ETV Bharat / state

"எடப்பாடியும், உதயநிதியும் படத்தை வைத்து படம் காட்டுகிறார்கள்" - நெல்லையில் சீறிய சீமான்! - Seeman

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 29, 2024, 11:34 AM IST

Naam Tamilar Katchi Seeman parliament election campaign
Naam Tamilar Katchi Seeman parliament election campaign

Seeman: எங்கள் மீது உள்ள பயத்தாலேயே சின்னம் முடக்கம், ஆனால் தேர்தல் முடிந்த பின் மீண்டும் எங்களுக்கு விவசாயி சின்னம் கிடைக்கும் எனவும், நாம் தமிழர் கட்சியைத் தவிர தமிழகத்தில் தனித்துத் தேர்தலை சந்திக்க யாருக்கும் துணிவு இல்லை எனவும் நெல்லை பிரச்சார பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

பிரச்சார பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு

திருநெல்வேலி: நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் நான்குமுனை பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் நெல்லை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் சத்யாவை ஆதரித்து, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நெல்லை மேலப்பாளையத்தில் நேற்று நடந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார்.

அப்போது பேசிய சீமான், "இத்தனை ஆண்டுகால ஆட்சியில் எந்த மாற்றத்தையும், எந்த முன்னேற்றத்தையும் மக்கள் சந்திக்கவில்லை. இந்த ஆட்சி சர்வாதிகார ஆட்சி என்று சொல்வதை விடக் கொடுங்கோலன் ஆட்சி என்றுதான் சொல்ல வேண்டும். ஊழல், லஞ்சம் மற்றும் கருப்புப் பணத்தை ஒழிக்க ரூ.1000 , ரூ.500 ஒழிக்கப்பட்டது என்றால், இத்தனை முதலாளிகள் வீட்டில் ஏன் அமலாக்கத் துறை சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

எதிரெதிரே ரயில் வருவதைக் கூட கவனிக்கத் தெரியாத அதிகாரிகள் உள்ளனர். வரியை மட்டுமே வசூலித்து எதையும் திருப்பி தராமல் இருந்தால், மக்களின் வாழ்க்கைத் தரம் எப்படி உயரும். தமிழ்நாட்டில் அனைத்து விலையும் உயர்ந்துவிட்டது. சொத்து வரி, மின் கட்டண உயர்வு உள்ளிட்ட அனைத்தும் கூடியதால், அத்தியாவசிய தேவைக்கான பொருட்கள் விலை உயர்ந்து மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பெட்ரோல், டீசல் உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. திமுக இஸ்லாமியர்களுக்கு என பாதுகாப்பு என நினைக்கிறார்கள். முதலில் இஸ்லாமியர்கள் சிறுபான்மை என்ற எண்ணத்தைப் போக்க வேண்டும். பெரும்பான்மை மக்களுக்கும், சிறுபான்மை மக்களுக்கும் ஒரே வரிதான். சிறுபான்மையினர் என்றால் சலுகை கிடைக்கும் எனச் சொல்கிறார்கள். இத்தனை ஆண்டுகளில் பிரதமராகவோ?, முதல்வராகவோ? எந்த சிறுபான்மையினரும் ஆனது கிடையாது.

ஆண்டு ஒன்றுக்கு 24 லட்சம் டன் மாட்டுக்கறியை இந்தியா வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. மாட்டுக்கறி ஏற்றுமதியால் இந்தியா அதிக வருவாய் ஈட்டுகிறது. ஆனால் கொடுமையான ஆட்சிப்போக்கு உள்ளது. இந்த ஆட்சியை திமுக எதிர்க்கும் அதிமுக எதிர்க்கும் என நம்புகிறார்கள். சின்னத்தை எடுத்துக் கொண்டாலும் வெறும் கையுடன் எதிர்த்து மோதுவோம். மதுரை ஏய்ம்ஸ் மருத்துவமனைக்குக் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் தான் அடிக்கல் நாட்டப்பட்டது. அவர்கள் ஆட்சிக் காலத்திலேயே அந்த மருத்துவமனையைக் கட்டி முடித்திருக்கலாம்?.

எடப்பாடியும், உதயநிதியும் படத்தை வைத்து படம் காட்டுகின்றனர். உங்கள் ஆட்சி சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்கத் துணிவு உள்ளதா?. தமிழ்நாட்டில் தனித்துப் போட்டியிட எந்த கட்சிக்கும் துணிவு இல்லை. எங்கள் மீது பயம் ஏற்பட்டதால் தான் சின்னத்தைத் தர மறுத்துவிட்டனர். 17 சதவீதம் வாக்குகள் பெற்றுவிடுவோம் என சர்வே சொல்லுகிறது.

இந்த தேர்தல் முடிந்த பின்னர் மீண்டும் விவசாயி சின்னம் எங்களுக்கு கிடைக்கும். பெரும் புரட்சியை இந்த உலகத்தில் விதைத்தவர்கள் அனைவரும் ஒலிவாங்கி மூலமே விதைத்தார்கள். ஒரே நாளில் உலகில் அனைவரிடமும் எங்களது சின்னம் கொண்டு செல்லப்பட்டுள்ளது. மேலும், திமுகவுக்கு வாக்களிக்காவிட்டால் பாஜக வந்து விடும் எனச் சொன்னார்கள். திமுகவுக்கு வாக்களித்தனர் இருந்தும் பாஜக வந்துவிட்டது. எனக்கு வாக்களித்தால் தான் பாஜக வராது" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் மீது நாதகவினர் தாக்குதல்? - கிருஷ்ணகிரியில் நடந்தது என்ன? - Krishnagiri Naam Tamilar Katchi

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.