ETV Bharat / state

விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் பா.ஜ.க சார்ப்பில் நடிகை ராதிகா சரத்குமார் போட்டி! - Virudhunagar bjp candidate

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 22, 2024, 2:10 PM IST

Updated : Mar 22, 2024, 3:55 PM IST

radhika-sarathkumar-contest-in-virudhunagar-lok-sabha-constituency-in-bjp-alliance-in-lok-sabha-election
விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் பா.ஜ.க சார்ப்பில் நடிகை ராதிகா சரத்குமார் போட்டி!

Virudhunagar bjp candidate: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாஜக சார்ப்பில் விருதுநகர் மக்களவைத் தொகுதியில் நடிகை ராதிகா சரத்குமார் போட்டியிடுகிறார்.

விருதுநகர்: நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடக்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரே கட்டமாகத் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19 ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. மார்ச் 20 முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கியதை அடுத்து கூட்டணி, தொகுதிப் பங்கீட்டை நிறைவு செய்ய அரசியல் கட்சிகள் தீவிரமாக பணிபுரிந்து வருகின்றன.

தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் என நான்கு முனை போட்டி நிலவி வருகிறது. இதில், பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ், புதிய நீதிக் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம், அமமுக, பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்டவை கூட்டணி அமைத்துள்ளது.

இந்த நிலையில், மார்ச் 12ஆம் தேதி அகில இந்தியச் சமத்துவ மக்கள் கட்சியை, கட்சியின் நிறுவனத் தலைவர் ஆர்.சரத்குமார் பாஜகவோடு இணைத்துக் கொண்டார். சரத்குமார் தனது அரசியல் பயணத்தை 1996ல் திமுக கூட்டணியில் தொடங்கினார். 2001 ல் திமுக சார்பில் மாநிலங்களவை எம்பியாக தேர்வு செய்யப்பட்டார். அதன், பின்னர் 2006ல் மனைவி ராதிகாவுடன் அதிமுகவில் இணைந்தார்.

பின்னர், அதிமுகவிலிருந்து விலகி அகில இந்தியச் சமத்துவ மக்கள் கட்சியை சரத்குமார் கடந்த ஆகஸ்ட் 31, 2007 ல் தொடங்கினார். அதன் பின்னர், 2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில், இரட்டை இலைச் சின்னத்தில், அகில இந்தியச் சமத்துவ மக்கள் கட்சி, இரு சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதன் பின்னர் உட்கட்சிப் பூசல்களால் கட்சிக்குப் பின்னடைவு ஏற்பட்டது.

இந்நிலையில் வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் சரத்குமார் கூட்டணி எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அகில இந்தியச் சமத்துவ மக்கள் கட்சியை, கட்சியின் நிறுவனத் தலைவர் சரத்குமார் பாஜகவோடு இணைத்துக் கொண்டார்.

தமிழகத்தில் பாஜக 20 தொகுதிகளில் போட்டியிடும் நிலையில், கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீட்டை முடித்து வேட்பாளர்களையும் அறிவித்து வருகிறது. அதன்படி, நேற்றைய தினம் பாஜக சார்பில் தமிழகத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல் கட்ட பட்டியல் வெளியானது.

இந்த நிலையில் பாஜகவின் 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று (மார்ச்.22) வெளியிடப்பட்டது. அதில், கடந்த 12ஆம் தேதி சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைத்த சரத்குமாரின் மனைவி நடிகை ராதிகா சரத்குமாருக்கு விருதுநகர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி, அவர் விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார்.

அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேமுதிக சார்பில், விஜயகாந்த் மகன் விஜய பிரபாகர் விருதுநகரில் போட்டியிடுகிறார். அதேபோல், திமுக சார்பில், ஏ.ஆர்.ஆர். சீனிவாசன் போட்டியிடுகிறார்.

இதையும் படிங்க: விஜயகாந்த் மகன் விஜய பிரபாகர் விருதுநகரில் போட்டி..வெளியானது தேமுதிக வேட்பாளர் பட்டியல்! - Vijaya Prabhakar From Virudhunagar

Last Updated :Mar 22, 2024, 3:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.