ETV Bharat / state

பாஜக கூட்டணியில் இணைந்த பாமக.. எத்தனை தொகுதிகள் ஒதுக்கீடு?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 19, 2024, 8:13 AM IST

Updated : Mar 19, 2024, 9:42 AM IST

pmk
pmk

BJP and PMK alliance: பாஜக - பாமக கூட்டணி உறுதியான நிலையில், பாமகவிற்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ், மாநில பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் கையெழுத்திட்டனர்.

சென்னை: பாஜக - பாமக கூட்டணி உறுதியான நிலையில், திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் இல்லத்தில் கூட்டணி ஒப்பந்தம் கைழுத்தானது.

பாமகவிற்கு வெற்றி வாய்ப்பை தரக்கூடிய தமிழ்நாட்டின் வடக்கு மாவட்டங்களை பாஜக குறிவைத்துள்ளது. முன்னதாக, பாமக சார்பில் 7 தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை எம்பி பதவியும் அதிமுகவிடம் கேட்கப்பட்டது. இதற்காக, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமியை, பாமக எம்எல்ஏ அருள் சந்தித்து கூட்டணி குறித்து நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதனையடுத்து இவ்விரு கட்சிகளுக்குமிடையே இழுபறி நீடித்து வந்தது. மேலும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோரிடையே நடைபெற்று வந்ததாக கூறப்படும் மறைமுகமாக பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு எட்டவில்லை.

இதற்கிடையே, தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி கட்சிகளுடனான பேச்சுவார்த்தைக்குப் பின்னர், மத்திய அமைச்சர்கள் வடகிழக்கு பிராந்திய மேம்பாடு, சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறைக்கான மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் வி.கே.சிங் ஆகியோர் டெல்லிக்கு திரும்பினர். அப்போது, தமிழ்நாட்டில் தாமரை மலரவைக்கும் மாற்று சக்தியாகவும், அதிமுகவிற்கு பாடம் புகட்டுவதற்காகவும், திமுகவை தோற்கடிக்கவும் பாமகவுடன் கைக்கோர்க்கும் வாய்ப்பு அமைந்திருப்பதை டெல்லி மேலிடத்திற்கு எடுத்துரைத்தார். இதனையடுத்து, விமானத்தில் சென்று கொண்டிருந்த மத்திய அமைச்சர்கள் இருவரையும் மீண்டும் அதே நாளில் சென்னைக்கு வரவழைத்தார்.

இதைத்தொடர்ந்து பாமக - பாஜக கூட்டணி உறுதியானது. பாஜக கூட்டணியில் பாமகவை இடம்பெற செய்ய அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை டெல்லி மேலிடத்திற்கு அளித்த அழுத்தம் காரணமாகவே மீண்டும் பாஜக - பாமக கூட்டணி அமைந்துள்ளது எனக் கூறப்படுகிறது. இதற்கு முன்னதாக, 2019 அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக, பாமக ஆகிய இரண்டு கட்சிகளும் அங்கம் வகித்தன. இப்போது, பாஜக தலைமையிலான கூட்டணியில் பாமக இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் அக்கட்சியின் உயர்மட்டக் குழுவினர், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோருடன் நேற்று திங்கட்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், 'கட்சியின் எதிர்கால நலனையும், தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலைகளையும் கருத்தில் கொண்டு பார்த்தால், பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுவதே சாலச்சிறந்தது' அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.

மேலும், இது தொடர்பாக கட்சி நிர்வாகிகளுக்கு பாஜகவுடன் கூட்டணி அமைப்பதற்கான காரணத்தையும் விரிவாக விளக்கினார். இதனையடுத்து கட்சி நிர்வாகிகள் அனைவரும் ஒருமனதாக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்ததோடு, கூட்டணி கட்சிகளின் வெற்றிக்காகவும் இணைந்து பணியாற்றுவதற்கு தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், தைலாபுரத்தில் உள்ள ராமதாஸ் இல்லத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணமலை கூட்டணி மற்றும் தொகுதிகள் பங்கீடு உள்ளிட்டவைகள் குறித்த ஒப்பத்தத்தில் கையெழுத்திடுவதற்காக இன்று காலை 6.52 மணியளவில் வந்தார். பாஜக - பாமக கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு முன்பு பாமக நிறுவனர் ராமதாஸிடம் அண்ணாமலை பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், ஜி.கே.மணி, வழக்கறிஞர் பாலு உள்ளிட்டோர் அப்போது உடனிருந்தனர்.

இதனையடுத்து, சேலத்தில் இன்று காலை நடக்க உள்ள பாஜக பொதுக்கூட்டம் மற்றும் தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி சிறப்புரையாற்றுகிறார். இக்கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் பிரதமர் மோடியுடன் நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக கூட்டணியில் பாமக 10 தொகுதிகளில் போட்டியிட உள்ள இன்று அறிவிக்கப்பட்டது. கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பான ஒப்பந்தத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோர் கையெழுத்திட்டனர். தமிழ்நாட்டில் அதிமுக, திமுக ஆகிய இரண்டு பெரிய கட்சிகளின் கூட்டணிகளின் நடுவே பாஜக - பாமக ஆகியோரின் கூட்டணி புதியதொரு கூட்டணியாக அமைந்துள்ளது.

தருமபுரி, கடலூர், அரக்கோணம், ஆரணி, விழுப்புரம், ஸ்ரீபெரும்புதூர், விருதுநகர் உள்ளிட்ட மக்களவைத் தொகுதிகளைப் பெற பாமக முயற்சித்து வந்தது. தருமபுரியில் செந்தில்குமார், ஆரணியில் ஏ.கே.மூர்த்தி, கடலூரில் அன்புமணி ராமதாஸின் மனைவி டாக்டர் சௌமியா அன்புமணி, அரக்கோணத்தில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் வேலு, விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி கிடைக்கும் பட்சத்தில் அக்கட்சியின் பொருளாளர் திலக பாமா ஆகியோர் போட்டியிட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

வழக்கமாக, அக்கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தருமபுரியில் போட்டியிடும் தொகுதியாக இருந்த நிலையில், தற்போது அவர், மாநிலங்களவை எம்பி பதவிக்காக காத்திருப்பதாக தெரியவருகிறது. இதனால், தருமபுரி தொகுதியில் இம்முறை செந்தில்குமார் போட்டியிடுவார் எனக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: "அதிமுகவை வீழ்த்தும் அஸ்திரம்" டெல்லி குழுவை மீண்டும் அழைத்த அண்ணாமலை.. இறுதியாகிறதா பாஜக - பாமக கூட்டணி!

Last Updated :Mar 19, 2024, 9:42 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.