றி உற்சவத்தில், இராமபிரானும், சீதா தேவியும் திருக்கல்யாண சேவையில், புஷ்பக விமானத்தில் புறப்பாடும் நடைபெற்று, இவ்வாண்டிற்காண ராமநவமி பெருவிழா நிறைவு பெறுகிறது.

இதையும் படிங்க: திருப்பூரில் காரும், அரசு பேருந்தும் மோதி கோர விபத்து: 3 மாத குழந்தை உட்பட 5 பேர் பலி - TIRUPPUR ACCIDENT

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.