ETV Bharat / state

நீலகிரியில் வனவிலங்குகள் வேட்டை: 3 பேர் கைது.. தலைமறைவான அதிமுக நிர்வாகி சஜீவனுக்கு வலைவீச்சு - Wild Animal Hunting Issue

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 23, 2024, 10:25 AM IST

NILGIRIS ANIMAL HUNTING ISSUE
நீலகிரியில் வனவிலங்குகள் வேட்டை

NILGIRIS ANIMAL HUNTING ISSUE: நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் வன விலங்கினை வேட்டையாடிய மூவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவான அதிமுக நிர்வாகியை வனத்துறையினர் தனிக்குழு அமைத்து தேடி வருகின்றனர்.

நீலகிரி: நீலகிரி மாவட்டமானது, 55 சதவிகிதம் வனப்பகுதி மிகுந்த மாவட்டமாகும். இங்குள்ள வனப்பகுதிகளில் இந்தியாவிலேயே அதிக அளவிலான புலிகள், யானைகள், காட்டெருமைகள், சிறுத்தை, புலி, கரடி, அரியவகை சிங்கவால் குரங்கு, நட்சத்திர ஆமைகள், மான் இனங்கள் உட்பட தாவர உண்ணிகள், மாமிச உண்ணிகள் மற்றும் அரிய வகை பறவை இனங்கள் வாழ்ந்து வருகின்றன.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி நீலகிரி வனக்கோட்டத்திற்கு உட்பட்ட கூடலூர் பகுதியில் சில்வர் கிளவுட் தோட்டத்தில் வன விலங்குகள் வேட்டையாடப்பட்டதாகவும், வேட்டையாடியது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய நண்பரும், அதிமுக மாநில வர்த்தக அணி அமைப்பாளருமான, கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சுனில் மற்றும் சிபி ஆகியோரின் அண்ணன் சஜீவன் என வனத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

மேலும், வேட்டையாடப்பட்ட வன விலங்கு, சஜீவனுக்கு சொந்தமான குடியிருப்பில் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதாகவும், அந்த ரகசிய தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் அடிப்படையில், வனத்துறையினர் அதிமுக வர்த்தக அணி அமைப்பாளர் சஜீவனின் குடியிருப்பு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சோதனை நடத்தினர். அப்போது, வீட்டின் வாசலில் புதைத்து வைக்கப்பட்ட துப்பாக்கி ஒன்றை வனத்துறையினர் கண்டுபிடித்தனர்.

மேலும், சஜீவன் தங்கும் அறையில் மேலும் 11 தோட்டாக்களுடன் மற்றொரு துப்பாக்கி, ரத்தக்கரை படிந்த கோடாரி, கத்திகள், டார்ச் லைட்டுகள் மற்றும் காற்று சுழல் துப்பாக்கி (Air Gun) ஒன்று வனத்துறையால் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து, இதுகுறித்து அதிமுக மாநில வர்த்தக அணி செயலாளர் சஜீவனின் எஸ்டேட் மேலாளரிடம் விசாரணை செய்யப்பட்டது. விசாரணையில், சஜீவனும் அவரது நெருங்கிய நண்பருமான சுப்பையா மற்றும் அவரது நண்பர்கள் துப்பாக்கியுடன் எஸ்டேட்டுக்கு வந்து வேட்டையாடுவது வழக்கம் என வாக்குமூலம் அளித்தார்.

அந்த வாக்குமூலத்தின் பேரில், வனத்துறையினர் குற்றச் செயலில் ஈடுபட்ட பைசல், சாகுஜேக்கப், பரமன், ஸ்ரீகுமார், சுபைர் மற்றும் சஜீவன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து, இந்த தகவலை அறிந்த சஜீவன் உட்பட மூன்று பேர் தலைமறைவு ஆகிய நிலையில், பைசல், சாகுஜேக்கப், பரமன் ஆகியோரை கைது செய்த வனத்துறையினர், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இந்நிலையில், முக்கிய குற்றவாளியான அதிமுக வர்த்தக அணி அமைப்பாளர் சஜீவன் உட்பட மேலும் சிலரை வனத்துறையினர் தனிக்குழு அமைத்து வலைவீசித் தேடிவருகின்றனர். இந்த சஜீவன், நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தேர்தல் பொறுப்பாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து என்ஜினியர் பலி! பதைபதைக்கும் சிசிடிவி காட்சி வெளியீடு! - Engineer Fall Water Tank Hyderabad

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.