சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25ஆம் ஆண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க விரும்புவோர் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் மே 6ஆம் தேதி முதல் பதிவு செய்து வருகின்றனர்.
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க இயலாத மாணவர்களுக்கு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள சேர்க்கை உதவி மையங்கள் மூலம் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மையங்களின் பட்டியல் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் 044 – 24343106 / 24342911 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
இந்நிலையில் இளநிலைப் பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கு மே 6ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை 1 லட்சத்து 81 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். மேலும் மாணவர்கள் மே 20ஆம் தேதி வரையில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் அவர்கள் பதிவு செய்த ஒவ்வொரு கல்லூரிக்கும் தரவரிசைப் பட்டியல் மே 24 ஆம் தேதி அனுப்பப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து மே 28 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரையில் கல்லூரிகளில் மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், தேசிய மாணவர் படை, பாதுகாப்புப் படை வீரர்களின் வாரிசுகளுக்கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வு நடைபெறுகிறது.
கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர்வதற்கான முதல் சுற்றுக் கலந்தாய்வு ஜூன் 10 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரையிலும், 2ஆம் சுற்றுக் கலந்தாய்வு ஜூன் 24 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரையிலும் நடத்தப்படுகிறது. முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் ஜூலை 3 ஆம் தேதி துவங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வழி தவறிச் சென்ற அக்கா தம்பி.. 1 மணிநேரத்தில் மீட்ட மதுரவாயல் போலீசார்! - Child Missing In Maduravoyal