ETV Bharat / state

வலிப்பு வந்த குழந்தைக்கு சிகிச்சை அளிக்க தாமதம் என புகார்.. மயிலாடுதுறை அரசு மருத்துவமனை முன்பு உறவினர்கள் போராட்டம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 28, 2024, 5:15 PM IST

etv bharat
etv bharat

Mayiladuthurai GH: மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில், குழந்தைக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் இல்லாததாக கூறி, குழந்தையின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குழந்தையின் பெற்றோர் ரத்தினவேல் பேட்டி

மயிலாடுதுறை: மயிலாடுதுறை சேந்தங்குடி பகுதியைச் சேர்ந்தவர்கள் ரத்தினகுமார் - கிருஷ்ணவேணி தம்பதியினர். இவர்களின் 9 மாத கைக்குழந்தைக்கு இன்று காலை வீட்டில் வலிப்பு நோய் ஏற்பட்டுள்ளது. இதனால் பதறிப் போன பெற்றோர், குழந்தையை மயிலாடுதுறை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

இன்று காலை 6 மணியளாவில் குழந்தை சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், 4 மணி நேரமாக எந்த மருத்துவர்களும் சிகிச்சை அளிக்க முன்வரவில்லை என கூறப்படுகிறது. மேலும், அங்கே பணிபுரியும் செவிலியர்கள், குழந்தைக்கு சிகிச்சை அளிப்பதற்கான எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல், வெளியில் சென்று மருந்து வாங்கி வருமாறு ஒரு துண்டு சீட்டில் எழுதிக் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த ரத்தினகுமார் மற்றும் அவரது உறவினர்கள், அரசு மருத்துவமனை முன்பு கைக்குழந்தையுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர், இது குறித்து தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து, போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை அப்புறப்படுத்த முயன்றுள்ளனர்.

இதனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக போராட்டம் கைவிடப்பட்டது.

இது குறித்து குழந்தையின் பெற்றோரான ரத்தினகுமார் கூறுகையில், "நாங்கள் சேந்தமங்கலத்தில் இருந்து இங்கு வந்து இருக்கிறோம். இன்று காலை என்னுடைய பெண் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் வலிப்பு ஏற்பட்டுவிட்டது. இதனையடுத்து குழந்தையை அழைத்துக் கொண்டு, மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு வந்தோம். அப்போது பணியில் எந்த மருத்துவர்களும் இல்லை எனவும், 9 மணிக்குத்தான் மருத்துவர்கள் வருவார்கள் என அலட்சியப் போக்காக கூறினர்.

இதனால் நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டோம், தற்போது குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, அவர் நலமாக உள்ளார். வசதி உள்ளவர்கள் தனியார் மருத்துவமனைக்குச் செல்வார்கள். எங்களைப் போன்றவர்கள் அரசு மருத்துவமனையை நம்பித்தான் உள்ளோம். காலை 6 மணிக்கு மருத்துவர்கள் இருந்தார்கள் என்றால், இந்த போராட்டம் நடந்து இருக்காது" என்றார்.

இதையும் படிங்க: ஹிமாச்சலில் 15 பாஜக எம்.எல்.ஏக்கள் அதிரடி இடைநீக்கம்.. ஆட்சியை இழக்கிறதா காங்கிரஸ்? - நடப்பது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.