சென்னை: போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக முன்னாள் திமுக நிர்வாகி ஜாஃபர் சாதிக் கைது செய்யப்பட்டது தொடர்பாக, கடந்த 8ஆம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இந்த விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தொடர்புப்படுத்தி பேசியிருந்தார்.
இதேபோல் இந்த விவகாரம் தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தொடர்புப்படுத்தி, தனது X சமூக வலைத்தள பக்கத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வீடியோ வெளியிட்டு பேசியிருந்தார். இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தரப்பில் சென்னை மாநகர குற்றவியல் வழக்கறிஞர் ஜி.தேவராஜன், சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இருவருக்கும் எதிராக அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
அதில், "தமிழகத்தில் போதைப்பொருளை ஒழிக்க முதலமைச்சர் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், போதைப்பொருள் தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருவதாகவும், முதலமைச்சரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதாகக் கூறி எடப்பாடி பழனிசாமி மற்றும் அண்ணாமலை மீதும் கிரிமினல் அவதூறு பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை" வைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: "திமுக கூட்டணியில் தொகுதி பங்கீட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும்" - மமக தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தல்!