ETV Bharat / state

ராஜீவ் காந்தி கொலை வழக்கு; முருகன் லண்டன் செல்ல விசா கோரிய வழக்கு.. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தெரிவித்தது என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 7, 2024, 8:15 PM IST

passport-to-rajiv-gandhi-murder-convict-murugan-has-been-transferred-case-to-mhc-cj
ராஜீவ் காந்தி கொலை வழக்கு; முருகன் லண்டன் செல்ல விசா கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தெரிவித்தது என்ன?

Rajiv Gandhi murder convict Murugan: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்ட முருகன் லண்டன் செல்ல விசாவும், இலங்கை செல்ல பாஸ்போர்ட் வழங்க உத்தரவிடக் கோரி நளினி தாக்கல் செய்த வழக்கிலிருந்து விலகுவதாக நீதிபதி சுந்தர் மோகன் தெரிவித்தார். இதையடுத்து, நளினி தாக்கல் செய்த வழக்கை வேறு அமர்வில் பட்டியலிடும் வகையில் தலைமை நீதிபதியின் ஒப்புதலைப் பெறும்படி பதிவுத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்ட முருகன் லண்டன் செல்ல விசாவும், இலங்கை செல்ல பாஸ்போர்ட் வழங்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முருகன் மனைவி நளினி மனுத் தாக்கல் செய்துள்ளார்.

முருகன் படிப்பிற்காக 1991ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கையிலிருந்து தமிழகம் வந்தார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 1991ஆம் ஆண்டு ஜூன் மாதம் இருவரும் கைது செய்யப்பட்டோம். இந்த வழக்கை விசாரித்த தடா நீதிமன்றம் 24 பேருக்கு மரணதண்டனை விதித்து 1998ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது.

உச்சநீதிமன்றமும் 1999ஆம் ஆண்டு மரண தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தது. நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு கடந்த 2000ஆம் ஆண்டு தனது தண்டனையை ஆயுள் தண்டனையாகவும், கணவர் முருகனின் தண்டனையை ஆயுள் தண்டனையாகவும் மாற்றி 2014ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் 2018ஆம் ஆண்டு 7 பேரையும் விடுதலை செய்யத் தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பியது. ஆளுநர் காலதாமதமின்றி ஒப்புதல் வழங்க உத்தரவிடக்கோரிய வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், விடுதலை செய்ய உத்தரவிட்டது. அதன்படி, 2022ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டோம்.

ஆனாலும், சிறப்பு முகாமில் கணவர் முருகன் கடந்த 2022ஆம் ஆண்டிலிருந்து அடைக்கப்பட்டுள்ளார். உரிய அனுமதி இல்லாமல் வெளிநாட்டுக் குற்றவாளிகளை முகாமிலிருந்து வெளியே அனுப்ப முடியாது என மத்திய அரசு தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.

லண்டனில் பணி புரிந்து வரும் தனது மகள் மெஹ்ராவை கடந்த 16 ஆண்டுகளாகப் பார்க்கவில்லை. லண்டனில் வசிக்கும் தன் மகளுடன் சேர்ந்து வாழ விரும்புவதால், அனைத்து நாடுகளுக்கும் செல்வதற்கான பாஸ்போர்ட் வழங்கக் கோரி இருவரும் விண்ணப்பித்த நிலையில், ஜனவரி 30ஆம் தேதி நேர்காணலுக்காக அழைக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தன்னுடைய நேர்காணல் முடிந்துவிட்ட நிலையில், நேர்காணலில் கலந்து கொள்ள அனுமதிக்காததால் கணவர் முருகன் இலங்கை துணைத் தூதரகம் அழைத்தபோது நேரில் ஆஜராக முடியவில்லை. முகாமில் உள்ள மோசமான சூழல் காரணமாக ஏற்கனவே 1 மாதத்தில் 2 பேர் இறந்துள்ளதால், தன்னுடைய கணவருக்கு எதுவும் நடக்கும் முன், இருவரும் மகளுடன் சேர விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.

எனவே, தன் கணவர் முருகன் சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்திற்குச் சென்று நேர்காணலில் கலந்து கொள்வதற்கான அனுமதியை வழங்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும். அங்குச் சென்று வருவதற்குப் பாதுகாப்பு தேவைப்படும் பட்சத்தில், உரிய பாதுகாப்பு வழங்கக் காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும்" என மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் மற்றும் சுந்தர் மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கை விசாரிப்பதிலிருந்து விலகுவதாக நீதிபதி சுந்தர் மோகன் தெரிவித்தார். இதையடுத்து, நளினியின் வழக்கை வேறு அமர்வில் பட்டியலிடும் வகையில் தலைமை நீதிபதியின் ஒப்புதலைப் பெறும்படி பதிவுத்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: இண்டிகோ விமானத்தில் குஷன் இல்லாத இருக்கைகள்! இணையத்தில் வைரலாகும் பெண் பயணியின் பதிவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.