ETV Bharat / state

"பொறுப்பு முதல்வரை நிரந்தர முதல்வராக மாற்ற வேண்டும்" - காமராசர் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள் கோரிக்கை! - MKU College Students protest

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 29, 2024, 4:32 PM IST

Updated : Apr 30, 2024, 7:10 AM IST

Madurai Kamaraj University Affiliated College
Madurai Kamaraj University Affiliated College

Madurai Kamaraj University Affiliated College: மதுரை காமராசர் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் உள்ள பொறுப்பு முதல்வரை மாற்றக்கூடாது என வலியுறுத்தி மாணவர்கள், பேராசிரியர்கள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர்.

Madurai Kamaraj University Affiliated College

மதுரை: மதுரை மாவட்டம், தல்லாகுளம் அருகில் மதுரை காமராசர் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி உள்ளது. இங்கு 4500 மாணவர்கள் பல்வேறு துறைகளில் பயில்கின்றனர். மேலும், நிரந்தரப் பேராசிரியர்கள் 24 பேரும், தொகுப்பு ஊதியத்தில் பணிபுரியும் கௌரவ விரிவுரையாளர்கள் 80 பேரும், தற்காலிக விரிவுரையாளர்கள் 20 பேரும் இங்குப் பணிபுரிந்து வருகின்றனர்.

முனைவர்.புவனேஸ்வரன் உறுப்புக் கல்லூரியின் பொறுப்பு முதல்வராகக் கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பணி செய்து வருகிறார். இந்நிலையில், தற்போது பொறுப்பு முதல்வராகப் பணியாற்றி வரும் புவனேஸ்வரனை மாற்றக்கூடாது எனவும், அவரை நிரந்தர முதல்வராக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி இன்று(ஏப்.29) பேராசிரியர்களும், மாணவர்களும் கல்லூரி வளாகத்திற்குள் இருப்பு போராட்டம் நடத்தினர்.

இதுகுறித்து கௌரவ விரிவுரையாளர் ராமர் கூறுகையில், "சிறப்புடன் செயல்பட்டு வரும் கல்லூரி முதல்வர் புவனேஸ்வரனுக்கு இங்குள்ள சில பேராசிரியர்கள் தொடர்ந்து இடையூறு செய்து வருகின்றனர். இங்குப் பணியாற்றும் நிரந்தரம் அல்லாத பேராசிரியர்களுக்கு ஈபிஎஃப் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் கிடைக்க உறுதுணையாக இருந்தார்.

படிக்கின்ற மாணவர்களின் நலன் கருதி பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்து செயல்படுத்தியவர். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் மற்றொரு உறுப்புக் கல்லூரியாகத் திகழ்ந்த திருமங்கலம் கல்லூரியில் முதல்வராகப் பொறுப்பேற்று, சிறப்புடன் அதனைச் செயல்படுத்திக் காட்டியவர். அவரை மீண்டும் அங்கே முதல்வராகப் பணியில் அமர அங்குள்ள பேராசிரியர்களும், மாணவர்களும் இன்று வரை வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். ஆனால் தற்போது அந்தக் கல்லூரி அரசு கல்லூரியாக மாற்றம் பெற்று விட்டது.

பல்வேறு சிக்கல்களைத் தவிர்த்து இந்தக் கல்லூரிக்குக் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகப் பொறுப்பில் வந்து அமர்ந்தார். அப்போதிலிருந்து மிகச் சிறப்பான முறையில் பணியாற்றி கல்லூரியைப் பல்வேறு வகையிலும் மேம்படுத்தினார்.

இந்தக் கல்லூரியில் உள்ள தொல்காப்பியர் அரங்கம் மிக நவீனப்படுத்தப்பட்டு அங்குத் தற்போது பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. அவ்வாறு சிறப்புடன் இயங்கி வந்த முதல்வரை இங்குள்ள சில பேராசிரியர்கள் தொடர்ந்து அவரை இயங்கவிடாமல் இடையூறு செய்து வருகின்றனர்.

இந்த மன உளைச்சல் காரணமாகத் தனது பணி விலகல் கடிதத்தை அவர் அளித்துள்ளார். இது புற நிர்ப்பந்தம் காரணமாக நடைபெற்றதாகும். ஆகையால், முதல்வர் புவனேஸ்வரனை பொறுப்பு முதல்வர் பதவியிலிருந்து நிரந்தர முதல்வராகப் பணியமர்த்தம் செய்ய வேண்டும்.

அவர் பணியிலிருந்து விலகுவதற்கான எந்த நிர்ப்பந்தமும், யாராலும் செய்யப்படக்கூடாது எனக் கோரிக்கை விடுக்கிறோம். இதற்குப் பல்கலைக்கழக நிர்வாகம் செவிமடுக்க வேண்டும் அவ்வாறு இல்லையேல் நாங்கள் துணைவேந்தர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, மாணவர்களும், பேராசிரியர்களும் போராடுவோம்" என்றார்.

இதுகுறித்து, கல்லூரி முதல்வர் புவனேஸ்வரனிடம் கேட்டபோது, "யாருடைய நிர்ப்பந்தத்தின் பெயரிலும் நான் பணிவிலகல் கடிதத்தைக் கொடுக்கவில்லை. எனது சொந்த விருப்பத்தின் பேரில் தான் ஓய்வு பெறும் முடிவை எடுத்துள்ளேன்" என்று கூறினார்.

இதையும் படிங்க: கோயில் தேர் சக்கரத்தில் சிக்கி மூவர் பலி; கர்நாடகாவில் நிகழ்ந்த சோகம்! - Karnataka Chariot Tragedy

Last Updated :Apr 30, 2024, 7:10 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.