ETV Bharat / state

பூந்தமல்லி அருகே குப்பைத் தொட்டியில் இருந்து குழந்தை மீட்பு; சென்னையில் தொடரும் அவலம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 16, 2024, 11:15 AM IST

Baby in trash can Issue: சென்னையில் பிறந்த சில நாட்களே ஆன பெண் குழந்தை குப்பைத் தொட்டியில் வீசப்பட்டிருந்த நிலையில், உயிருக்கு போராடிய குழந்தையை பெண் ஒருவர் மீட்டு, மருத்துவ சிகிச்சையளித்து, அக்குழந்தைக்கு அதிர்ஷ்ட லட்சுமி என பெயரிட்டுள்ளார்.

Etv Bharat
Etv Bharat

சென்னை: பூந்தமல்லி, ராமானுஜர் தெருவில் தனியாருக்குச் சொந்தமான பெண்கள் விடுதி ஒன்று இயங்கி வருகிறது. இதன் அருகிலேயே குப்பை கொட்டும் இடம் உள்ள நிலையில், அவ்விடத்தில் இருந்து பூனை அழுவது போன்ற சத்தம் கேட்டதை அடுத்து, பூனை குட்டி கத்துவதாக அங்கு வசிக்கும் மக்கள் நினைத்து உள்ளனர்.

இந்த நிலையில், இன்று (பிப்.16) சத்தம் அதிகமானதைத் தொடர்ந்து, யுவராணி என்ற பெண் வீட்டின் ஜன்னல் வழியாக பார்த்தபோது, பிறந்து சில நாட்களே குழந்தை ஒன்று, தொப்புள் கொடியுடன் துணி இல்லாமல் குப்பைத் தொட்டியில் எறும்புகள் உடலில் மொய்த்த நிலையில், அழுது கொண்டிருப்பதை கண்டுள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த யுவராணி, உடனடியாக அவ்விடத்திற்குச் சென்று, அந்தப் பகுதி மக்களின் உதவியுடன், அந்த குழந்தையை மீட்டு, பூந்தமல்லியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.

அங்கு, அந்த குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக எழும்பூரில் உள்ள குழந்தைகள் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு குழந்தை சிகிச்சை பெற்று வருகிறது. இதனிடையே, குப்பைத் தொட்டியில் குழந்தை கிடந்த சம்பவம் குறித்து பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, குழந்தையை வீசிச் சென்ற நபர்கள் யார் என விசாரித்து வருகின்றனர்.

மேலும், குழந்தையை இரண்டு நாட்ளுக்கு முன்பு, இங்கு வீசப்பட்டுச் சென்றதும், இரண்டு நாட்களாக குழந்தை அழுதபடி இருந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, குழந்தையை வீசிச் சென்ற நபர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் அக்குழந்தையை மீட்ட யுவராணி, அந்த குழந்தை இரு நாட்களாக போராடி அதிர்ஷ்டவசமாக தப்பியதால், அதிர்ஷ்ட லட்சுமி என பெயர் சூட்டி மகிழ்ச்சி அடைந்தார். முன்னதாக கடந்த ஜன.13 ஆம் தேதி, சென்னை அடையாறு ஆற்றங்கரை ஓரத்தில் உள்ள குப்பையில், 7 மாத குழந்தை இறந்த நிலையில் கிடந்தது. அதேபோல், கடந்த ஜன.2 ஆம் தேதி திருவள்ளூர் மாவட்டம் மாதர்பாக்கம் பகுதியில் உள்ள குப்பைத் தொட்டியில் கிடந்த பிறந்து சில மாதங்களே ஆன பச்சிளம் குழந்தையை தூய்மைப் பணியாளர்கள் மீட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஆந்திராவைச் சேர்ந்த பெண்ணுக்குச் சென்னையில் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.