ETV Bharat / state

டீ குடிக்க அழைப்பு விடுத்த திமுக உறுப்பினர்.. மறுக்காமல் சென்ற பாஜக வேட்பாளர் எல்.முருகன்! - L MURUGAN

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 9, 2024, 1:57 PM IST

L MURUGAN TEA
L MURUGAN TEA

L MURUGAN: நீலகிரி நாடளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியில் பாஜக வேட்பாளர், எல்.முருகன் அன்னூர் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்

கோயம்புத்தூர்: தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்.19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதனையடுத்து அணைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிராமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் நீலகிரி(தனி) நாடாளுமன்றத் தொகுதியில் மத்திய இணை அமைச்சர் எல்‌.முருகன் போட்டியிடுகிறார். அண்மையில் மத்தியப் பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்ட எல்.முருகன் கடந்த சில நாள்களுக்கு முன்னர் குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர் முன்னிலையில் பதவியேற்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.

இருப்பினும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியில் களமிறக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து கடந்த சில வாரங்களாக, நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் முகாமிட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் வருகிறார் எல்.முருகன்.

அந்த வகையில் நேற்று(திங்கள்கிழமை) அவிநாசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அன்னூர், குன்னத்தூராம்பாளையம், கஞ்சப்பள்ளி, பள்ளபாளையம், பசூர், பொங்கலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், "அவிநாசி அத்திக்கடவு திட்டம் கடந்த 3 ஆண்டுகளாக அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே திமுக அரசால் முடக்கி வைக்கப்பட்டுள்ளதாக" குற்றம் சாட்டினார். முன்னதாக அருந்ததிய சமூக மக்கள் வசிக்கும் பகுதியில் பிரச்சாரம் செய்ய மேற்கொண்ட எல்.முருகன், அவர்களுடன் தெலுங்கில் பேசி வாக்கு சேகரித்தார்.

பின்னர் கரியாக்கவுண்டனூர் பகுதியில் அவர், வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது, அப்பகுதியில் டீக்கடை நடத்தி வரும் திமுகவை சேர்ந்த பழனிசாமி என்பவர், தனது கடையில் வந்து டீ குடித்துவிட்டு செல்லுமாறு அழைப்பு விடுத்தார்.

அவரது அழைப்பை ஏற்ற எல்.முருகன் தனது ஆதரவாளர்களுடன் சென்று சென்று டீ குடித்தார். பின்னர் அப்பகுதியில் உள்ள விவசாயம், தொழில்கள் உள்ளிட்டவைகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து டீக்கு உரிய காசை கொடுத்து விட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

இதையும் படிங்க: இளநிலை நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மேலும் 2 நாட்கள் நீட்டிப்பு! - NEET Exam

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.