ETV Bharat / state

2,200 ஆண்டுகளுக்கு முந்தைய செழித்தோங்கிய சமூகத்தின் சுவடுகள்.. கடையம் அகழாய்வில் தகவல்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 19, 2024, 3:34 PM IST

Archaeology dept students found before 2 thousand years people lived place near Kadayam
Archaeology dept students found before 2 thousand years people lived place near Kadayam

Archaeology places near kadayam: கடையம் அருகே சுமார் 2 ஆயிரத்து 200 ஆண்டுகளுக்கு முன்பு பண்பாட்டிலும், பொருளாதாரத்திலும் செழித்து விளங்கிய ஒரு சமூகம் வாழ்ந்த வாழ்விடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடையம் அருகே 2,200 ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்கள் வாழ்ந்த வாழ்விடம் கண்டுபிடிப்பு

தென்காசி: தென்காசி மாவட்டம், கடையத்தில் இருந்து ராமநதி அணைக்குச் செல்லும் பகுதியில் ஜம்புநதி ஆற்றங்கரையோரம் தட்டப்பாறை இடுகாடு என்ற இடம் உள்ளது. இங்கு கடந்த சில மாதங்களுக்கு முன் பள்ளங்கள் தோண்டும் போது, முதுமக்கள் தாழி உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கை எழுந்தது.

அதனையொட்டி, கடந்த வாரம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் மாணவி ஒருவர் ஆய்வு மேற்கொண்டு, சுமார் 2,200 ஆண்டுகளுக்கு முந்தைய ஈமத்தாழிகளைக் கொண்ட ஈமக்காட்டை கண்டுபிடித்துள்ளார். அதைத் தொடா்ந்து ஆய்வு செய்த பேராசிரியர்கள் முருகன் மற்றும் மதிவாணன், இந்த ஈமக்காட்டை ஒட்டி பண்டைய மக்களின் வாழ்விடம் இருக்கும் என கணித்தனர்.

அதனடிப்படையில், பேராசிரியர்களுடன் தொல்லியல் பட்ட மேற்படிப்பு படிக்கும் முதலாம் ஆண்டு மாணவர்களான பாலசண்முகசுந்தரம், முத்து அருள், இசக்கி, செல்வம் ஆகியோருடன் தொல்லியல் துறைத் தலைவரான (பொறுப்பு) பேராசிரியர் சுதாகரும் களப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.‌ அப்போது இந்த இடுகாட்டிலிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் 2,200 ஆண்டுகளுக்கு முற்பட்ட மக்களின் வாழ்விடம் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.

இந்த பகுதியின் மேற்பரப்பில் பழமையான உடைந்த கிண்ணங்கள், நொறுங்கிய பானைகள், உடைந்த நிலையில் கைப்பிடியுடன் கூடிய மூடிகள், வேலைப்பாடுடைய பானை வகைகள், தாங்கிகள், தட்டுகள் மற்றும் சட்டிகள் நிறைய சிதறிக் கிடக்கின்றன. உடைந்த பானை ஓடு கல்லை உரசிச் செய்த வட்டுகளையும் கண்டுபிடித்துள்ளனர். அதில் மிகச்சிறிய ஒரு தங்க வளையமும் அடங்கும்.

மேலும், இவர்கள் ஒரு தமிழி எழுத்தை தாங்கிய பானை ஓடு ஒன்றையும் கண்டுபிடித்துள்ளனர். இவற்றை எல்லாம் ஆய்வு செய்த தொல்லியல் பேராசிரியர்களான முருகன் மற்றும் மதிவாணன் பண்பாட்டிலும், பொருளாதாரத்திலும் செழித்து விளங்கிய ஒரு சமூகம் இந்த பகுதியில் 2,200 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்துள்ளனர் என்றும், மேலும் முறையாக ஆய்வு செய்தால் இதன் காலம் இன்னும் முன்னோக்கிச் செல்ல வாய்ப்புள்ளது எனத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: டெல்லிக்கு மீண்டும் அழைத்துச் செல்லப்பட்ட ஜாபர் சாதிக்; முக்கிய வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.