ETV Bharat / state

வண்டலூர் பூங்காவில் 2 அனுமன் குரங்குகள் தப்பியோட்டம்.. பொது மக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 15, 2024, 11:54 AM IST

Updated : Feb 15, 2024, 11:09 PM IST

Two Hanuman monkey escape: உத்தரப் பிரதேசம் கான்பூர் உயிரியல் பூங்காவில் இருந்து, வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு கொண்டு வரப்பட்ட இரண்டு அனுமன் வகை குரங்குகள் தப்பியோடியது. சுற்றுவட்டார பகுதியில் உள்ள குழந்தைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளுமாறு பெற்றோருக்கு வனத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

மன உளைச்சலில் பெண் ஊழியர் உயிரிழப்பு
வண்டலூர் பூங்காவில் 2 அனுமன் குரங்குகள் தப்பியோட்டம்

சென்னை: விலங்குகள் பரிமாற்றத் திட்டத்தின் கீழ், வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா மற்றும் உத்தரப் பிரதேசம் கான்பூர் உயிரியல் பூங்கா இடையே விலங்கு பரிமாற்றம் ஜனவரி 28ஆம் தேதி நடைபெற்றது.

இதில் உத்தரப் பிரதேச மாநிலம், கான்பூர் உயிரியல் பூங்காவிலிருந்து 10 அனுமன் குரங்குகள், 5 மர ஆந்தைகள், ஒரு ஜோடி ஹிமாலயன் கிரிபோன் கழுகு, ஒரு ஜோடி எகிப்திய கழுகுகள் என மொத்தம் நான்கு இனங்கள் வண்டலுார் உயிரியல் பூங்காவுக்கு கொண்டு வரப்பட்டன.

இதற்கு மாற்றாக, வண்டலூரில் இருந்து ஒரு ஜோடி கட்ட உடல் மலைப்பாம்பு, 2 ஜோடி சருகுமான், 3 நெருப்புக்கோழி, ஒரு ஜோடி பச்சை உடும்பு, ஓர் ஆண் சாம்பல் ஓநாய் ஆகியவை கான்பூர் உயிரியல் பூங்காவுக்கு அனுப்பப்பட்டன. புதியதாக வருகை தந்த இந்த விலங்குகள் தனிமைப்படுத்தப்பட்டு, தனிக் கூண்டுகளில் வைத்து பராமரிக்கப்பட்டு வந்தன.

இந்த நிலையில், நேற்று முன்தினம், வழக்கம்போல் பராமரிப்பு பணியில் இருந்த தற்காலிக பணியாளர் சுகுணா மற்றும் ஜான் ஆகிய இருவரும் குரங்குகளுக்கு உணவு வைக்கும்போது, 2 குரங்குகள் கூண்டிலிருந்து தப்பித்து காட்டுப் பகுதிக்குச் சென்றுவிட்டன. பின்னர், இது குறித்து தகவல் அறிந்த வண்டலூர் உயிரியல் பூங்கா அதிகாரிகள், வன காப்பாளர்கள் உதவியுடன், மாயமான குரங்குகளை தேடி வருகின்றனர்.

பூங்கா காட்டுப்பகுதி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல், பூங்காவைச் சுற்றி உள்ள காப்புக்காடுகளில் மருத்துவர்கள் துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தி குரங்குகளைப் பிடிக்க தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும், வண்டலூர் உயிரியல் பூங்காவின் அருகில் உள்ள குடியிருப்புவாசிகள், குழந்தைகளை பத்திரமாக வைத்துக் கொள்ளவும், குரங்குகள் நடமாட்டம் இருந்தால் உடனடியாக வனத்துறை அல்லது வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு தகவல் தெரிவிக்கும்படியும் உயிரியல் பூங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், குரங்குகளுக்கு உணவு வைத்த தற்காலிக ஊழியர் சுகுணா (45), குரங்குகள் தப்பி ஓடியதால் உணவு அருந்தாமல் கடும் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், சுகுணா திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார். இதையடுத்து அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு, அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், சுகுணா இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் பூங்கா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: “என் கண்கள் கலைக் கண்ணீர் வடிக்கின்றன”.. உதயம் தியேட்டர் மூடப்படுவது குறித்து வைரமுத்து உருக்கம்!

Last Updated :Feb 15, 2024, 11:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.