ETV Bharat / state

ஸ்பெயின் பயணம் மூலம் தமிழகத்திற்கான முதலீடு?, விஜய் அரசியல் வருகை குறித்து முதலமைச்சர் பதில்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 7, 2024, 11:15 AM IST

Updated : Feb 7, 2024, 7:40 PM IST

Etv Bharat
Etv Bharat

MK Stalin: ஸ்பெயின் நாட்டின் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் ரூ.3,440 கோடி புதிய தொழில் முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சென்னை திரும்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மு.க.ஸ்டாலின் செய்தியாளர்கள் சந்திப்பு

சென்னை: ஸ்பெயின் நாட்டில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (பிப்.7) சென்னை திரும்பினார். தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'உங்கள் வாழ்த்துகளை எல்லாம் பெற்று ஸ்பெயின் நாட்டுக்குச் சென்ற நான் தமிழ்நாட்டுக்குப் பல முதலீடுகளை ஈர்த்துவிட்டு திரும்பியுள்ளேன்.

தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அரசு முறைப் பயணமாக ஸ்பெயின் நாட்டுக்கு கடந்த ஜன.29-ல் சென்று அந்நாட்டின் முன்னணி தொழில் நிறுவனங்களின் நிர்வாகிகள் பங்கேற்ற முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்றேன்.

ஸ்பெயின் நாட்டின் பொருளாதாரம் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சக அதிகாரிகள் ஸ்பெயின் தொழில் கூட்டமைப்பு பொறுப்பாளர்கள், இன்வெஸ்ட் ஸ்பெயின் (Invest Spain) என்ற அமைப்பைச் சேர்ந்தவர்களை சந்தித்தேன். தமிழ்நாட்டில், தொழில் தொடங்குவதற்கு இருக்கக் கூடிய உகந்த சூழல் பற்றி அங்கே எடுத்துச் சொல்லி, நம்முடைய மாநிலத்தில் முதலீடுகளை மேற்கொள்ளவேண்டும் என்று நான் வலியுறுத்தினேன்.

இதன் தொடர்ச்சியாக, அடுத்தடுத்த நாட்களில் ஸ்பெயின் நாட்டின் முன்னணி நிறுவனங்களுடைய நிர்வாகிகளை தனித்தனியாக நேரில் சந்தித்து கலந்துரையாடினேன். தமிழ்நாட்டில் முதலீடு செய்யவேண்டும் என்று அவர்களிடம் கேட்டுக்கொண்டேன். சில முக்கிய நிறுவனங்களின் பெயர்களை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.

  • காற்றாலை மின் உற்பத்தியிலும், நீர் மறுசுழற்சியிலும் முன்னணி நிறுவனமான 'ஆக்சியானா' நிறுவனம்
  • உயர்தர வீட்டுக் கட்டுமான பொருட்களின் உற்பத்தியிலும், பீங்கான் பொருட்கள் உற்பத்தியிலும் உலகின் முன்னணி நிறுவனமான 'ரோக்கா' நிறுவனம்
  • கண்டெய்னர் முனையங்கள் மற்றும் சரக்கு பூங்காக்களை அமைப்பதில் சிறந்த நிறுவனமான ஹபக்-லாய்டு நிறுவனம்
  • சர்வதேச தரத்தில் சாலை கட்டமைப்பு வசதிகளை அமைக்கக்கூடிய 'அபர்ட்டிஸ்' நிறுவனம்
  • மோட்டார் வாகன உதிரிப் பாகங்கள் உற்பத்தியில் உலகின் முன்னணி நிறுவனமாக இருக்கின்ற கெஸ்டாம்ப் நிறுவனம்
  • ரயில்வே சார்ந்த உற்பத்தி தொழிலில் உயர் தொழில்நுட்பத்துடன் செயல்படக்கூடிய 'டால்கோ' நிறுவனம்
  • பொறியியல் வடிவமைப்பு மற்றும் பொறியியல் கல்வித் திறன் பயிற்சிக்கான நவீன கருவிகளை உற்பத்தி செய்கின்ற 'எடிபான்' நிறுவனம்
  • உயிரியல் ஆராய்ச்சி மற்றும் மருந்து உற்பத்தி நிறுவனமான 'மேப்ட்ரீ' நிறுவனம் ஆகிய நிறுவனங்களின் நிர்வாகிகளை எல்லாம் நான் சந்தித்தேன். இந்த நிறுவனங்களின் நிர்வாகிகள் எல்லோரும் தங்களுடைய தொழில் திட்டங்களையும் விளக்கியும் தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு தங்களுடைய ஆர்வத்தையும் தெரிவித்தனர்.

இந்த முயற்சிகளின் பயனாக, ரூ.3,440 கோடி அளவுக்கு முதலீடுகள் செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். ஹபக்-லாய்டு நிறுவனம் ரூ.2,500 கோடிக்கும், எடிபான் நிறுவனம் ரூ.540 கோடிக்கும், ரோக்கா நிறுவனமும் ரூ.400 கோடிக்கும் முதலீடு செய்வதாக உறுதியளித்துள்ளன.

இதேபோல, மற்ற நிறுவனங்களும் எதிர்காலத்தில் தங்களுடைய முதலீடு செய்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. தமிழ்நாடு அரசு குறித்து உலகளாவிய தொழில் நிறுவனங்களுக்கு உள்ள நம்பிக்கையை இது காட்டுகிறது. தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியையும், தமிழ்நாட்டின் பொருளாதார மேம்பாட்டையும் புகழ்ந்து உலக அளவில் முக்கியப் பத்திரிகையான பிரபல ஆங்கிர்ல பத்திரிக்கை வெளியிட்ட செய்தியை அனைவரும் படித்திருப்பீர்கள்.

உற்பத்தித் துறையில் சீனாவுக்கு மாற்றாக, 'இந்தியா' கருதப்பட்டு வரும் வேளையில் அந்த உற்பத்தித் துறையில் முந்திச் செயல்படும் மாநிலமாக 'தமிழ்நாடு' முன்னேறி வருவதையும், பெரும்பாலான வேலைவாய்ப்பை ஏற்படுத்தக்கூடிய முதலீடுகள் பல தமிழ்நாட்டில் கடந்த 2 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டு உள்ளதையும் அச்செய்தி சுட்டிக்காட்டியுள்ளது.

இந்தியா பயணிக்கக்கூடிய பாதையில் முந்தி பயணிப்பது மட்டுமல்ல, தமிழ்நாடு தனக்கென்று தனிப்பாதை ஒன்றை வகுத்து செயல்பட்டு வருவதாகவும்; முதல் பக்கத்தில் பிரபல ஆங்கில பத்திரிகையில் வெளியிட்டிருக்கிறது, அதை பாராட்டியும் இருக்கிறது. இதுபோன்ற பாராட்டுகள்தான் எங்களை மேலும் உற்சாகப்படுத்துகிறது. தமிழ்நாட்டை தொழில்துறையில் தலைசிறந்த மாநிலமாக உயர்த்தும் எங்கள் பயணத்துக்கு ஸ்பெயின் பயணம் மிகமிக பயனுள்ளதாக அமைந்தது. இதுபோல, அடுத்தடுத்த பயணங்கள் திட்டமிடப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், செய்தியாளர்களின் பல கேள்விகளுக்கு பின்வருமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துள்ளார். அவையாவன:-

கேள்வி: தற்போது நீங்கள் வெளிநாடுகளில் பயணம் மேற்கொண்டு வரும்போது முதலீடுகள் அதிகளவு ஈர்க்கப்படுகிறது. இதற்கு அடுத்த கட்டமாக முதலீடுகளை ஈர்ப்பதற்காக, வேறு நாடுகளுக்கு செல்ல வாய்ப்பிருக்கிறதா?

பதில்: திட்டமிடும்போது உங்களிடம் சொல்லிவிட்டு செய்கிறேன். 2024 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால், அதற்குப் பின்தான் என்னுடைய பயணங்கள் இருக்கும்.

கேள்வி: நாடாளுமன்றத்தில் பிரதமர் உரை நிகழ்த்தியிருக்கிறார். பல்வேறு கருத்துக்களை தெரிவித்திருக்கிறார். அது தொடர்பாக, அந்த நிகழ்வுகளை எல்லாம் நீங்கள் பார்த்தீர்களா?

பதில்: பார்த்தேன் படித்தேன். ரசித்தேன். சிரித்தேன். ஏனென்றால், பாஜக தான் எதிர்க்கட்சி போலவும், காங்கிரஸ் ஆளுங்கட்சி போலவும், அவர் தொடர்ந்து ஆட்சிக்கு வந்ததிலிருந்து எதிர்க்கட்சியாக அவர் செயல்பட்டுக் கொண்டு ஆளுங்கட்சியாக காங்கிரஸ் இருப்பது போல அட்டாக் (Attack) செய்வது போலவும் பேசிக் கொண்டிருக்கிறார். இதுதான் புரியாத புதிராக இருக்கிறது.

கேள்வி: பிரதமர் மோடி, 400 இடங்களை நாடாளுமன்ற தேர்தலில் கைப்பற்றுவோம் என்று சொல்லி இருக்கிறார்? அதுபற்றிய தங்களது கருத்து என்ன?

பதில்: மொத்தம் 400 தானா? 543 இடங்கள் இருக்கின்றன. அதையும் கைப்பற்றுவேன் என்று சொன்னாலும் ஆச்சரியம் இல்லை.

கேள்வி: நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கி இருக்கிறார்? எப்படி பார்க்கிறீர்கள்.

பதில்: மக்களுக்குத் தொண்டாற்ற யார் வந்தாலும் நான் மகிழ்ச்சி அடைவேன் எனப் பேசினார்.

இதையும் படிங்க: TR Balu Vs L.Murugan... நாடாளுமன்றத்தில் நடந்தது என்ன? அன்ஃபிட் அரசியல் - எதிரொலிக்க என்ன காரணம்?

Last Updated :Feb 7, 2024, 7:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.