தூத்துக்குடி: பாஜகவின் என் மண் என் மக்கள் பயணத்தின் நிறைவு விழா உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டிற்கு 2 நாள் பயணமாக வருகை தந்துள்ளார். நேற்று, பல்லடத்தில் பாஜக பொதுக்கூட்டத்தை முடித்த பிரதமர், ஹெலிகாப்டர் மூலம் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்தார்.
அதனைத் தொடர்ந்து, தூத்துக்குடியில் குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதள அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, சுமார் ரூ.17 ஆயிரத்து 300 கோடி மதிப்பிலான திட்டங்களைத் துவங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, மேடையில் பேசிய பிரதமர் மோடி உரையாற்றுவதற்கு முன்னர், மேடையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர்கள் சர்பானந்தா சோனோவால், எல்.முருகன், தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் தூத்துக்குடி எம்பி கனிமொழி ஆகியோர் அமர்ந்திருந்தனர்.
அப்போது தனது உரையைத் துவங்கிய பிரதமர் மோடி, ஆளுநர் உள்ளிட்ட மேடையில் இருந்தவர்களின் பெயரை வரிசையாக கூறியபோது, திமுக துணை பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதியின் பெயரை மட்டும் குறிப்பிடாமல் கடந்து, வணக்கம் என தமிழில் கூற, பின்னர் பேசத் துவங்கினார்.
முன்னதாக, நேற்று நடந்த பாஜக நிகழ்ச்சியில், அதிமுக முன்னாள் முதலமைச்சர்களான எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா குறித்து புகழாரம் செய்தார். பாஜக - அதிமுக கூட்டணி பிளவுபட்டுள்ள நிலையில், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா குறித்து பேசியது தேர்தலில் ஓட்டு வாங்குவதாகத்தான் எனவும், திமுக குறித்து எம்.ஜி.ஆரை அவமதிப்பது போல திமுக ஆட்சி நடைபெறுகிறது எனவும் பேசியது ஏற்கனவே அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாகியுள்ளது.
ஏற்கனவே, அம்மாவட்ட அமைச்சரான அனிதா ராதாகிருஷ்ணன், தனக்கான அழைப்பிதழ் இல்லாததால் நிகழ்வை புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தமிழ்நாடு இன்று புதிய உயரத்தை எட்டியுள்ளது - தூத்துக்குடியில் பிரதமர் மோடி பேச்சு!