ETV Bharat / state

ஈரோடு நம்பியூர் பகுதியில் வீடுகளில் புகுந்த வெள்ளம்.. பொதுமக்கள் கடும் அவதி! - ERODE RAIN

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 23, 2024, 3:20 PM IST

Erode Rain: கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள நம்பியூரில் கனமழை காரணமாக பெரியார் நகர், பி.சி.ஆர் தியேட்டர் ரோடு பகுதியில் 40க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்ததால், அனைத்து துறை ஊழியர்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஈரோட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள்
ஈரோட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் (credits- ETV Bharat Tamil Nadu)

ஈரோட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் காட்சி (credits- ETV Bharat Tamil Nadu)

ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள நம்பியூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. இந்த கனமழையின் காரணமாக பழனிகவுண்டன்புதூர், செட்டியாம்பதி பகுதிகளில் உள்ள குளங்கள் நிரம்பி நீர் ஓடைகள் வழியாக அதிக அளவு வெள்ள நீர் வெளியேறி வந்தன.

நீரோடைகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் நம்பியூர் பேருந்து நிலையம் பகுதி வழியாகச் செல்லும் நீரோடையிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பேருந்து நிலையத்தில் உள்ள கடைகள் மற்றும் பேருந்து நிலையம் அருகே உள்ள சாலைகளை வெள்ளநீர் சூழ்ந்தது. இதனால், நம்பியூர் - புளியம்பட்டி - கோவை சாலைகளில் சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து தடைபட்டது.

மேலும், பெரியார் நகர் பகுதியில் குடியிருப்புகளுக்குள் புகுந்த வெள்ள நீர், சுமார் 40-க்கும் மேற்பட்ட வீடுகளில் புகுந்து சேதப்படுத்தியது. இதுகுறித்து தகவல் அறிந்து சென்ற நம்பியூர் வருவாய்த் துறையினர், காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் வெள்ளம் புகுந்த பெரியார் நகர் பகுதியில் வசிக்கும் பொதுமக்களை மீட்டு, நம்பியூர் சமுதாயக்கூடம் மற்றும் அரசு நடுநிலைப்பள்ளியில் தங்க வைத்தனர்.

மேலும், அனைத்து துறை ஊழியர்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளான பெரியார் நகர், பி.சி.ஆர் தியேட்டர் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: கோடை மழையால் குளிர்ந்த கரூர்.. 20 ஆண்டுக்குப் பிறகு நிரம்பிய ஏரியால் விவசாயிகள் மகிழ்ச்சி! - Karur Jegadabi Lake

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.