ETV Bharat / state

மயிலாடுதுறை புத்தக்கத் திருவிழாவில் தொலைநோக்கி.. நட்சத்திரங்களை கண்டு மகிழ்ந்த மக்கள்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 4, 2024, 2:07 PM IST

மயிலாடுதுறை புத்தகத் திருவிழா
மயிலாடுதுறை புத்தகத் திருவிழா

Mayiladuthurai Book Fair: மயிலாடுதுறையில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில் இருந்த கிரகங்கள், நட்சத்திரங்களைக் காண உதவும் தொலைநோக்கி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இதனால் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் தொலைநோக்கி மூலம் கிரகங்களைக் கண்டு ரசித்தனர்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம், பள்ளிக்கல்வித்துறை, பொதுநூலக இயக்ககம் சார்பில் மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரி வளாகத்தில், மயிலாடுதுறை மாவட்டத்தின் 2ஆம் ஆண்டு புத்தகக் கண்காட்சி நேற்று (பிப்.3) தொடங்கியது. இந்த புத்தகக் கண்காட்சி வரும் 12ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த நிலையில், புத்தகத் திருவிழாவின் 2ஆம் நாளான இன்று (பிப்.4) மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குனர் டாக்டர் ஜெய.ராஜமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு "படிப்போம், படைப்போம்" என்கிற தலைப்பில் மாணவ மாணவிகள் புத்தகங்களை வாசிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து எடுத்துரைத்தனர்.

இந்த புத்தகத் திருவிழாவில் கம்பர், மூவலூர் ராமாமிர்தம், மாயவரம் வேதநாயகம், கல்கி உள்ளிட்ட மயிலாடுதுறை மண்ணில் பிறந்த இலக்கிய அறிஞர்கள் பலரின் புகழ் பெற்ற புத்தகங்களுக்காக பிரத்யேகமாக தனி அரங்கம் அமைக்கப்பட்டிருந்தது வாசகர்கள், பொதுமக்கள் என அனைவரையும் கவர்ந்தது.

அந்த வகையில், கல்கியின் "பொன்னியின் செல்வன்", சாண்டில்யணின் "கடல் புறா" போன்ற பல புகழ் பெற்ற எழுத்தாளர்களின் புத்தகங்கள், பழங்கால இந்தியா முதல் தற்கால இந்தியா மற்றும் எதிர்கால இந்தியாவின் வளர்ச்சி ஆகியவற்றை விளக்கும் எண்ணற்ற புத்தகங்கள் என வாசகர்களைக் கவரும் வகையில் ஏராளமான புத்தகங்கள் இந்த புத்தகக் கண்காட்சியில் இடம் பெற்று இருந்தன.

மேலும், பிரபல வரலாற்றுத் தலைவர்களின் வாழ்க்கை வரலாறு புத்தகங்கள், பிரபல நாவல்கள், மாணவர்களுக்கு போட்டித் தேர்வுகளுக்குத் தேவையான அனைத்து வகையான புத்தகங்கள், பொது அறிவுத்திறனை மேம்படுத்த உதவும் புத்தகங்கள் என 80 அரங்குகளில் பல்லாயிரக்கணக்கான புத்தகங்கள் விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன.

அதுமட்டுமல்லாமல், தமிழக அரசின் நலத்திட்டங்களை விளக்கும் திட்ட விளக்க கண்காட்சி அரங்கம், காவல்துறை சார்பில் குற்றங்களைத் தடுக்கும் விழிப்புணர்வு அரங்கு உள்ளிட்ட பல்வேறு அரங்குகள் பொதுமக்களைக் கவர்ந்தது. குறிப்பாக, பிகைன்ட் எர்த் சேனல் குழுவினர் அமைத்திருந்த கிரகங்களைக் காணும் தொலைநோக்கி பொதுமக்கள் அனைவரையும் கவர்ந்தது.

தொலைநோக்கி மூலம் கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களைக் காண அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் வரிசையில் நின்று கண்டு ரசித்தனர். மேலும், மாணவர்களுக்காக அமைக்கப்பட்டிருந்த ரோபோடிக்ஸ் தொழில்நுட்ப அரங்கம், செயற்கை நுண்ணறிவு கற்பது குறித்த விழிப்புணர்வு அரங்கம் மாணவர்களை மிகவும் கவர்ந்தது.

இதையும் படிங்க: 74 வயதில் முனைவர் பட்டம்.. ஓய்வு பெற்ற பேருந்து நடத்துநரின் தமிழ் ஆர்வம் குறித்த சுவாரஸ்ய தகவல்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.