ETV Bharat / state

'பாஜக எனும் பேரழிவு..அரசியல் சட்டத்தை மாற்றத் துடிக்கிறது..அம்பேத்கர் எனும் அறிவாயுதம்' - மு.க.ஸ்டாலின் - Ambedkar Jayanti

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 14, 2024, 1:25 PM IST

MK Stalin tribute to BR Ambedkar
MK Stalin tribute to BR Ambedkar

MK Stalin tribute to BR Ambedkar: சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் அம்பேத்கரின் புகைப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி, "சமத்துவ நாள்" உறுதிமொழி ஏற்றார்.

சென்னை: இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் தந்தை அண்ணல் அம்பேத்கரின் பிறந்த தினமான இன்று (ஏப்.14) நாடுமுழுவதும் அம்பேத்கர் ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு நாட்டில் பல்வேறு பகுதிகளில் உள்ள அம்பேத்கரின் திருவுருவச் சிலைக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.

அந்தவகையில் தமிழக முதலமைச்சரும், திமுகவின் தலைவருமான மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் அமைக்கப்பட்டிருந்த அம்பேத்கரின் புகைப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி, "சமத்துவ நாள்" உறுதி மொழி ஏற்றுக் கொண்டார்.

மேலும், தனது சமூக வலைத்தள பக்கத்தில் அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட்டுள்ள பதிவில், "இந்திய வரலாற்றில் மிக முக்கியமான தேர்தலை நாடு சந்தித்துக் கொண்டிருக்கிறது. புரட்சியாளர் அம்பேத்கர் ஏற்றிவைத்த அரசியல் சட்டம் எனும் ஒளியைச் சுடர் மங்காமல் பாதுகாக்க வேண்டியது நாட்டு மக்கள் அனைவரது கடமை. பாஜக எனும் பேரழிவு, அரசியல் சட்டத்தை மாற்றத் துடிக்கிறது.

நாட்டை இருநூறு ஆண்டுகள் பின்னோக்கி இழுத்துச் செல்ல கோரப் பசியுடன் திட்டங்கள் தீட்டி வருகிறது. சமத்துவச் சமுதாயத்தை உறுதி செய்யப் புத்துலக புத்தர் புரட்சியாளர் அம்பேத்கரின் அறிவாயுதத்தைத் துணை கொள்வோம்" என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டிருந்தார்.

முன்னதாக, சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பகுதியில் உள்ள அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபத்தில் உள்ள திருவுருவச் சிலை மற்றும் அதன் அருகில் வைக்கப்பட்டிருந்த அம்பேத்கரின் புகைப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அப்போது, திமுக மூத்த உறுப்பினர்கள், அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

மேலும், சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, செய்தி தொடர்பு இணைச் செயலாளர் தமிழன் பிரசன்னா தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வபெருந்தகை உட்பட கூட்டணி கட்சியினர் மற்றும் கூட்டனி கட்சி நிர்வாகிகள், துரை சார்ந்த அதிகாரிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: "அரசியலமைப்புச் சட்டத்தை அனைவரும் பாதுகாப்போம்" - அமைச்சர் பொன்முடி உறுதி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.