ETV Bharat / state

பழனி முருகன் கோயில் பஞ்சாமிர்தம் சர்ச்சை; காலாவதியானதை இருப்பு வைப்பதில்லை.. அறங்காவலர் குழு தலைவர் விளக்கம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 11, 2024, 8:42 AM IST

Updated : Feb 11, 2024, 9:13 AM IST

palani murugan temple trustee clarify the panchamirtham expiry issue
பழனி முருகன் கோயில் அறங்காவலர் குழு தலைவர் விளக்கம்

Palani Murugan Temple: பழனி முருகன் கோயிலில் விற்பனை செய்யப்படும் பஞ்சாமிர்தம் தரமாக இருப்பதாகவும், தயாரிப்பு தேதி அச்சிடப்பட்டுள்ள தேதியில் இருந்து கூடுதலாக 15 நாட்கள் வரை வைத்து பக்தர்கள் பயன்படுத்தலாம் என்று பழனி கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் சந்திரமோகன் தெரிவித்துள்ளார்.

பழனி முருகன் கோயில் அறங்காவலர் குழு தலைவர் விளக்கம்

திண்டுக்கல்: அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாக விளங்குவது பழனி முருகன் கோயில். கோயில் நிர்வாகம் சார்பில், மலை அடிவாரம் பகுதியில் இருக்கக்கூடிய கடையில் விற்பனை செய்யப்படும் லட்டு, முறுக்கு, அதிரசம், உள்ளிட்ட பொருட்கள் கெட்டுப் போனதாகவும், பூசனம் பிடித்தும், பஞ்சாமிர்தம் குறிப்பிட்ட தேதி முடிந்த பின்பும், விற்பனை செய்யப்படுவதாகவும் பக்தர்கள் குற்றம் சாட்டினர்.

இந்நிலையில், மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி கலைவாணி தலைமையில் அதிகாரிகள் 7 பேர் பிரசாதம் தயாரிக்கும் கூடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர், பழனி அறங்காவல் குழு தலைவர் சந்திரமோகன் மற்றும் கோயில் இணை ஆணையர் பஞ்சாமிர்தம் தயாரிப்பு கூடங்களில் நேற்று (பிப்.10) ஆய்வு மேற்கொண்டனர். இதனைத்தொடர்ந்து கோயில் தலைமை அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அறங்காவலர் குழுத் தலைவர், "பழனி தண்டாயுதபாணி கோயில் சார்பாக வழங்கக்கூடிய பிரசாதம் தரமாகத் தான் கொடுக்கப்படுகிறது. வியாபார நோக்கத்திற்காக வழங்கப்படவில்லை. உணவுக் கட்டுப்பாடு அதிகாரிகள் ஆய்வு செய்ததில் எந்த வித பிரச்சினைகள் இல்லை என்று கூறி உள்ளனர். உணவு கட்டுப்பாடு அதிகாரிகள் பிரசாதங்கள் பேக்கிங்-ஐ மாற்ற அறிவுறுத்தி உள்ளனர்.

அதன்படி, பேக்கிங் மாற்றுவதற்கான ஏற்பாடுகள் நடைபெறும். மேலும், பிரசாதங்கள் தயாரித்தவுடன் பேக்கிங் செய்யும் முன் எண்ணெய்யை நன்கு வடித்து பேங்கிங் செய்யத் தொழிலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே புதிதாக ஆயில் டிரையர் ஆர்டர் செய்யப்பட்டு உள்ளது. வந்ததும் நடைமுறைப்படுத்தப்படும். முறுக்கு, பூந்தி தயாரிப்பதற்கான ஆயில் ஒரு தடவைக்கு மேல் பயன்படுத்தப்படவில்லை.

மேலும், பஞ்சாமிர்தம் காலாவதி தேதி முடிந்த பின்பும், கூடுதலாக 15 நாட்கள் வரை பயன்படுத்தலாம். இதுகுறித்து பஞ்சாமிர்த டப்பாக்களில் பதிவு செய்ய கலந்து ஆலோசித்து முடிவு செய்யப்படும். தற்போது வழங்கப்படுகின்ற பஞ்சாமிர்தத்திற்கு பில் வழங்கப்படுகிறது. மிக விரைவில் ஆட்டோமேட்டிக் சிஸ்டம் செயல்படுத்தப்படும். காலாவதியான பஞ்சாமிர்தம் இருப்பில் இல்லை.

50 ஆயிரம் பஞ்சாமிர்த டப்பாக்கள் ஸ்டாக் இருப்பதாகத் தவறான தகவல் அளிக்கப்படுபவர் மீது கோயில் நிர்வாகம் சார்பில் தக்க நடவடிக்கை எடுக்கப்படும். வருமான நோக்கத்துடன் கோயில் நிர்வாகம் செயல்படவில்லை சேவை நோக்கத்துடன் மட்டுமே செயல்படுகிறது" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: "சீர்திருத்தம், செயல்திறன், மாற்றம் கடந்த 5 ஆண்டுகளில் நாடு கண்டது" - மக்களவையில் பிரதமர் மோடி!

Last Updated :Feb 11, 2024, 9:13 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.