ETV Bharat / health

ஆந்திராவைச் சேர்ந்த பெண்ணுக்குச் சென்னையில் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை..!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 15, 2024, 3:28 PM IST

ஆந்திராவை சேர்ந்த பெண்ணுக்கு சென்னையில் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை
ஆந்திராவை சேர்ந்த பெண்ணுக்கு சென்னையில் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை

Lung transplant in chennai: பூச்சிக் கொள்ளி கலந்த பானத்தைக் குடித்துப் பாதிக்கப்பட்ட பெண்ணுக்குச் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்துள்ளது.

ஆந்திராவை சேர்ந்த பெண்ணுக்கு சென்னையில் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை

சென்னை: ஆந்திர மாநிலம் ஓங்கோல் மாவட்டத்தைச் சேர்ந்த 26 வயது உள்ள பெண் ஒருவர், தனது குழந்தைகள் பழச்சாற்றில் பூச்சிக்கொல்லி மருந்தைக் கலந்தது தெரியாமல், தவறுதலாகப் பூச்சிகொல்லி கலந்த பழச்சாற்றைக் குடித்துள்ளார். அதனை அடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில், அருகிலிருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அப்பெண்ணில் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை அடுத்து அவர் வீடு திரும்பியுள்ளார். வீடு திரும்பிய சிலநாட்களில் அவருக்குச் சுவாசிப்பதில் பிரச்சினை ஏற்பட்டு, அவதிப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் உடல் நடுக்கம், பலவீனம் மற்றும் ஒவ்வாமை உள்ளிட்ட பிரச்சினைகளால் அவர் அவதிப்பட்டுள்ளார்.

அதன் பின்னர், அப்பெண்ணுக்குத் தொடர்ந்து சுவாச பிரச்சினை இருந்ததால், அவர் வென்டிலேட்டர் ஆதரவில் வைக்கப்பட்டார். ஆனால், அவரது நுரையீரல் கடுமையாகப் பாதிக்கப்பட்டு இருப்பது ஆரம்ப சிகிச்சையில் கண்டறியப்படவில்லை. காலப்போக்கில் அவரது நுரையீரல் மிகவும் மோசமான நிலைக்குச் சென்று, அவர் உயிருக்கு ஆபத்தான நிலைக்குத் தள்ளப்பட்டதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

அதனைத் தொடர்ந்து, அவருக்குச் சிகிச்சை அளித்து வந்த மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில், சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்குப் பாதிக்கப்பட்ட பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள், அவரது நிலை மிகவும் மோசமாக இருப்பதாக் கூறி, அவருக்கு உடனடியாக நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என அப்பெண்ணின் குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளனர்.

பின்னர், சென்னையில் மூளை சாவடைந்த ஒருவரின் நுரையீரல் தானமாகக் கிடைத்ததை அடுத்து, மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் அறுவை சிகிச்சைக்கான அனைத்து அனுமதிகளை முறையாகப் பெற்று, நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நேற்று (பிப்.14) வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டதைக் கொண்டாடும் வகையில் மருத்துவமனை நிர்வாகம் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. அதில், அப்பெண்ணுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விளக்கினர். மேலும், மீண்டு வந்த பெண்ணுக்கு நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டது. அப்போது அப்பெண் கண்ணீர் மல்க மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

இது குறித்து அப்பெண்ணுக்குச் சிகிச்சை அளித்த மருத்துவர், "26 வயதான பெண்மணி தவறுதலாக மருந்து கலந்த பானத்தைக் குடித்ததால் அவரது நுரையீரல் உள்ளிட்ட உருப்புகள் சேதமடைந்திருந்தது. பின்னர், அவர் இங்கு அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த போது அவருக்கு உடனே எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டது.

அதன் பின்னர் ஐந்து நாட்களின் சென்னையைச் சேர்ந்த குடும்பம் உடலுறுப்பு தானம் செய்ய முன்வந்தனர். அந்த உறுப்புகள் அவருக்குப் பொருத்தமானதாக இருந்தது. உடலுறுப்பு தானம் செய்த குடும்பத்திற்கு மருத்துவமனை நிர்வாகம் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: வண்டலூர் பூங்காவில் 2 அனுமன் குரங்குகள் தப்பியோட்டம்.. மன உளைச்சலில் பெண் ஊழியர் உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.