ETV Bharat / state

தமிழகத்தில் ரூ.1050 கோடி செலவில் புதிய வகுப்பறைகள் கட்டப்பட்டு வருகின்றன - அமைச்சர் ஐ.பெரியசாமி..!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 13, 2024, 3:50 PM IST

old-schools-were-refurbished-under-panchayat-development-said-minister-i-periyasamy
தமிழகத்தில் ரூ.1050 கோடி செலவில் புதிய வகுப்பறைகள் கட்டப்பட்டு வருகின்றன - அமைச்சர் ஐ.பெரியசாமி..!

Minister I.Periyasamy: தமிழகத்தில் ஆயிரத்து 50 கோடி ரூபாய் செலவில் புதிய பள்ளிக் கட்டடங்கள் கட்டும் பணிகள் முடியும் நிலையில் இருப்பதாக ஊரக வளர்ச்சித் துறை அமைச்ச ஐ.பெரியசாமி கூறியுள்ளார்.

சென்னை: தமிழகச் சட்டப்பேரவையின் இந்த ஆண்டிற்கான கூட்டம் நேற்றும் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அந்த வகையில் இரண்டாவது நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் வினா-விடை நேரத்தில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ பெரியசாமியிடம் சட்டமன்ற உறுப்பினர்கள் கேள்விகளை எழுப்பினர்.

அப்போது பேசிய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர், போகலூர் ஊராட்சி ஒன்றியம் சத்திரக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 76 மாணவர்களுக்கு, 3 பள்ளிக் கட்டடங்களில் 6 வகுப்பு அறைகள் உள்ளன. இது பள்ளியில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கைக்குப் போதுமானதாக உள்ளது.

அதில், ஓட்டுக் கட்டுமானத்தில் ஒரு வகுப்பறை மற்றும் கான்கிரீட் கட்டுமானத்தில் ஒரு வகுப்பறை வட்டார கல்வி அலுவலகத்தின் பயன்பாட்டில் உள்ளது. மேற்காணும் இரண்டு வகுப்பறைகளையும், மாணவர்களின் பயன் பாட்டிற்குக் கொண்டு வர, வட்டார கல்வி அலுவலர்க்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, சத்திரக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் புதிய கட்டடம் கட்ட தேவை எழவில்லை" எனக் கூறினார்.

அவரை தொடர்ந்து பேசிய சட்டமன்ற உறுப்பினர் சே.முருகேசன், போகலூர் ஊராட்சி ஒன்றியத்தில் புதிதாக ஒரு பள்ளி கட்டுவதற்குக் கோரிக்கையை முன்வைத்தார். அதற்குப் பதில் அளித்த ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர். "2022-23 ஆண்டில் ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளில் 6 ஆயிரம் வகுப்பறைகள் கட்டுவதற்காக 800 கோடியும், அதேபோல் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 209 கோடி செலவில் ஆயிரத்து 200 வகுப்பறைகள் கட்டவும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன் பணிகள் 90% நிறைவு பெற்றுள்ளது" எனக் கூறினார்.

மேலும் பேசிய அவர், "கடந்த 2 ஆண்டுகளில், சுமார் 30 ஆண்டுகள் பழமையான ஓட்டு பள்ளிக் கூடங்கள் உட்பட 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிக் கூடங்கள் பழுது நீக்கப்பட்டு, புதுப்பிக்கப்பட்டு வருகிறது. தேவைப்பட்டால் கூடுதல் பள்ளி கட்டங்கள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.

100 ஆண்டுகள் பழமையான பள்ளியைச் சீரமைக்கக் கோரிக்கை: அதன் பிறகு பேசிய சே.முருகேசன், "பரமக்குடி அடுத்த உரப்புளி கிராமத்தில் 100 ஆண்டுகள் பழமையான நடுநிலைப் பள்ளி உள்ளது. ஓட்டுக் கட்டத்தில் அமைந்துள்ள இப்பள்ளி, தரையை விட மூன்று அடி பல்லத்தில் உள்ளது. அந்தப் பள்ளியின் ஆசிரியர், அடிக்கடி வந்து பள்ளியில் மாணவர்களை அமர்த்தவே பயமாக இருப்பதாகப் புகார் அளிக்கிறார். எனவே, உரப்புளி ஊராட்சியில் நடுநிலையில் பள்ளி கட்டித்தர வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்" எனக் கூறினார்.

அதற்கு, "பழுதடைந்த ஆரம்பப் பள்ளி, நடுநிலைப் பள்ளிக் கூடங்களில் உள்ள 13 ஆயிரம் வகுப்பறைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 6 ஆயிரம் வகுப்பறைகள் கட்டும் பணியில், 4 ஆயிரம் வகுப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பணிகள் ஓரிரு மாதத்தில் முடிக்கப்படும். இடிக்கப்பட்டுள்ள பள்ளிக் கட்டங்களுக்குப் பதிலாகப் புதிய கட்டம் கட்டும் திட்டமும் இருக்கிறது. கண்டிப்பாகக் கட்டித்தரப்படும்" எனத் தெரிவித்தார்.

அதன் பிறகு சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை, "கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகுதியில் 40 ஆண்டுகளுக்கு மேலாக, பல ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிக் கட்டங்கள் பழுதடைந்துள்ளன. குறிப்பாக, கந்தர்வகோட்டை, பழைய கந்தர்வகோட்டை, புனல்குளம் ஆகிய பகுதிகளில் மிக அவசரமாகப் பள்ளிக் கூடம் கட்டித்தர வேண்டிய தேவை உள்ளது" எனக் கோரிக்கை முன்வைத்தார்.

அதற்கு அரசுத் தரப்பில் கோரிக்கையைப் பரிசீலனை செய்யப்படும் என்று ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார். பின்னர் பேசிய சட்டமன்ற உறுப்பினர் பொன்னுசாமி, "நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்த கொல்லிமலை ஆலத்தூர் ஊராட்சி பள்ளி தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்துள்ளது. மேலும், மாணவர்கள் தரையில் அமர்ந்து படிக்கும் நிலையும் உருவாகியுள்ளது. ஆகவே, பள்ளிக் கூடத்திற்குப் புதிய கட்டடங்கள் கட்டித்தர வேண்டும்" எனக் கேட்டுக் கொண்டார்.

அதற்கு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர், ஏற்கனவே ஆயிரத்து 50 கோடி ரூபாய் செலவில் வகுப்பறைகள் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. கல்வித்துறை அமைச்சரிடம் கோரிக்கை வைக்கும் பட்சத்தில் அந்தப் பணிகள் நடைபெற நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

ஊராட்சி நகராட்சி இணைப்பு குறித்து: மேலும், சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம் கன்னியாகுமரியில் 25 ஊராட்சியைப் பேரூராட்சி இணைப்பதாகத் தகவல் உள்ளதாகவும், மக்கள் அதனைக் கண்டித்து போராட்டம் நடத்துவதாகவும், இதற்கு அரசுத் தரப்பில் தக்கப் பதில் அளிக்க வேண்டும் என அவர் கூறினார்.

அதற்கு, "ஊராட்சிகள் - பேரூராட்சி, நகராட்சிகளுடன் இணைப்பதற்குக் கடந்த காலத்தில் தீர்மானங்கள் போடப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும், அது சம்பந்தமாகக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார். இதற்கிடையில் பேசிய நகராட்சி துறை அமைச்சர் கே.என்.நேரு, "ஊராட்சிகளை இணைக்காமல் இருக்க முடியாது. எந்தெந்த பகுதிகளில் உள்ள ஊராட்சிகள் இணைக்கப்படும் எனத் தீர்மானம் போட்டு, ஊராட்சித் தலைவர்களின் ஒப்புதல்களின் அடிப்படியில் தான் ஊராட்சிகள் இணைக்கப்படும்.

தூத்துக்குடி அருகே உள்ள மாப்பிள்ளை ஊரணி ஊராட்சியில் 45 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். அம்மக்கள் பெரும்பாலானவர்கள் 100 நாள் வேலைத் திட்டம் கிடைக்காமல் போவதாகக் கூறி ஊர்த் தலைவர்கள் நகராட்சியுடன் இணைப்பதற்கு ஒப்புதல் அளிக்க மறுக்கின்றனர்.

ஆனால், தாம்பரம் போன்ற பகுதிகளில், நகராட்சியுடன் இணைக்க வேண்டும் என மக்களே கோரிக்கை வைக்கின்றனர். எனவே, இது குறித்து ஆய்வு செய்யப்பட்டு, பொது மக்களிடம் கருத்துக் கேட்கப்பட்டு, தேவைப்படும் ஊராட்சிகளை இணைக்கப்படும். ஒட்டுமொத்தமாக 25 ஊராட்சிகளை இணைப்பதற்கு வாய்ப்பில்லை" எனக் கூறினார்.

இதையும் படிங்க: எதிர்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரம்.. பரிசீலிப்பதாக முதலமைச்சர் உறுதி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.