ETV Bharat / state

நடுக்கடலில் சண்டையிட்டுக் கொண்ட இரு தரப்பு மீனவர்கள்.. 2 மீனவர்கள் காயம் - போலீசார் விசாரணை! - Fishermen fighting in middle of sea

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 28, 2024, 5:04 PM IST

police-investigation-about-2-fishermen-admitted-to-hospital-in-a-clash-between-two-factions-of-fishermen
நடுக்கடலில் சண்டையிட்டுக் கொண்ட இரு தரப்பு மீனவர்கள்: 2 பேர் காயம் - போலீஸ் விசாரணை!

Fishermen fighting in middle of sea: கடலில் மீன்பிடிப்பதில் ஏற்பட்ட தகராற்றின் போது, பூம்புகார் மீனவர்கள் தாக்கியதில் தரங்கம்பாடியைச் சேர்ந்த 2 மீனவர்கள் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாகப்பட்டினம்: மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியைச் சேர்ந்த பன்னீர் மகன் சண்முகவேல் (42) என்பவருக்குச் சொந்தமான பைபர் படகில், அப்பகுதியைச் சேர்ந்த 9 மீனவர்கள் இன்று (ஏப்ரல் 28) காலை 8 மணிக்கு கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ளனர்.

காலை 10:30 மணிக்கு புதுப்பேட்டை மீனவ கிராமத்திற்கு கிழக்கே கடலில் 5 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன்பிடிக்க வலையை இறக்கியபோது, அங்கு சின்ன சுருக்குவலை பொருத்திய 3 பைபர் படகுகளில் வந்த பூம்புகார் மீனவர்கள், நாங்கள் பார்த்த மீனை நீங்கள் எப்படி பிடிக்கலாம் எனக் கூறியதால், இருதரப்பு மீனவர்களிடையே வாக்குவாதமாகி பின்னர் மோதல் ஏற்பட்டுள்ளது.

பூம்புகார் மீனவர்கள் தரங்கம்பாடி மீனவர்களைத் தாக்கி, படகின் மீது மோதி, வலைகளைச் சேதப்படுத்தியதாக தரங்கம்பாடி மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதில், தரங்கம்பாடியைச் சேர்ந்த பன்னீர் மகன் சதீஷ்குமார் (31), செல்லதுரை மகன் நித்திஷ் (24) ஆகிய இருவரும் காயமடைந்துள்ளனர். படகிலிருந்த சக மீனவர்கள் காயமடைந்த மீனவர்களை மீட்டு ஊர் பஞ்சாயத்தார்களுக்குத் தகவல் அளித்துள்ளனர்.

மேலும், காயம் அடைந்த மீனவர்களை சிகிச்சைக்காக தரங்கம்பாடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சேர்ந்துள்ளனர். பின்னர், அவர்கள் மேல் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். காயமடைந்த மீனவர்களை பூம்புகார் எம்எல்ஏ-வும், திமுக மாவட்டச் செயலாளருமான நிவேதா எம்.முருகன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

மேலும், “மீன்பிடி தடை காலத்தில் பூம்புகார் மீனவர்கள் தரங்கம்பாடி மீனவர்களைத் தாக்கியுள்ளனர். சுருக்கு வலையால் தொடர்ந்து பிரச்னை ஏற்பட்டு வருகிறது. அதனை நிரந்தரமாகத் தடை செய்ய வேண்டும். தாக்குதல் நடத்திய மீனவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம்” என ஊர் பஞ்சாயத்தார்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், தகராறில் காயம் அடைந்த பூம்புகார் மீனவர்களும், பூம்புகார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இரு கிராம மீனவர்களிடையேயான தகராறு குறித்து தரங்கம்பாடி கடலோரப் பாதுகாப்பு குழும போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவம், மீனவ கிராமங்களில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தரங்கம்பாடி தாலுகா மீனவர்கள் தாக்குதல் நடத்திய மீனவர்களைக் கைது செய்யும் வரை ஊர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: தொடர் உயிரிழப்புகள்.. ரீல்ஸ் மோகத்தால் வெள்ளியங்கிரி மலையை நாடும் இளைஞர்கள்? - வனத்துறை கூறுவது என்ன? - Velliangiri Hills

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.