ETV Bharat / state

ராமநாதபுரத்தில் ஓபிஎஸ் பெயரில் நீளும் வேட்புமனு: நேரடியாக மோத திராணி இல்லாதவர்களின் தூண்டுதல் என வைத்திலிங்கம் சாடல்! - O Panneer selvam named candidates

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 27, 2024, 12:30 PM IST

Etv Bharat
Etv Bharat

Vaithilingam about OPS named candidates: ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் என்கிற பெயரை கொண்ட நபர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளது நேரடியாக மோத முடியாதவர்களின் தூண்டுதலே என்று ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் கூறியுள்ளார்.

வைத்திலிங்கம்

தஞ்சாவூர்: நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏழு கட்ட வாக்குப்பதிவுகளுடன் அடுத்த மாதம் 19ஆம் தேதி முதல் துவங்குகிறது. இத்தேர்தலில் முதல் கட்டமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி உட்பட 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளில் நடைபெற உள்ளது. அதேபோல் குமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதியில் சட்டமன்ற இடைத்தேர்தலும் நடைபெற உள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தில் திமுக, அதிமுக மற்றும் பாஜக தலைமையில் கூட்டணி அமைந்துள்ளது. மேலும் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. இதனை அடுத்து தமிழகத்தில் நான்கு முனை போட்டி நிலவுகிறது. இதனிடையே வேட்பாளர்கள் அவரவர்கள் போட்டியிடும் தொகுதியில் தேர்தல் பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பாஜக தலைமையில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில், தஞ்சை நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியில் செயல்வீரர்கள் கூட்டம் நேற்று (மார்ச் செவ்வாக்கிழமை) நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஒரத்தநாடு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், ஓபிஎஸ் ஆதரவாளருமான வைத்திலிங்கம் கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளுக்கு தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை வழங்கினார்.

அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய வைத்திலிங்கம், "நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் பெயரில் சிலர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இதனை யார் செய்திருப்பார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. நேருக்கு நேர் சந்திக்க திராணியற்ற கோழைகளின் தூண்டுதலின் பேரில்தான் அவர்கள் ஓ.பன்னீர்செல்வம் பெயரில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

ஆனால் ராமநாதபுரத்தில் ஓபிஎஸ் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுகிறார் என்று கேட்டவுடன் ஒவ்வொரு வாக்காளர்களும், அவரை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று நினைக்கின்றனர். அவர் என்ன சின்னத்தில் நிற்கின்றாரோ அந்த சின்னத்தில் வாக்களிப்பார்கள். குறைந்தது 1.5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்" என தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், "எப்படி ராமநாதபுரத்தில் ஓபிஎஸ்-ஐ வெற்றி பெற செய்வோம் என பாஜகவினர் உறுதிமொழி எடுத்திருக்கிறார்களோ, அதேபோல் பாஜக சார்பில் தஞ்சாவூர் மக்களவை தொகுதியில் வேட்பாளர் முருகானந்தத்தை வெற்றி பெற செய்ய நாங்களும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை சேர்ந்தவர்களும் உறுதி எடுத்துள்ளோம்" எனத் தெரிவித்தார்.

ஓபிஸ்-கான சின்னம் இதுவரை உறுதி செய்யப்படாத நிலையில், ஓ.பன்னீர்செல்வம் என்கிற பெயரிலேயே கூடுதலாக 5 பேர் சுயேச்சை வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். அந்தவகையில் தேனி மாவட்டம் உசிலம்பட்டி அடுத்த மேக்கிலார்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஓ.பன்னீர்செல்வம் என்பவரும் சுயேச்சையாக போட்டியிடுவதாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

அதேபோல் தெற்கு காட்டூரைச் சேர்ந்த ஒருவரும், மதுரை சோலை அழகுபுரத்தைச் சேர்ந்த நபரும், திருமங்கலத்தைச் சேர்ந்த ஒருவர் என இதுவரை ஓபிஎஸ் உட்பட 5 பேர் ராமநாதபுரம் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயரைக் கொண்ட நபர்கள் தங்கள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் மீண்டும் அதிமுகவில் இணைய மனு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.