ETV Bharat / state

"உணர்வுகளுக்கு மதிப்பில்லை" - முருகன், ராபர்ட் காலவரையற்ற உண்ணாவிரதம்! முதலமைச்சருக்கு கடிதம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 31, 2024, 5:01 PM IST

முருகன் மற்றும் ராபர்ட் பயஸ் முதலமைச்சருக்கு கடிதம்
முருகன் மற்றும் ராபர்ட் பயஸ் முதலமைச்சருக்கு கடிதம்

Rajiv murder case Murgan and Robert payas Hunger strike: திருச்சி சிறப்பு அகதிகள் முகாமில் உரிமைகளும், உணர்வுகளும் பறிக்கப்படுவதாக கூறி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப் போவதாக முருகன், ராபர்ட் பயஸ் அகியோர் முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பி உள்ளனர்.

திருச்சி: திருச்சி சிறப்பு அகதிகள் முகாமில் உள்ள முருகன் மற்றும் ராபர்ட் பயஸ் திருச்சி மாவட்ட ஆட்சியர் வழியாக தமிழ்நாடு முதலமைச்சருக்கு மனு ஒன்றை கடிதமாக அனுப்பி உள்ளார். அந்த மனுவில், "முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 32 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்து வந்த நிலையில், ஏறக்குறைய ஒன்றை ஆண்டுகளுக்கு முன்பு உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டோம்.

சட்டத்தின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டாலும் இன்னும் சிறை கொட்டடியில் இருந்து விடுவிக்கப்படவில்லை. சிறப்பு முகாம் எனப்படும் மற்றொரு சிறையில் அடைத்தார்கள். திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், சாந்தன், முருகனும் அடைத்து வைக்கப்பட்டுள்ளோம். சிறப்பு முகாம் எனப்படுவது சிறையை விட கொடுமையானதாக இருக்கிறது. இங்கு நடைபயிற்சி செய்வதற்கோ நண்பர்களை பார்ப்பதற்கோ முடியவில்லை.

சிறைவாசிகளோடு பழகுவதற்கு கூட எந்தவித அனுமதியும் வழங்கப்படுவதில்லை. சிறப்பு முகாமில் அடைக்கப்பட்ட நாளில் இருந்து பல மாதங்கள் ஆரம்பத்தில் அறையிலேயே தங்க வைக்கப்பட்டதால் பல நோய்களுக்கு உள்ளாகி உள்ளனர். எங்களது உடல் நலத்தை சரி செய்ய நடைபயிற்சி செய்ய அனுமதி கேட்டும், இதுவரை எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை. இதனால் நோய்வயப்பட்டுள்ளோம்.

முருகன் மற்றும் ராபர்ட் பயஸ் முதலமைச்சருக்கு கடிதம்
முருகன் மற்றும் ராபர்ட் பயஸ் முதலமைச்சருக்கு கடிதம்

கடந்த மாதம் திருச்சி அரசு மருத்துவமனை சென்று ஆய்வு செய்த போது ரத்த அழுத்தம், கொழுப்பு, சிறுநீரகக் கல், மூட்டு வலி இருப்பதாக மருத்துவர்கள் சான்றிதழ் வழங்கியுள்ளார்கள். அதனால் கடந்த 22.1.2024 ஆம் தேதி அன்று மீண்டும் மாவட்ட ஆட்சியருக்கு நடைப்பயிற்சி செய்யவும், விளையாடவும் அனுமதி கேட்டு கடிதம் எழுதியும் இதுவரை எந்தவித பதிலும் இல்லை.

இந்த முகாமில் எங்களது உரிமைகளுக்கோ, உணர்வுகளுக்கோ எந்த மதிப்பும் இல்லை. இதனால் தான் சாந்தன் உடல்நலக் குறைபாட்டால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அதே நிலை தொடர்ந்தால் நாங்கள் இங்கேயே இறப்பது உறுதி. எங்கள் உயிருக்கு ஏதேனும் ஆபத்து நேரிட்டால் அதற்கு இங்குள்ள அதிகாரிகளே பொறுப்பேற்க வேண்டும்.

அகதிகள் நேரடியாக பிற நாடு செல்வதற்கு இலங்கை அரசு பாஸ்போர்ட் வழங்கிட அனுமதி வழங்கி வருகிறது. அதற்கு இலங்கை தூதரகம் அழைத்து போய் கடவுச்சீட்டு பெறவும் அனுமதி கேட்டுள்ளோம். இதுவரை எந்த பதிலும் கிடைக்காததால் வேறு வழியின்றி இன்று முதல் கால வரையற்ற உண்ணா மறுப்பு போராட்டத்தை முன்னெடுக்க உள்ளோம்" என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

முருகன் மற்றும் ராபர்ட் பயஸ் முதலமைச்சருக்கு கடிதம்
முருகன் மற்றும் ராபர்ட் பயஸ் முதலமைச்சருக்கு கடிதம்

மேலும் சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்ய கோரியும் சிறப்பு முகாமை இழுத்து மூடக் கோரியும் நாம் தமிழர் கட்சியின் தலைவரும் ஒருங்கிணைப்பாளருமான சீமான் தலைமையில் வருகின்ற பிப்.3 ஆம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ராணிப்பேட்டையில் சட்டமன்ற மதிப்பீட்டுக் குழு ஆய்வு..! கூடுதல் பணிகள் குறித்து பரிந்துரைக்க திட்டம்..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.