ETV Bharat / state

நெருங்கும் கோடைகாலம்.. நீலகிரியில் தீத்தடுப்பு கோடுகள் அமைப்பதில் வனத்துறையினர் தீவிரம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 13, 2024, 2:36 PM IST

நீலகிரியில் தீத்தடுப்பு கோடுகள் அமைப்பதில் மும்முரம் காட்டும் வனத்துறை
நீலகிரியில் தீத்தடுப்பு கோடுகள் அமைப்பதில் மும்முரம் காட்டும் வனத்துறை

Nilgiris forest: நீலகிரி மாவட்டத்தின் வனப்பகுதியில் வனத்துறை பணியாளர்கள் தீத்தடுப்பு கோடுகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நீலகிரி: தற்போது கோடைகாலம் நெருங்கி வருவதால், முதுமலை புலிகள் காப்பகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் வனப்பகுதிகள் வறண்ட நிலையில், செடி கொடிகள் காய்ந்து கருகி காணப்படுகிறது. இந்நிலையில், முதுமலை புலிகள் காப்பகத்திற்குள் உள்ள சாலைகளில் வாகனத்தில் பயணம் செய்யும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள், எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களை கவனக்குறைவாக வீசிச் செல்கின்றனர்.

இதனால் காய்ந்து கிடக்கும் செடி, கொடிகள் எளிதில் தீப்பற்றி விடுகிறது. இதன் காரணமாக, காட்டுத்தீ ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இதனால் வனத்தில் உள்ள அரிய வகை தாவரங்கள், மரங்கள், சிறு உயிரினங்கள் எரிந்து வருகிறது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் கோடைகாலம் தொடங்கும் சமயங்களில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வனத்துறையினர் வனப்பகுதியில் உள்ள சாலையோரங்களில் பல மீட்டர் அகலத்திற்கு தீத்தடுப்பு கோடுகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், தமிழ்நாடு, கர்நாடக எல்லையான கக்கன் நல்லா முதல் தெப்பக்காடு வரை தேசிய நெடுஞ்சாலையில் விரைவாக தீத்தடுப்பு கோடுகள் அமைக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பிட்ட தூரம் வரை காய்ந்த பொருட்களை தீ வைத்து எரித்து, பாதுகாப்பு அமைப்பது தீத்தடுப்புக் கோடுகள் ஆகும். இதில் தீப்பெட்டி குச்சிகள், புகையும் சிகரெட் துண்டுகளை வீசினால் எளிதில் தீப்பிடிக்காது. இதன் மூலம் காட்டுத்தீ பரவாமல் வனப்பகுதியை பாதுகாக்க முடியும்.

இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள், வாகன ஓட்டிகள் வனத்தை பாதுகாக்க ஒத்துழைப்பு அளிக்குமாறு நீலகிரி மாவட்ட வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர். மேலும், இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள், தங்களது வாகனங்களை நிறுத்தி சாலை விவரங்களில் சமையல் செய்வது மற்றும் தீ மூட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இதையும் படிங்க: உதகை நகரில் உலா வரும் ஒற்றைக் கரடி..பொதுமக்கள் பீதி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.