ETV Bharat / state

ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு விவகாரம்; சென்னையில் என்ஐஏ சோதனை நிறைவு - 3 செல்போன்கள் பறிமுதல்! - nia officials raid at chennai

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 27, 2024, 10:39 PM IST

3 செல்போன்கள் பறிமுதல்
சென்னையில் மூன்று இடங்கள் நடந்த என்ஐஏ சோதனை நிறைவு

Cell phones seized in NIA Raid: பெங்களூரில் உள்ள ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு விவகாரம் தொடர்பாக, என்ஐஏ அதிகாரிகள் இன்று சென்னையில் நடத்திய சோதனையின் முடிவில் 3 செல்போன்களை பறிமுதல் செய்துள்ளனர்.

சென்னை: கடந்த மார்ச் 1ஆம் தேதி பெங்களூரில் உள்ள ராமேஸ்வரம் கஃபே என்ற உணவகத்தில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்கள் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளால் தேடப்பட்டு வரும் பழைய குற்றவாளிகள் இருவர் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், அந்த இரண்டு நபர்களும் இந்த குண்டு வெடிப்பு நிகழ்வதற்கு முன்பாக, ஒரு மாத காலம் சென்னையில் தங்கியிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், சென்னையில் இவர்கள் எங்கெல்லாம் தங்கி இருந்தார்கள்,யாருடைய உதவியில் தங்கி இருந்தார்கள், யாரையெல்லாம் சந்தித்தார்கள் போன்ற விவரங்களை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சேகரித்து வந்தனர்.

இந்த நிலையில், இன்று கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய இரண்டு மாநிலங்களிலும், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் தமிழ்நாட்டில் ஐந்து இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. சென்னையில் மூன்று இடங்களிலும், ராமநாதபுரம் மாவட்டத்தில் இரண்டு இடங்களிலும் இந்த சோதனை நடத்தப்பட்டது.

பெங்களூரைச் சேர்ந்த சிறையில் இருக்கும் பயங்கரவாதி மெகபூப் பாஷா, பீகார் சிறையில் இருக்கும் பயங்கரவாதி காஜா மொய்தீன், இவர்களின் கூட்டாளிகள் உதவியுடன்தான் பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு முன்பாக இருவரும் சென்னையில் தங்கி இருக்கலாம் என்ற கோணத்திலும் இந்த சோதனை நடத்தப்பட்டு வந்தது.

சென்னை முத்தியால்பேட்டை விநாயகர் கோயில் தெருவில் உள்ள அபுதாஹிர் வீட்டிலும், இதேபோல் ராயப்பேட்டையில் லியாகத் அலி என்பவர் வீட்டிலும், வண்ணாரப்பேட்டையில் உள்ள ரஹீம் என்பவர் வீட்டிலும் இன்று காலை தொடங்கிய சோதனை மாலையில் முடிவடைந்தன.

சோதனையின் முடிவில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், மூன்று பேரிடமிருந்தும் செல்போன்களை பறிமுதல் செய்தனர். மேலும், நாளை மறுநாள் பெங்களூரு தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அலுவலகத்தில், விசாரணைக்கு ஆஜராக வேண்டும் எனவும் தெரிவித்து சென்றுள்ளனர்.

இதையும் படிங்க: தமிழகத்தில் சென்னை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை - Nia Raid

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.