ETV Bharat / state

"தமிழக மேக்னசைட் நிறுவனம் விரைவில் மூடப்படும் அவல நிலை" - பாட்டாளி தொழிற்சங்கம்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 13, 2024, 12:46 PM IST

Tamil Nadu Magnesite Industry: பல்வேறு ஊழல் முறைகேடுகளுக்கு இலக்கான தமிழ்நாடு மேக்னசைடு கனிம நிறுவனம் விரைவில் இழுத்து மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக பாட்டாளி தொழிற்சங்கத் தலைவர் எம்.பி சதாசிவம் தெரிவித்துள்ளார்.

Tamil Nadu magnesite industry
பாட்டாளி தொழிற்சங்கம் சதாசிவம்

பாட்டாளி தொழிற்சங்க தலைவர் எம்.பி சதாசிவம்

சேலம்: ஓமலூர் சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு மேக்னசைட் கனிம நிறுவனம் சுமார் 100 ஹெக்டர் நிலப் பரப்பிலிருந்து, வெள்ளைக்கல் எனப்படும் மக்னீசியம், தாதுப் பொருட்களை வெட்டி எடுத்து உபபொருட்களாக தயாரித்து விற்பனை செய்து வருகிறது.

தமிழ்நாடு அரசுக்குச் சொந்தமான இந்த கனிம நிறுவனம், சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நல்ல லாபத்தை ஈட்டி வந்தது. சுற்றுச்சூழல் அனுமதி பெறாத காரணத்தினால், சுரங்கம் மூடப்பட்டு, சுமார் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் வேலையை இழந்து தடுமாறி வருகின்றனர். தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனத்தில் சுரங்கப் பணி, கனிம விற்பனை என ஒட்டுமொத்த பிரிவுகளையும் கையாள விவரம் தெரிந்த அதிகாரிகள் இல்லாமல், நிர்வாக சீர்கேடு நிலவி வருவதாக பாட்டாளி மேக்னசைட் தொழிற்சங்கம் புகார் தெரிவித்துள்ளது.

அதாவது, ஒவ்வொரு நகர்வுகளுக்கும் கையெழுத்து பெற, சென்னையில் உள்ள உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று, பின்னர் அதனை செயல்படுத்த வேண்டுமென்ற நிலை ஏற்பட்டுள்ளதால், நிர்வாகம் சீர்குலைந்து, செயல் திறனற்று காணப்படுவதாக குற்றம் சாட்டப்படுகிறது. இதன் காரணமாக, ஏற்கனவே சுரங்கத்திலிருந்து வெட்டி எடுக்கப்பட்ட 700 டன் மெக்னீசியம் பொருட்களை, உற்பத்தி செய்து விற்பனை செய்ய முடியாமல் தேக்கம் அடைந்துள்ளதாகவும் பாட்டாளி தொழிற்சங்கம் வேதனை தெரிவித்துள்ளது.

மேலும், சுரங்கம் செயல்படாததால் மக்னீசியத்திலிருந்து காணப்படும் மற்றொரு உப கனிமமான டூனைட் எனப்படும் கருங்கற்களை வெட்டி எடுத்து விற்பனை செய்து, அதன் மூலம் வரும் வருவாயை அலுவலர்களுக்கு ஈடுகட்டி வருவதாகவும் தெரிவித்துள்ளனர். சிறப்பாக செயல்பட்டு வந்த தமிழ்நாடு மேக்னசைட் என்ற நிறுவனம், தற்போது கருங்கல் வெட்டி எடுக்கும் தமிழ்நாடு டூனைட் நிறுவனமாக பெயர் மாறிவிடுமோ என்ற அச்சம் நிலவுவதாகவும், தொழிற்சங்க நிர்வாகிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

இந்த நிலை நீடிக்குமேயானால், சேலம் தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனம் விரைவில் இழுத்து மூட வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளதால், தமிழக அரசு உடனடியாக இந்திய ஆட்சிப் பணி அதிகாரி ஒருவரை மேலாண்மை இயக்குநராக நியமித்து, மீண்டும் நிறுவனத்தை செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், மேக்னசைட் நிறுவனத்தில் 30 வருடங்களுக்கு முன்பு போடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், வாரிசு வேலையை வழங்கவும், அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாட்டாளி தொழிற்சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக பாட்டாளி தொழிற்சங்கத்தின் தலைவர் எம்.பி.சதாசிவம் அளித்த பேட்டியில், "ஒப்பந்த பணியாளர்களை மட்டுமின்றி நிரந்தர பணியாளர்களுக்கும், தமிழ்நாடு மேக்னசைட் நிர்வாகம் மிகப்பெரிய பொருளாதார இழப்பைக் கொடுத்து வருகிறது. நிரந்தர ஊழியர்கள் இறந்துவிட்டால், அவர்கள் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் வாரிசுதாரர்களுக்கான பணி நியமன ஆணையை வழங்காமல் இழுத்தடித்து வருகிறது.

மேலும், 4,000 டன் அளவுக்கு மேக்னசைட் பொருட்களை விற்பனை செய்யாமல் கிடப்பில் போட்டு உள்ளது. இது தமிழக அரசுக்கு மிகப்பெரிய வருமான இழப்பை தரக்கூடிய விஷயம். எனவே, இதற்கென தனியாக ஐஏஎஸ் அதிகாரியை நியமித்து, உரிய நடவடிக்கையை விரைந்து தமிழக அரசு எடுக்க வேண்டும் எனவும், பல நூறு தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரைப் பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இதையும் படிங்க: தமிழக சட்டப்பேரவை தொடங்கியது.. இன்று ஆளுநர் உரை மீதான விவாதம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.