சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று 2024-25ம் ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அதில், தமிழகத்தில் உள்ள கிராமங்களில் மறுமலர்ச்சி ஏற்படுத்திடும் வகையில், "ஒரு கிராமம் ஒரு பயிர்" என்ற புதிய திட்டம் 15 ஆயிரத்து 280 வருவாய் கிராமங்களில் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் ஒரு கிராமத்திற்கு ஒரு பயிர் என ஐந்து முதல் பத்து ஏக்கர் பரப்பில், நெல், சோளம், மக்காச்சேளம், கம்பு, குதிரைவாலி, கேழ்வரகு, துவரை, உளுந்து, பச்சைப்பயறு, நிலக்கடலை, எள், சூரியகாந்தி, பருத்தி, கரும்பு போன்ற முக்கியப் பயிர்களுக்கான நிலம் தயாரிப்பு, உயர் விளைச்சல் ரகங்களைப் பயன்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விதை நேர்த்தி, விதைப்பு, ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை உட்பட்ட, விதைப்பு முதல் அறுவடை வரை அனைத்து தொழில்நுட்பங்கள் குறித்த செயல் விளக்கங்களும் முழுவதுமாக வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நன்மை செய்யும் பூச்சிகளைத் தெரிந்து கொள்ளவும், தீமை செய்யும் பூச்சிகளைத் தெரிந்து கொல்லவும் ஏதுவாக "நிரந்தரப் பூச்சிக் கண்காணிப்புத் திடல்கள்" வயல்களில் அமைக்கப்பட்டு, உரிய பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகள் விவசாயிகளுக்குப் பரிந்துரைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வேளாண் பட்ஜெட்டில் முக்கனி மேம்பாட்டு சிறப்புத் திட்டம் அறிவிப்பு - முழு விவரம்!