திருப்பூர் : இரண்டு நாட்கள் சுற்றுப் பயணமாக பிரதமர் மோடி தமிழ்நாடு கேரளா, மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு சென்று உள்ளார். கேரளாவில் நடைபெற்ற இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி தொடர்ந்து திருப்பூரில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மேற்கொண்டு வரும் என் மண் என் மக்கள் யாத்திரையின் நிறைவு விழாவில் கலந்து கொண்டார்.
கோவை சூலூரில் உள்ள விமானப்படை தளத்திற்கு தனி விமானம் மூலம் பிரதமர் மோடி வந்தடைந்தார். தொடர்ந்து அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி திருப்பூர் பல்லட்டத்திற்கு வந்தார். பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. திறந்தவெளி வாகனத்தில் பிரதமர் மோடி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர்.
என் மண் என் மக்கள் யாத்திரை நிறைவு விழா நிகழ்ச்சி மேடையை நோக்கி பிரதமர் மோடி மக்களை பார்த்து கை அசைத்தபடி சென்றார். தொடந்து விழாவில் பேசிய பிரதமர் மோடி, "இன்று தமிழகம் வந்துள்ள நான் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரை நினைத்து பார்க்கிறேன். ஏழைகளுக்கு கல்வி, மருத்துவ வசதி போன்றவற்றை செய்தவர் எம்.ஜிஆர். அதனால்தான் அவர் இன்னமும் மக்களால் நினைத்து பார்க்கப்படுகிறார்.
அப்படிப்பட்ட எம்.ஜி.ஆரை அவமதிப்பது போல திமுக ஆட்சி நடைபெறுகிறது. எம்.ஜி.ஆரை போலவே ஜெயலலிதாவும் மக்கள் மனதில் நிலை பெற்றுள்ளார். ஜெயலலிதாவுடன் நட்புறவுடன் பழகியவன் என்ற முறையில் நான் கூறுகிறேன். ஜெயலலிதா தமிழ்நாட்டு மக்களோடு எந்த வகை தொடர்பு கொண்டிருந்தார் என்பது எனக்கு தெரியும்.
தமிழகத்தில் கடைசி நல்லாட்சியை கொடுத்தவர் ஜெயலலிதாதான். அவருக்கு இந்த இடத்தில் நான் அஞ்சலி செலுத்துகிறேன். மத்தியில் 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த திமுக - காங்கிரஸ் கூட்டணி மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. இந்தியா கூட்டணி தமிழகத்திற்கு வளர்ச்சிகான பணிகளை செய்ய மாட்டார்கள்.
இந்தியா கூட்டணியின் ஒரே நோக்கம் மோடியை வெறுப்பதே. குடும்ப ஆட்சியை எப்படி நடத்துவது என இந்தியா கூட்டணி சிந்தித்து வருகிறது. மேலும் மத்திய அளவில் இந்தியா கூட்டணி தோல்வியை ஒப்புக்கொண்டு விட்டது. 2024ஆம் ஆண்டு அதிகம் பேசப்படும் கட்சி பாஜக. தமிழ்நாட்டிற்கு 3 மடங்கு நிதி மத்திய அரசு வழங்கி உள்ளது.
மற்ற மாநிலங்களை விட தமிழகம் மிகப் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து உள்ளது. தமிழ்நாட்டில் ஆட்சியில் இல்லாத போதும் தமிழகத்தை இதயத்தில் வைத்து உள்ளது பாஜக. தமிழகத்தை ஆளுகின்ற கட்சி தமிழக இளைஞர்களின் வேலை வாய்ப்பை தடுக்கின்றனர். இந்திய தொழில்துறை வளர்ச்சியில் கொங்கு மண்டலத்தின் பங்கு என்பது அளப்பறியதாக உள்ளது.
இதையும் படிங்க : பொது மக்கள் பார்வைக்கு வரும் அபுதாபி இந்து கோயில்! எப்போ தெரியுமா?