ETV Bharat / state

"காங்கிரஸ், தற்போதைய ஆட்சியில் நாடு வளர்ச்சி அடைந்தது" - நாகலாந்து ஆளுநர் இல.கணேசன்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 5, 2024, 5:33 PM IST

Nagaland Governor: கும்பகோணம் தேசிய இளைஞர் தின விளையாட்டு விழாவில் கலந்து கொண்ட நாகலாந்து மாநில ஆளுநர் இல.கணேசன், காங்கிரஸ் ஆட்சியிலும், தற்போதைய மத்திய ஆட்சியிலும் பாரத நாடு வளர்ச்சி அடைந்து இருக்கிறது எனவும், அடுத்த 25 ஆண்டுகளில் கல்வி, தொழில் என அனைத்திலும் தேசம் உயர்வு அடைந்து விடும் எனப் பேசினார்.

Nagaland Governor
நாகலாந்து மாநில ஆளுநர்

நாகலாந்து ஆளுநர் இல.கணேசன் பேட்டி

தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே ஆடுதுறை வீரசோழன் கோ.சி.மணி திருமண மண்படத்தில் தேசிய இளைஞர் தினத்தையொட்டி, நேற்று (பிப். 4) நடைபெற்ற மாநில அளவில் மற்றும் தஞ்சை மண்டல அளவிலான விவேகானந்தர் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிக்கும் விழா ஆடுதுறை பேரூராட்சி தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், தஞ்சாவூர் ஸ்ரீ இராமகிருஷ்ணா மடத்தலைவர் சுவாமி விமூர்த்தானந்த மகராஜ் மற்றும் கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பழகன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் சிறப்பு விருந்தினராக நாகலாந்து மாநில ஆளுநர் இல.கணேசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி, வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

அப்போது மேடையில் பேசிய அவர், "நம் நாட்டை அடிமைபடுத்தியவர்களால் தான் நம் வரலாறு எழுதப்பட்டுள்ளது, அதனால் நமக்கு முழுமையான வரலாறு தெரியவில்லை. தற்போது அவை ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டுள்ளது. விவேகானந்தர் கும்பகோணத்திற்கு வந்த போது (ARISE, AWAKE, AND NOT UNTIL THE GOAL IS REACHED) விழித்தெழுந்து இலக்கை அடையும் வரை நிற்காதே என்ற பொருள்படும் படி பேசியது பாரத தேசத்தை தட்டி எழுப்பத் தான்.

நமக்கு, மறு பிறப்பில் நம்பிக்கை உண்டு. எனவே, நமது சுதந்திர போராட்ட களத்தில் பல்வேறு கட்டங்களில் உயிரிழந்தவர்களின் உருவம் மாறியிருக்கலாம். பெயர்கள் மாறியிருக்கலம். ஆனால் அவர்களை என் கண் முன்னால் மாணவர்களாக, இளைஞர்களாக இங்கே காண்கிறேன். காங்கிரஸ் ஆட்சியிலும், தற்போதைய மத்திய ஆட்சியிலும் பாரத நாடு வளர்ச்சி அடைந்து இருக்கிறது.

கோதுமை தானியங்கள் கூட ஒரு காலத்தில் பிற நாடுகளில் இருந்து கடன் வாங்கி இருந்தோம். ஆனால் தற்போது தேசம் அன்னபூரணியாக பல நாடுகளுக்கு உணவுத் தானியங்களை வாரி வழங்கி வருகிறது. வருகிற 25 ஆண்டுகளில் கல்வி, தொழில், என அனைத்திலும் தேசம் உயர்வு அடைந்து விடும்" என்று தெரிவித்தார்.

தொடர்ந்து, மாநில அளவிலான இரட்டையர் இறகு பந்து போட்டியில் முதலிடம் பெற்ற நாகை சரவணன், திருச்சி புருசோத் ஆகியோர் ரூ.55 ஆயிரத்து 555 பரிசு பெற்றனர். தொடர்ந்து 2வது இடம் பெற்ற பாண்டிச்சேரி அணிக்கு ரூ. 44 ஆயிரத்து 444, 3ஆம் இடம் பெற்ற கும்பகோணம் அணிக்கு ரூ.33 ஆயிரத்து 333யும், ஆறுதல் பரிசாக காரைக்குடி அணிக்கு ரூ.22 ஆயிரத்து 222 பரிசளித்து பாராட்டினார்.

அதுபோலவே மாநில அளவிலான மின்னொளி கைப்பந்தாட்டப் போட்டியில் முதலிடம் பெற்ற பனங்குடி அணி, 2ஆம் இடம் பெற்ற திருச்சி அணி, 3ஆம் இடம் பெற்ற மெட்ரோ பிரண்ஸ் அணி, ஆறுதல் பரிசு பெற்ற தமிழ் அன்னை அணிக்கும் பரிசளித்து பாராட்டினார். தொடர்ந்து சோழ மண்டல அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற மன்னார்குடி அணி, நாகை அணி, திருவாரூர் அணி ஆகிய அணிகளுக்கும் பரிசளித்து பாராட்டினார்.

முன்னதாக, இந்நிகழ்விற்கு வருகை தந்த நாகலாந்து ஆளுநருக்கு வரவேற்பளிக்கும் வகையில், சாலையின் இருபுறமும் வாழைத்தார்கள், கரும்புகள் வரிசையாக கட்டப்பட்டிருந்தது. அவர் வருகை தந்ததும் ஏராளமான நாதஸ்வர, தவில் கலைஞர்கள் ஒருங்கிணைந்து இசைத்து இசையால் வரவேற்பளித்து விழா மேடைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு குத்துவிளக்கேற்றி வைத்து நிகழ்வை தொடங்கி வைத்தார்.

இதையும் படிங்க: இயக்கத்தில் இமயம் தொடும் பழங்குடியின பள்ளி மாணவர்கள்! அண்ணா பல்கலைக்கழக குறும்பட விழாவிற்கு தேர்வான மாணவர்களின் படைப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.