ETV Bharat / state

மாலையாக மாறிய அரசு அடையாள அட்டைகள்.. திருச்சியில் நூதன முறையில் வேட்பு மனு தாக்கல்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 20, 2024, 6:46 PM IST

Trichy independent candidate
Trichy independent candidate

Trichy independent candidate: திருச்சியில் அரசின் அடையாள அட்டைகளை கழுத்தில் மாட்டிக்கொண்டு வந்த நபர், நூதன முறையில் சுயேட்சை வேட்பாளர் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

Trichy independent candidate

திருச்சி: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் ஏப்ரல் 19-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இந்த நிலையில், இன்று முதல் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், வேட்பு மனுத் தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது.

அதன்படி, திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட, திருச்சி உறையூர் பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர் ராஜேந்திரன் என்பவர், திருச்சி மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான பிரதீப் குமாரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

டிஜிட்டல் இந்தியாவில் வேட்பாளர்கள் பணம் செலுத்த டிஜிட்டல் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் எனக் கூறி, வேட்பு மனு தாக்கல் செய்ய வரும் பொழுது, தன்னுடைய கழுத்தில் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், ஏடிஎம் கார்டுகள் உள்ளிட்டவற்றை மாலையாக அணிந்து வந்தார்.

பின்னர் சுயேட்சை வேட்பாளர் ராஜேந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “சுதந்திர நாட்டில், சுதந்திரம் பல நேரங்களில் இல்லை. டிஜிட்டல்மயம் என்கிறார்கள், ஆனால் நடைமுறையில் வரவில்லை. டிஜிட்டல் முறையில் பணம் செலுத்த வசதிகள் ஏற்படுத்தவில்லை.

தனியார் மற்றும் அரசு வங்கிகளில் கொடுக்கப்பட்ட ஏடிஎம் டெபிட் கார்டுகள், பல வங்கி ஏடிஎம்களில் செயல்படவில்லை. வேட்பு மனுத் தாக்கலுக்கு பணம் கட்ட டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை வசதி இல்லை என்பது வேதனை. சில நாட்களுக்கு முன்னர், மத்திய அமைச்சர் காய்கறி கடை விற்பவர்களிடம் கியூ.ஆர் குறி (QR CODE) வைத்துக்கொள்ள வேண்டும் என்றார். ஆனால், மத்திய அரசின் ரயில்வே துறையில் கூட நடைமுறைப்படுத்தவில்லை” என்றார்.

மேலும், டிஜிட்டல்மயமாக்கலில் பல குளறுபடிகள் உள்ளது என்பதை சுட்டிக்காட்டவே இது போன்று நூதன முறையில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்தேன் எனவும் அவர் கூறினார்.

இதையும் படிங்க: தருமபுரி சிட்டிங் எம்பி செந்தில்குமாருக்கு சீட் மறுக்கப்பட்டது ஏன்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.