ETV Bharat / state

சின்னத்தைப் பார்த்து ஓட்டு போடாதீங்க.. எத்தனை தேர்தல், தலைவர்கள் வந்தாலும் என் மக்கள் நிலை மாறவில்லை - தங்கர் பச்சான் ஆவேசம்! - lok shaba election 2024

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 25, 2024, 3:14 PM IST

NDA cuddalore mp candidate Thangar Bachan
NDA cuddalore mp candidate Thangar Bachan

Thankar Bachan: எத்தனை தேர்தல் வந்தாலும், எத்தனை தலைவர்கள் வந்தாலும் என் மக்கள் இன்னும் மக்களின் நிலை மாறவில்லை என்றும், சின்னம் பார்த்து வாக்களிக்காமல், தகுதி பார்த்து வாக்களியுங்கள் என்றும் கடலூரில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் தங்கர் பச்சான் தெரிவித்தார்.

சின்னத்தைப் பார்த்து ஓட்டு போடாதீங்க.. எத்தனை தேர்தல், தலைவர்கள் வந்தாலும் என் மக்கள் நிலை மாறவில்லை - தங்கர் பச்சான் ஆவேசம்!

கடலூர்: நாடாளுமன்றத் தேர்தல் களம் சூடு பிடிக்கத் துவங்கி விட்டது. அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் கடலூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் (தங்கர் பச்சான்) அறிமுக கூட்டம் கடலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாமக, பாஜக அமமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

அப்பொழுது பேசிய தங்கர் பச்சான், "அன்றைக்கு நான் பார்த்த கடலூர் இன்றும் அதே நிலையில் உள்ளது. நாங்கள் என்ன பாவம் செய்தோம். இந்தியா முழுவதும் தேர்தல் நடக்கிறது, தமிழ்நாட்டிலும் தேர்தல் நடக்கிறது. கடலூரில் இருந்து இதுவரை 20 எம்பி, எம்எல்ஏ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஆனால், மற்றவர்கள் வாக்குக் கேட்பதற்கும், நான் கேட்பதற்கு வித்தியாசம் உள்ளது. என்ன மாதிரியான வாக்குறுதிகள் இந்த மைக் முன்னர் கொடுத்திருப்பார்கள். எத்தனை தலைவர்கள் வந்திருப்பார்கள், ஒவ்வொரு முறையும் என் மக்கள் எப்படி ஏமாற்றப்பட்டிருப்பார்கள்.

என் முன்னோர்களில் இருந்து இன்று வரை ஏமாந்து கொண்டுதான் இருக்கிறோம். அந்த கோவம் தான் என்னை இங்கு கொண்டுவந்துள்ளது. எனக்குப் பிடிக்காதது அதைக் கொடுங்கள் எனக் கேட்பது, எனக்கு வருவதைப் போல நான் செயலாற்றுவேன். ஆனால் இந்த வாக்குகள் கேட்டால் வராது போல. எனக்கு வாக்களியுங்கள். வாக்களியுங்கள் எனக் கேட்டால் தான் இந்த மக்கள் அளிப்பார்கள் போல்; நான் என்ன செய்வேன்.

மக்களாட்சி முறையை நான் மதிக்கக்கூடியவன். இந்த முறையில் தான் தேர்தல் நடத்தப்பட வேண்டும், நம்மை ஆளக்கூடியவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஆனால் அப்படிதான் தேர்தல் நடக்கிறதா?. எனது வயது 62, நான் வயதில் பார்த்த அதே கடலூர் இன்னும் அதே நிலையில் உள்ளது. அதற்கு யார் காரணம்?.. இந்த மக்களா?. இன்னும் அதே பேருந்து நிலையம் தான் உள்ளது, வேற என்ன உள்ளது கடலூரில். நகைக்கடை, துணிக்கடை மட்டும் தான் பெரிதாகிக் கொண்டு வருகிறது. என் மக்கள் அதே மாதிரி தான் நடந்து செல்கின்றனர்.

உலகத்திலே கடினமான தொழில் மீனவர்கள் தொழில் என இத்தாலியில் ஒரு எழுத்தாளர் எழுதியிருக்கிறார். உலக நாடுகளில் உழைக்கும் மக்கள் எப்படி வாழ்கின்றனர், அங்கு என்னென்ன தொழில் நடக்கிறது, எப்படி நடக்கிறது. கல்வி, மருத்துவம் எப்படிக் கிடைக்கிறது இதெல்லாம் நான் பார்க்கின்றேன். ஆனால், நம்முடைய அரசியல்வாதிகள் வேறு எதையோ பார்த்து வருகின்றனர். மற்ற நாடுகளில் முதலில் மதிப்பது மீனவன், விவசாயிகளைத் தான்.

ஆனால் நாம் ஒரு விவசாயி வந்தால் மதிப்பதில்லை. பேருந்தில் இடம் காலியாக இருந்தால் கூட அமர மாட்டார்கள், அழுக்காகி விடுமாம். உழைப்பவர் அழுக்காகத் தான் இருப்பார்கள். அனைவரும் 3 வேளை சாப்பிடுகிறோம். ஒரு நிமிடமாவது அந்த உணவைத் தந்த விவசாயியின் வாழ்க்கையைப் பற்றி நினைத்துப் பார்த்திருப்பார்களா?. கடலூரில் எப்போது புயல் வரும் என எத்தனை அரசியல்வாதிகள் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள் தெரியுமா?. ஏனென்றால் அதில் இருந்து கொள்ளையடிக்க.

அதில் என் மக்கள் வாழ்க்கை அழிகிறது. ஆனால் நிவாரணத் தொகை 5 ஆயிரத்தை வாங்கப் போய் நிற்கின்றோம். இதெல்லாம் வெளிநாட்டில் கிடையாது. நாட்டின் மொத்த வரிப்பணம் என்பது உழைக்கும் மக்களின் பணம். அதில் தான் பறப்பது, பேட்டி கொடுப்பது எல்லாமே. இவ்வளவு சுகமான வாழ்க்கை வாழ்கிறதை யார் கொடுத்தது. இந்த மக்களுக்கு என்ன திருப்பி கொடுத்தீர்கள். தேர்தல் என்பதை வருமானம் தரும் தொழிலாக மாற்றி விட்டது. இது மக்களாட்சியின் சோகம்.

ஒவ்வொரு தேர்தலில் எத்தனை வேசம் போடுகிறீர்கள். இப்போதே ஒரு மம்பட்டி, 2 மாட்டைக் கொடுங்கள் நான் விவசாயம் செய்து காட்டுகிறேன். எனக்குத் தெரியாத தொழில் இல்லை. நான் கடவுளாக நினைப்பது இந்த உழைக்கும் மக்களை மட்டும் தான். நான் சாதாரண விவசாயக் குடும்பம், 9வது படித்தவரின் மகன். ஆனால் அங்கிருந்து படித்து முன்னேறி உலகம், சினிமா அனுபவத்தைப் பார்த்துள்ளேன். ஆனால், மக்கள் பார்த்ததெல்லாம் 4 பாடல், சண்டை, காமெடி தான். இதெல்லாம் எவ்வளவு பெரிய கொடுமை.

அதன் வெளிப்பாடுதான் நான் எடுத்த படங்கள். அழகி படம் வந்த பிறகு தான் நம்ம மக்களுக்கு இந்த முகம் இருப்பதே தெரிந்தது. அதுவரை சினிமா என்றாலே மதுரை, திருநெல்வேலி அதிகபட்சம் தஞ்சாவூர் இதுமட்டும் தான் தமிழ்நாடு. தமிழ்நாட்டின் பாதி வாழ்க்கை முறை ஏங்குமே பதிவு செய்யப்படவில்லை. அப்போது ஒரு கலைஞனாக எனக்கிருந்த கோவத்தைத் தான் பதிவு செய்தேன். அதன்பின்னர் தான் தமிழ்நாட்டில் இப்படிப்பட்ட மக்களும் உள்ளார் என அனைவருக்கும் தெரிந்தது. நான் நினைத்தால் சினிமாவில் எவ்வளவும் பணம் சம்பாதித்து இருக்கலாம். கேமரா மேன் ஆகா எவ்வளவு சம்பளம் தெரியுமா?.

ஆனால் அதை செய்யவிரும்பவில்லை. 'அழகி' திரைப்படம் 136 திரையரங்குகளில் 100 நாளுக்கு மேல் ஓடிய திரைப்படம். அது திரும்பவும் ரீரிலிஸ் கூட ஆகவுள்ளது. பணம் வேண்டும் என்றால் எப்படி வேண்டுமென்றாலும் சம்பாதித்து இருக்கலாம். ஆனால் அரசியலுக்கு வந்து தான் பணம் சம்பாதிக்க வேண்டும் என சிலர் நினைக்கின்றனர். இந்த மக்களுக்காகவே உழைக்கக் காத்திருக்கும் எத்தனையோ நபர்கள், எத்தனை கட்சியில் உள்ளார்கள் தெரியுமா?. அவர்களுக்கு எல்லாம் வாய்ப்பு இல்லை.

அரசியல் என்பது பணத்தைச் செலவு செய்து வர வேண்டும். பணத்தைக் கொட்ட வேண்டும் அதை திருப்பி எடுக்கவேண்டும், மறுபடியும் மக்களைப் பிச்சைக்காரனாக ஆக்க வேண்டும் இப்படி தான் மாற்றி வைத்துள்ளனர். கடலூரில் 70 சதவீதம் மக்கள் செய்யும் தொழில் விவசாயம். அந்த மக்களுக்கான திட்டம் இங்கு என்ன உள்ளது. நிலத்தை வைத்து விவசாயம் செய்பவன் மகிழ்ச்சியாக, பணக்காரனாக இருந்துள்ளன?.. ஒரு பக்கம் இயற்கை இடர் சாவடிக்கிறது.

தற்போது விவசாயம் செய்வது பிடிக்காமல் வந்து உட்கார்ந்துள்ளேன். என்னுடைய சிறு வயதில் ஒரு குட்சியை வைத்து தரையில் குத்தினால் தண்ணீர் முகத்தில் பீச்சியடிக்கும். ஆனால் கடையாக நான் ஃபோர் போட்டபோது 860 அடி. அதற்கு மேல் பூமியை குடைய முடியாது. 2 ஆயிரம் அடிவரை வெட்டி நிலக்கரி எடுத்தால் அதில் என்ன வரும். எந்த நாட்டிலும் நிலக்கரியை வெட்டி மின்சாரம் எடுக்கவில்லை. உலக நாடுகளில் காற்று, கடல் நீர், கடல் அலையில் இருந்து மின்சாரம் எடுக்கின்றனர்.

பள்ளிக்கூடம் படத்தில் காட்டப்பட்ட விஜய மாநகரத்தில் இன்னும் அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றன எனது மக்கள். இன்று வரை அவர்களுக்கான இழப்பீடு கிடைக்கவில்லை. மறுபடியும் எவ்வளவு திருமி இருந்தால், 24 ஆயிரம் ஏக்கரைக் கையகப்படுத்தச் செல்வார்கள். அதற்கு இந்த காவல்துறை துணை நிற்கிறது. பாட்டாளி கட்சியைத் தவிர்த்து எந்த கட்சி கேட்டது?.

மாற்றி மாத்தி கூட்டணி என்கிறார்கள், அனைவரும் ஒரே கட்சியுடன் தான் கூட்டணி வைத்துள்ளீர்களா?. திமுக, அதிமுக ஒரு கட்சியுடன் தான் கூட்டணி வைத்துள்ளதா. ஆனால் பாமக மட்டும் கெட்ட கட்சி. முத்திரி விளைச்சலுக்கு தற்போது விலை இல்லை. ஆனால் ஒரு தோசை 200 ரூபாய் விற்கிறது. ஆனால் இந்த மக்கள் எதிர்த்துப் போராடுகின்றனரா. நாங்கள் எங்கள் தாத்தா அப்பா எல்லாரும் அதே கட்சிக்குத் தான் ஓட்டுப் போட்டோம், அதே சின்னத்திற்குத் தான் ஓட்டுப் போட்டதாகக் கூறுகின்றனர். அது பெருமை கிடையாது. உங்களை இதே நிலையில் வைத்திருப்பவர்களை உங்கள் கையில் உள்ள ஓட்டால் தான் அடிக்க வேண்டும்.

உங்கள் அனைவருக்கும் அரசியல் தொழில் இருக்கிறது. கோடி கோடியாக எல்லா நாட்டிலும் குவித்து வைத்துள்ளீர்கள். என் மக்கள் எங்கு போகும். இந்த ஓட்டை போட்டு என்னை வெற்றி பெற வைத்துவிடுவீர்கள். பிரச்சனைகளைச் சரி செய்ய நான் யார் யார் காலில் விழ வேண்டும் தெரியுமா. ஆனால் என் மக்களுக்காக நான் விழுவேன். ஒரே பிறவியில் நான் சிறந்த எழுத்தாளர், நடிகர் உள்ளிட்ட அனைத்து விருதுகளை வாங்கி விட்டேன். எனக்கு போதுமான அளவு சொத்து உள்ளது. எனது பிள்ளைகள் அதுவே பிழைத்துக் கொள்ளும். நான் என் வேலையைப் பார்த்துவிட்டுப் போகலாமே. அப்படிப் போனால், இந்த சமுதாயம் எப்படி வாழும்.

எத்தனையோ வழக்கறிஞர்கள் இருந்தார்கள். இன்று அம்பேத்கரை ஏன் சொல்லுகிறோம், அம்பேத்கர் இல்லை என்றால், இங்கு ஒன்றுமே இல்லை. ஏழைக் குடும்பத்திலிருந்து வந்து அவர் உருவாக்கிய உலகம் இது. ஆனால் அவரை ஒரு சாதி தலைவராக மாற்றி வைத்துள்ளீர்கள். தாழ்த்தப்பட்ட சாதிகளுக்கு மட்டுமில்லை, நடுநிலை சாதிகளுக்காகவும் போராடிய மாபெரும் மேதை அம்பேத்கர். ஆனால், அம்பேத்கர், பெரியார், லெனின், அண்ணாவையும் வைத்து அரசியல் செய்து கொண்டிருக்கின்றீர்கள்.

நெய்வேலியால் அழிந்தவர்கள் கொஞ்சம் இல்லை. இந்தியாவிலேயே அதிகப்படியான நுரையீரல், கேன்சர் உள்ளிட்ட அனைத்து நோய்களும் கடலூரில் உள்ளது. உலக சுகாதார நிறுனவங்களால் தடை செய்யப்பட்ட அத்தனை நிறுவனங்களும் கடலூரில் உள்ளது. எனக்கு வாக்களித்தால் உங்களுக்குத் தான் நல்லது, எனக்கு ஒன்றும் நஷ்டம் இல்லை. இதுபோல எந்த வேட்பாளராவது சொல்ல முடியுமா?. ஓட்டுப் போட்டவன் ரோட்டில் உள்ளான். ஆனால் ஓட்டு வாங்கியவன் எப்படிப் போகிறான். இந்த நிலைத் தலை கீழாக மாற வேண்டும்.

பிரான்ஸ் நாட்டுப் பிரதமர் அவரோடு சூட்கேஸை எடுத்துக் கொண்டு ரயில் வருகிறார். ஆனால் இங்கு ஒரு கவுன்சிலர் வந்தால் கூட வரார்... வரார்.. என 10 பேர் வருகின்றனர். இந்த கேடுகெட்ட அரசியலைத் தான் நீங்கள் உருவாக்கி வைத்துள்ளீர்கள். இதையெல்லாம் என்று கேட்கப் போகிறீர்கள். சின்னத்தைப் பார்த்துத்தான் குத்திக் கொண்டே இருப்பீர்கள். அந்த சின்னத்திற்குப் பின்னால் எத்தனை திருடன், சமூக துரோகி ஒழிந்து கொண்டிருக்கிறான் தெரியுமா?. அதனை இனிமேலாவது நினைத்துப் பாருங்கள்.

பாமக பாஜகவுடன் கூட்டணி வைத்ததில் எனக்கும் மகிழ்ச்சி. இல்லையென்றால் நான் இங்கு வந்திருக்கவே மாட்டேன். என்னை யாராலும் விலைக்கு வாங்க முடியாது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து துறைகளிலும் நேரடியான பழக்கம் உண்டு எனக்கு. நான் கேட்டால் யாரும் முடியாது என சொல்ல மாட்டார்கள். ஒரு முறையாவது இந்த தங்கர் பச்சனுக்கு ஓட்டை போடுங்கள். நாங்கள் எதையாவது சரி செய்து கொள்கிறோம். 100 ரூவா பொங்கல் காசுக்காக வரிசையில் நிற்கும் மக்களை வைத்து என்ன மாற்ற முடியும். பொங்கல் பரிசு, அன்பு பரிசு.. அதற்கு பேரு பரிசா?.. என்ன போட்டி வைத்தா பரிசு தருகின்றீர்கள்.

என்றைக்கு மக்கள் இதையெல்லாம் வாங்க மாட்டோம் என நிற்கின்றார்களோ அன்று தான் இந்த நாடு உயரும். அப்படிப்பட்ட அரசியல் நிலை தமிழ்நாட்டில் வர வேண்டும். உழைக்கும் மக்கள் தரம் உயர வேண்டும் என நினைக்கும் அரசியல் ஒன்று உள்ளது. அதே மக்களின் உழைப்பை உறிஞ்சு, அவர்களுக்குப் போதை, சாராயத்தைக் கொடுத்து அவர்களை பிச்சைக்காரர்களாகவே வைத்திருக்கும் அரசியல் உள்ளது. இதில் எது வேண்டுமோ அதை நீங்களே முடிவு பண்ணுங்கள். சின்னம் பார்த்து வாக்களிக்காமல், தகுதி பார்த்து வாக்களியுங்கள்.

இதையும் படிங்க: "கடந்த தேர்தலில் அதிமுகவினர் திமுகவுடன் கூட்டு சேர்ந்து முதுகில் குத்திவிட்டனர்" - ஏ.சி.சண்முகம் பரபரப்பு குற்றச்சாட்டு - Lok Sabha Election 2024

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.