ETV Bharat / state

விநாயகர் கோயில் கட்ட இஸ்லாமியர்கள் நிலதானம்.. கும்பாபிஷேகத்தில் அமோக வரவேற்பு அளித்த இந்துக்கள்! - Muslims donated land for hindus

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 26, 2024, 6:45 PM IST

Muslims donated land for hindus to build temple: திருப்பூர் அருகே விநாயகர் கோயில் கட்ட இஸ்லாமியர்கள் சார்பில் 3 சென்ட் நிலம் தானம் வழங்கியதோடு, அன்னதானமும் ஏற்பாடு செய்யப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீர்வரிசையுடன் வந்த இஸ்லாமியர்கள் மற்றும் பிள்ளையார் புகைப்படம்
சீர்வரிசையுடன் வந்த இஸ்லாமியர்கள் மற்றும் பிள்ளையார் புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

திருப்பூர்: மாற்று மதக் கோயில் கட்ட தேவையான நிலத்தை தானமாக வழங்கியதோடு, இன்று (மே 26) நடைபெற்ற கோயில் கும்பாபிஷேகத்திற்கு மேளதாளம் முழங்க சீர்வரிசை பொருட்களுடன் வந்த இஸ்லாமிய மக்களை இந்து மக்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர்.

கும்பாபிஷேக வீடியோ மற்றும் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

திருப்பூர் மாவட்டம், படியூர் அடுத்த ஓட்டப்பாளையம், ரோஸ் கார்டன் பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் இந்துக்கள், இஸ்லாமியர்கள் என அனைத்து சமுதாயத்தினரும் ஒன்றாக வசித்து வருகின்றனர். இந்நிலையில், இப்பகுதியில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த பள்ளிவாசல் உள்ளது. ஆனால், இந்து மக்கள் வழிபாடு செய்ய எந்த கோயிலும் இல்லாததால், இப்பகுதியில் விநாயகர் கோயில் ஒன்றை கட்ட வேண்டும் என மக்கள் எண்ணியுள்ளனர்.

இதற்கு போதுமான இடம் இல்லாத சூழ்நிலையால் தவித்து வருவதை அறிந்த இஸ்லாமியர்கள், அப்பகுதியில் உள்ள ஆர்.எம்.ஜே.ரோஸ் கார்டன் முஸ்லீம் ஜமாத் பள்ளிவாசலுக்குச் சொந்தமான ஆறு லட்சம் ரூபாய் மதிப்பிலான மூன்று சென்ட் நிலத்தை கோயில் கட்ட தானமாக வழங்கினர்.

இதனைத் தொடர்ந்து அந்த இடத்தில் கோயில் கட்டும் பணி நடைபெற்று தற்போது நிறைவடைந்துள்ளது. இன்று கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில், இஸ்லாமியர்கள் அவர்களது பள்ளிவாசலில் இருந்து, 7 தட்டுகளில் சீர்வரிசை பொருட்களை எடுத்துக் கொண்டு, மேளதாளம் முழங்க ஊர்வலமாக வந்து விநாயகர் கோயிலுக்கு வழங்கினர். அப்போது இஸ்லாமியர்களுக்கு இந்து மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மேலும், கோயில் விழாவில் அன்னதானம் செய்யவும் இஸ்லாமியர்கள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சாதி மதம் தாண்டி இந்துக் கோயில் கட்டுவதற்காக இஸ்லாமிய மக்கள் இடம் வழங்கியுள்ள சம்பவம் அப்பகுதியில் வசித்துவரும் மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: பரிசல் பயணம்.. சொட்டும் மீன் சுவை.. ஒகேனக்கலில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்! - HOGENAKKAL Falls

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.