ETV Bharat / state

ஈரோடு குழந்தைக்கு பெங்களூரில் தமிழக மருத்துவக் காப்பீடு மூலம் கல்லீரல் அறுவை சிகிச்சை!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 18, 2024, 9:52 AM IST

Updated : Feb 18, 2024, 10:05 AM IST

Erode: 22 லட்சம் ரூபாய் வரை செலவாகக்கூடிய கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை, தமிழக அரசின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்தின் மூலம் செய்து ஒன்றரை வயது பெண் குழந்தையின் உடல்நலம் பாதுகாக்கப்பட்டுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Etv Bharat
Etv Bharat

ஈரோடு குழந்தைக்கு பெங்களூரில் தமிழக மருத்துவக் காப்பீடு மூலம் கல்லீரல் அறுவை சிகிச்சை

ஈரோடு: ஈரோடு சூளை பகுதியைச் சேர்ந்த யோகநாதன் ரோகிணி தம்பதிக்கு, கடந்த 2022ஆம் ஆண்டு பெண் குழந்தை பிறந்துள்ளது. பிறந்து 6 மாதங்களே ஆன நிலையில், குழந்தை தன்விகாவுக்கு உடலில் ஜன்னி, வாந்தி என தொடர்ந்து பாதிப்புகள் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

அதன் பின்னர், குழந்தையை ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அப்போது, சிறுமியின் ரத்த மாதிரியை மும்பையில் உள்ள பிரபல ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். அதில், குழந்தைக்கு வளர்சிதை மாற்ற கல்லீரல் கோளாறு எனப்படும் ப்ரோபியோனிக் அசிடெமியா (Propionic acidemia) நோயால் பாதிக்கப்பட்டது தெரிய வந்துள்ளது.

அதன் பின்னர், மருத்துவர்கள் அறிவுரைப்படி, கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், குழந்தை தன்விகாவை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அனுமதித்துள்ளனர். அப்போது குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

மேலும், இந்த அறுவை சிகிச்சைக்கு 22 லட்சம் ரூபாய் வரை செலவாகக்கூடும் என்று தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே, அந்த மருத்துவமனையில் தமிழக அரசின் விரிவான மருத்துவக் காப்பீடு மூலம் செய்து கொள்ளலாம் என மருத்துவ நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர், குழந்தையின் தந்தை யோகநாதனின் கல்லீரலின் சிறு பகுதியை தானம் செய்ய முன் வந்துள்ளார்.

பின்னர், மருத்துவப் பரிசோதனைக்கு பிறகு, மருத்துவக் குழுவினர் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை செய்து, குழந்தையின் உடல்நலத்தை பாதுகாத்துள்ளனர். இந்நிலையில், குழந்தை தன்விகாவிற்கு சிகிச்சை அளித்த தனியார் மருத்துவமனையின் அறுவை சிகிச்சை தலைமை மருத்துவர் ராகவேந்திரா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது பேசிய அவர், "கல்லீரலில் ப்ரோபியோனிக் அசிடெமியா என்ற அரியவகை நோயால் குழந்தை தன்விகா பாதிக்கப்பட்ட நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நோயால் குழந்தையின் உடலில் அமிலத்தன்மை அதிகரிப்பது, குழந்தையின் வளர்ச்சியில் பின்னடைவு உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படும்.

பின்னர் குழந்தை கல்லீரல் முழுவதும் அகற்றி, தந்தையின் கல்லீரலில் 25 சதவீதம் வைக்கப்பட்டுள்ளது. இந்த அறுவை சிகிச்சை தமிழக மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மூலம் செய்யப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சைக்கு பிறகு குழந்தையின் உடல் நலம் மற்றும் வளர்ச்சி சீராக உள்ளது" எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், "தமிழகத்தில் சேலம், கோவை, ஓசூர், தருமபுரி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அதில், 2 குழந்தைகள் உள்பட சுமார் 10 பேருக்கு தமிழகத்தின் காப்பீடுத் திட்டம் மூலம் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது" எனக் கூறினார்.

மேலும், காப்பீடு இல்லாமல் அறுவை சிகிச்சை செய்ய 15 லட்சம் முதல் 22 லட்சம் ரூபாய் வரை செலவாகக்கூடும் என்றும், தமிழ்நாடு காப்பீடுத் திட்டம் மூலம் 2 குழந்தைகள் உள்பட 10 பேருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளதாக குழந்தைக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து குழந்தை தன்விகாவின் தந்தை யோகநாதன் கூறுகையில், இந்த பாதிப்பு என்பது லட்சத்தில் ஒரு குழந்தைக்கு வரும் என மருத்துவர்கள் தெரிவித்ததாகவும், குழந்தைக்கு செய்ய வேண்டிய அறுவை சிகிச்சைக்காக அரசு காப்பீடுத் திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக தெரிவித்தார்.

இதையும் படிங்க: தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பஞ்சு மிட்டாய்.. ஆய்வு கூறுவது என்ன?

Last Updated : Feb 18, 2024, 10:05 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.