ETV Bharat / state

மீண்டும் குடியிருப்புக்குள் நுழையும் படையப்பா யானை.. சிசிடிவி காட்சிகள் வெளியானது! - Padayappa elephant

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 2, 2024, 3:04 PM IST

Padayappa Elephant
Padayappa Elephant

Padayappa Elephant: மூணாறு அருகே உள்ள தேவிகுளம் குடியிருப்புப் பகுதியில், உணவைத் தேடி இரவு பகலாக சுற்றி வரும் படையப்பா யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மூணாறு அருகே உணவு தேடி இரவு பகலாக சுற்றி வரும் படையப்பா யானை

இடுக்கி: கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள மூணாறு பகுதியில், பொதுமக்களை அச்சுறுத்தி வந்த படையப்பா காட்டு யானை, உணவு தேடி மீண்டும் குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்துள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) மூணாறு அருகே உள்ள தேவிகுளம் பகுதியில் நுழைந்த படையப்பா யானை, சாலை அருகே உள்ள ஹோட்டலின் முன்பு சென்று உணவைத் தேடிப்பார்த்துள்ளது. ஆனால், அங்கு எதுவும் கிடைக்காததால், எவ்வித சேதமும் ஏற்படுத்தாமல் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளது. இதுதொடர்பான காட்சிகள் அருகே இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

மேலும், தேவிகுளம் அருகே குடியிருப்புப் பகுதிகள் அதிகம் உள்ளது என்பதால், எந்த நேரமும் யானை உணவு தேடி வர வாய்ப்புள்ளது என அப்பகுதி மக்கள் அச்சத்துடனே இருந்து வருகின்றனர். எனவே, படையப்பா யானையை வனப்பகுதிக்குள் விரட்ட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

கடந்த ஒரு வாரமாக தேவிகுளம் பகுதியில் முகாமிட்டுள்ள படையப்பா யானை, சாலையில் வரும் வாகனங்களை வழிமறிப்பதும், விவசாய நிலங்களுக்குச் சென்று உணவுகளை உண்டு நாசம் செய்வதும், உணவு தேடி குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைந்து பொதுமக்களை அச்சுறுத்துவதுமான செயல்களில் ஈடுபட்டு வருவதால் அப்பகுதியினர் பீதியில் உள்ளனர்.

இதற்கிடையே, நேற்று பத்தனம்திட்டா மாவட்டம், துலாப்பள்ளி அருகே உள்ள குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த காட்டு யானையின் சத்தம் கேட்டு ஒருவர் விரட்ட முயன்றபோது, யானை தனது தும்பிக்கையால் அவரை தாக்கியுள்ளது. இதில் அந்த நபர் உயிரிழந்துள்ளார். தற்போது கடந்த 3 மாதத்தில் மட்டும் கேரளாவில் காட்டு யானை தாக்குதலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. இச்சம்பவம் மக்களிடையே அச்சத்தை மேலும் அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க: 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத முடியாத ஏக்கத்தில் மாணவன் தற்கொலை.. தேனியில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்! - School Boy Suicide In Theni

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.