ETV Bharat / state

“அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளிடமிருந்து ஆட்சேபனை வரவில்லை” - கோவை ஆட்சியர் மீண்டும் விளக்கம்! - names removal from voter list

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 25, 2024, 10:43 PM IST

கோவை மாவட்ட ஆட்சியர் விளக்கம்
வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் குறித்து அரசியல் கட்சிகளிடமிருந்து ஆட்சேபனை வரவில்லை

Names removal in voter list: வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் தரப்பில் இருந்து ஆட்சேபனை எதுவும் வரவில்லை என கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கோயம்புத்தூர்: கோவை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் அதிகளவில் பெயர் நீக்கம் நடைபெற்றிருப்பதாக பாஜக குற்றம் சாட்டியுள்ள நிலையில், பெயர் நீக்கம் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் தரப்பில் இருந்து ஆட்சேபனை எதுவும் வரவில்லை என்று மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"கோவை மாவட்டத்தில் 2024ஆம் ஆண்டுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் 27 அன்று அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிடப்பட்டது.

அதன்படி, மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான மொத்த வாக்காளர் எண்ணிக்கை 30 லட்சத்து 49 ஆயிரத்து 4 ஆகும். மேற்படி வாக்காளர் பட்டியலின் அச்சிடப்பட்ட 2 பிரதிகள் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கும் வழங்கப்பட்டது.

பின்னர் நடைபெற்ற சிறப்பு சுருக்கமுறை திருத்த காலத்தில், வாக்காளர்களிடமிருந்து பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தல் உள்ளிட்ட காரணங்களுக்காக முறையே படிவம் 6, படிவம் 7, படிவம் 8 ஆகியவையும், மேலும், அரசியல் கட்சிகள் மூலமாக நியமனம் செய்யப்பட்ட வாக்குச்சாவடி முகவர்கள் மூலமாகவும் உரிய படிவங்கள் பெறப்பட்டு, தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதைத் தொடர்ந்து நவம்பர் 4, 5, 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இதன் தொடர்ச்சியாக, சிறப்பு சுருக்க முறைத் திருத்தத்திற்கான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கும் பொருட்டு, அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கான ஆய்வுக் கூட்டம், வாக்காளர் பட்டியலுக்கான சிறப்பு பார்வையாளர் தலைமையில் கடந்த 2023ஆம் ஆண்டு நவம்பர் 24 அன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில், ஏற்கனவே 2023ஆம் ஆண்டு அக்.27 அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் நீக்கம் செய்யப்பட்ட பெயர்கள் குறித்த குறிப்பான ஆட்சேபனை ஏதும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரால் தெரிவிக்கப்படவில்லை. சிறப்பு சுருக்க முறைத் திருத்த காலக்கட்டத்தில் பெறப்பட்ட படிவங்களின் விவரத் தொகுப்பானது, அரசு அலுவலகங்களின் தகவல் பலகையிலும், தேர்தல் ஆணையத்தின் வலைத்தளத்திலும் மக்களின் பரிசீலனைக்கு வெளியிடப்பட்டது.

பின்னர், 2024ஆம் ஆண்டுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் கடந்த ஜனவரி 22 அன்று அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிடப்பட்டது. இந்த பட்டியலின்படி, கோவை மக்களவைத் தொகுதிக்குட்பட்ட சூலூர், கவுண்டம்பாளையம், கோவை வடக்கு, கோவை தெற்கு, சிங்காநல்லூர் ஆகிய 5 தொகுதிகளுக்கான மொத்த வாக்காளர் எண்ணிக்கை 16 லட்சத்து 71 ஆயிரத்து 3.

இதில், 47 ஆயிரத்து 559 வாக்காளர்கள் புதியதாக சேர்க்கப்பட்டனர். 28 ஆயிரத்து 364 வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டன. (இறப்பு 6,181, நிரந்தர குடிபெயர்வு 18,934, இரட்டைப் பதிவு 3,249). இந்த விவரத்தை சரிபார்த்து கருத்து தெரிவிப்பதற்காக, அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கும் தலா 2 அச்சிடப்பட்ட பிரதிகள் வழங்கப்பட்டன.

இந்த பட்டியலில் கண்டுள்ள பெயர் நீக்கம் தொடர்பான குறிப்பான ஆட்சேபனை எதுவும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரால் வழங்கப்படவில்லை. இந்த பட்டியலும் ஜனவரி 26ஆம் தேதி நடைபெற்ற சிறப்பு கிராமசபைக் கூட்டத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு ஆட்சேபனைகள் கோரப்பட்டன.

அத்துடன், தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்கு கடைசி நாளான 2024 மார்ச் 27க்கு 10 நாள்களுக்கு முன்பு வரை, அதாவது ஜனவரி 22 முதல் மார்ச் 17 வரையிலான காலத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம் உள்ளிட்ட நடவடிக்கைகளை இணைய வழியாகவும், மேற்படி படிவங்களை நேரடியாகப் பூர்த்தி செய்து வழங்கிடும் வகையிலும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

அதன்படி, இந்தாண்டு மார்ச் 27 அன்று வெளியிடப்பட்ட தொடர் திருத்த வாக்காளர் பட்டியலில், சூலூர், கவுண்டம்பாளையம், கோவை வடக்கு, கோவை தெற்கு, சிங்காநல்லுôர் ஆகிய 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான மொத்த வாக்காளர் எண்ணிக்கை 17 லட்சத்து 8 ஆயிரத்து 369. இதில், 26 ஆயிரத்து 504 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்ட நிலையில், 8 ஆயிரத்து 333 பேர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன. (இறப்பு 1,090, நிரந்தர குடிபெயர்வு – 6,998, இரட்டைப் பதிவு 245).

இறுதி வாக்காளர் பட்டியலின்படி, திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட பல்லடம் தொகுதியின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 3 லட்சத்து 97 ஆயிரத்து 755 உடன் சேர்த்து, கோவை மக்களவைத் தொகுதியின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 21 லட்சத்து 6 ஆயிரத்து 124 ஆக இருந்தது”, என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மேலும், பொதுமக்கள் தங்களது பெயரினை வாக்காளர் பட்டியலில் புதியதாக சேர்த்தல், நீக்கல், திருத்தம் மேற்கொள்வது தொடர்பாக இணைய வழி மூலமாகவும், வோட்டர் ஹெல்ப் லைன் என்ற செயலி மூலமாகவும், மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து மண்டல அலுவலகங்கள், அனைத்து வருவாய் வட்டங்களில் அமைந்துள்ள உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகம் மூலமும், வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்கள், வருவாய் கோட்டங்களில் அமைந்துள்ள வாக்காளர் பதிவு அலுவலர், சார் ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள் போன்றவற்றிலும் மனுக்களை நேரடியாக சமர்ப்பிக்கலாம்” எனவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: பட்டியலின மாணவர்களுக்கு ஹால்டிக்கெட் கொடுக்க மறுக்கும் திருவள்ளுவர் பல்கலைக்கழகம்? பதிவாளர் கூறுவது என்ன? - Thiruvalluvar University

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.