ETV Bharat / state

தண்டவாளத்தில் பேரனைக் காப்பாற்றி தன்னுயிரை விட்ட பாட்டி.. தேனியில் நெஞ்சை பிழியும் சம்பவம்! - theni train accident

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 18, 2024, 7:11 PM IST

Theni train accident: தேனி அருகே பேரனின் உயிரைக் காப்பாற்றுவதற்காக தண்டவாளத்தில் நின்று இருந்த பேரனை தள்ளிவிட்டு ரயிலில் அடிபட்டு உயிரிழந்த மூதாட்டியின் சம்பவம் சோகத்தையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த பாட்டி மற்றும் தண்டவாளம் புகைப்படம்
உயிரிழந்த பாட்டி மற்றும் தண்டவாளம் புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

தேனி: தேனி அருகே ஆதிபட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் தேவியம்மாள் (64). இவர் அப்பகுதியில் ஆடுகள் மேய்த்து விவசாயப் பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில், இன்று காலை ஆதிபட்டி மேம்பாலம் கீழே செல்லும் ரயில் தண்டவாளம் அருகே, தேவியம்மாள் விவசாயப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்துள்ளார்.

அங்கு தேவியம்மாளின் 4 வயது பேரன் தேஜஸ் குமாரும், பாட்டிக்கு துணையாக உடனிருந்துள்ளார். அப்போது, அங்குள்ள ரயில் தண்டவாளத்தில் போடியில் இருந்து மதுரை நோக்கி ரயில் எஞ்சின் வந்துள்ளது. இதனைக் கவனிக்காத சிறுவன், தண்டவாளம் அருகே நின்றுள்ளான்.

அதை கவனித்த பாட்டி தேவியம்மாள், பேரனைக் காப்பாற்றுவதற்காக அவனை தண்டவாளத்தில் இருந்து தள்ளிவிட, கண்ணிமைக்கும் நேரத்தில் தேவியம்மாள் ரயிலில் அடிபட்டு தூக்கி வீசப்பட்டார். இதில் படுகாயமடைந்த தேவியம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

பாட்டி தள்ளிவிட்டதால் ரயிலில் அடிபடாமல் தப்பித்த பேரன் தேஜஸ் குமாரின் காலில் மட்டும் காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, தேஜஸ் குமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, உடனடியாக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.தொடர்ந்து, இதுகுறித்து தகவல் அறிந்த ரயில்வே போலீசார், உயிரிழந்த தேவியம்மாள் உடலைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், உயிரிழந்த தேவியம்மாள் உடலைப் பார்த்து அவரது உறவினர்கள் கதறி அழுத சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும், பேரனைக் காப்பாற்றுவதற்காக தனது உயிரை விட்ட தேவியம்மாளின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: ஜீப் மோதியதில் தூக்கி வீசப்பட்ட கல்லூரி மாணவி.. வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.